நிலாவும் பாரதப் பண்பாடும்
காலம் காலமாகத் தமிழர்கள் நிலாவை மிகவும் விரும்பி உள்ளனர்.
சங்க கால இலக்கியங்கள் முதல் இக்கால ஹைக்கூ கவிதைகள், நாடகங்கள், திரைப்பாடல்கள், கதைகள் என அனைத்திலும் பலவாறு வான் நிலாவை நம் மக்கள் புகழ்ந்தும், வர்ணித்தும் உள்ளனர்.
பூரண நிலவைப் பற்றி வள்ளல் பாரியின் இரு மகள்களும் அழகாகப் பாடியுள்ளனர்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ”நிலாவின் குளிர்ச்சி போல் அரசனின் அன்பும் இருக்கிறது” என்று புகழ்வார்.
மக்கள் நிலாவை உரிய காலத்தில் வணங்கவும் செய்கிறார்கள்.
ஒவ்வொரு பெளர்ணமி நாளையும் பூரண ஞானத்தின் அடையாளமாக மக்கள் மதிப்பர்.
புத்தர் கயாவில் போதி மரத்தின் கீழ் தவம் செய்து, வாழ்க்கையைப் பற்றிய உண்மையை உணர்ந்த நாள் பூரண நிலா நாள் ஆகும்.அதையே புத்த பூர்ணிமா என்கிறோம்.
கார்த்திகைப் பூர்ணிமை நாளில் காசியில் கங்கை நதியை மரியாதை செய்யும் தேவ தீபாவளி மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழகத்தில் கார்த்திகைப் பூர்ணிமை நாளில் தீபத்திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
சோழர்களின் தலைநகரான பூம்புகாரில் நிலாவை வணங்கும் தனிக்கோயில் இருந்துள்ளது.
இன்று கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திங்களூர் நிலாவை தேவதையாக வணங்கும் ஸ்தலம் ஆகும்.
தமிழகர்கள் மிகச் சிறப்பாகச் சித்திரை மாதத்தில் வரும் பூர்ணிமை நாளைக் கொண்டாடுவர்.
அந்நாளில் குலதெய்வ வழிபாடுகள் செய்வர்.
விதவிதமான உணவு வகைகள் சமைத்து, நிலாவுக்குப் படைத்து இரவில் நிலவொளியின் கீழ் அனைவரும் ஒன்று கூடி நிலாச்சோறு உண்டு மகிழ்வர்.
மதுரை மாநகரின் சித்திரை மாதத்தில் நடக்கும் விழா மிகவும் சிறப்பானது ஆகும்.சித்திரைப் பூர்ணிமா நாளில் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி மதுரை முழுவதும் உலா வரும் விழா மிகவும் சிறப்பானது.பல லட்சம் மக்கள் இவ்விழாவைக் கண்டு மகிழ்வர்.
சித்திரைப் பூர்ணிமா நாளில் பல கிராமங்களிலும் கிராம தேவதைகளுக்கும் கொடை விழா நிகழும்.
பழங்காலத்தில் சோழ மன்னர்களும் மக்களும் பூம்புகாரில் சித்திரை மாதத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு விழா எடுத்து மகிழ்வர்.சித்திரைப் பூர்ணிமை நாளில் விழாவை முடித்துக் கடலில் நீராடுவர்.
சித்திரைப் பூர்ணிமை நாள் அன்று கேரளம் - தமிழகம் எல்லையில் உள்ள குமுளி மலை உச்சியின் மீது சேர மன்னன் கண்ணகிக்கு எழுப்பிய பத்தினி கோட்டத்துக்குச் செல்வர், கண்ணகியை வழிபடுவர்.
சித்திரைப் பூர்ணிமை நாளில் நாம் செய்யும் பாவ-புண்ணியங்களைக் கணக்கிடும் ப்ரபஞ்ச சக்தியான சித்திர குப்தனுக்கும் காஞ்சிபுரத்தில் மிக விசேஷமாக விழா எடுப்பர்.
சந்திர க்ரஹணம் அன்றும் மக்கள் நீர்நிலைகளில் நீராடுவர்.
மிகப் பெரிய கோயில்களில் பத்து நாள் விழாவில் இறைவன் சந்திரன் வாஹனம் ஏறி வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.