Shyama Sasthrigal - ஸ்யாமா சாஸ்த்ரிகள்

ஒரு சமயம் பெரியதொரு கொள்ளைக்காரக் கூட்டம் காஞ்சிபுரத்தைச் சூறையாட வரும் போது, காஞ்சிபுர காமாக்ஷியின் உற்சவ விக்ரஹமான தங்க விக்ரஹ காமாக்ஷி ”பங்காரு காமாக்ஷி” காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் சில அர்ச்ச கூட்டத்தினர், அவ்விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு தஞ்சாவூருக்குத் தஞ்சம் புகுந்தனர்.

தஞ்சை மராட்டிய மன்னர்கள் அவ்விக்ரஹத்தை பத்திரப்படுத்த சங்கல்பம் செய்து கொண்டு கோயில் எழுப்பி அம்பிகையை ப்ரதிஷ்ட்டை செய்தனர்.சில தெலுங்கு அந்தணர்க் குடும்பங்களும் பூஜைக்கு அமர்த்தப்பட்டனர்.

அக்குடும்பப் பரம்பரையில் திருவாரூரில் பிறந்தவர் தான் ஸ்யாமா க்ருஷ்ணன் எனப்படும் ஸ்யாமா சாஸ்த்ரிகள். இவரது கீர்த்தனைகளில் ஸ்யாம க்ருஷ்ண என்பதே இவரது முத்திரை ஆகும்.இவரது அப்பா விஸ்வநாதன், தாய் - வெங்கலக்ஷ்மி அம்மையார். திருவாரூரில் இவரது வீடு கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது. இவர் 26.4.1762ஆம் ஆண்டு பிறந்தார். 6.3.1827ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் தன் தந்தையிடமே சங்கீதம் கற்ற இவர், தாய் வழி உறவுக்காரர் மூலம் உயர்நிலை சங்கீதப் பாடங்களைப் பிற்காலத்தில் கற்றார்.தமிழ், தெலுங்கு மற்றும் வடமொழிகளையும் கற்றார்.

இவரது 18ஆம் வயதில் தான் தஞ்சாவூருக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது.அப்போது சங்கீதஸ்வாமி என்ற ஒரு இசை மேதையும் யோகியும் இவரது குடும்பத்துக்குப் பழக்கம் ஆக, அவர் மூலம் பல ஆன்மீக உபதேசங்களையும் சங்கீத இலக்கணங்களையும் இவர் கற்றுக் கொண்டார்.

தஞ்சாவூர் அரசபையில் ப்ரஸித்தி பெற்ற இசைக் கலைஞர் ஆதியப்ப ஐயா.இவர் குறிப்பாக பைரவி ராகத்தினைப் பாடுவதில் மிகவும் சிறந்தவர்.இவரின் அன்பையும் அரவணைப்பையும் கொண்டு ஸ்யாமா சாஸ்த்ரிகள் பல இசை நுட்பங்களைக் கற்றார்.தஞ்சாவூர் சபையிலும் மெதுவாக இவருக்கு உயர் மதியாதை உண்டானது.

ஸ்ரீத்யாகராஜர் இவரது தேவி பக்தியை மிகவும் மதித்துள்ளார்.அடிக்கடி இருவரும் சந்தித்துத் தங்கள் ஆன்மீக அனுபவங்களையும் புதிய கீர்த்தனைப் படைப்புகள் பற்றியும் பேசியுள்ளனர்.

Tanjavur SriBangaru Kamakshi Amman

புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, காஞ்சி ஆகிய ஊர்களில் உள்ள அம்பிகைகளை இவர் தன் கீர்த்தனைகளால் போற்றினார்.

ஒருமுறை பொப்பிலி என்ற ஊரில் இருந்து வந்த கேசவய்யா என்ற கலைஞரிடம் அரசவைக் கலைஞர் தோற்றக்கூடாது என்று ப்ரார்த்தித்து, போட்டி நிகழும் காலத்தில் இவர் ”தேவி ப்ரோவ” என்ற அழகிய கீர்த்தனையை அருளினார், தஞ்சைக் கலைஞருக்கே வெற்றி கிட்டியதாம்.

ஸ்ரீலலிதா த்ரிசதியை ஆனந்த பைரவி ராக ஆலாபனையில் அர்ச்சிப்பது இவரது பூஜை அழகாம்.இவரது பூஜைக் கட்டளை வேளையில் கூட்டம் அதைக் கேட்டவே கூடுமாம்.

மேலும் நாகப்பட்டிணத்தில் தன் இசைத்திறனால் பலரையும் அவமதித்து வந்த அப்புக்குட்டி என்ற நாட்டிய-இசை மேதையை இவர் ஒரு போட்டியில் வெற்றி கண்டார்.அன்று முதல் அவர் தம்பூராவைத் தொடுவதையே விட்டு விட்டாராம்.

மும்மூர்த்திகளில் இவரே மூத்தவர்.த்யாகராஜர் மீது பக்தி கலந்த மரியாதை

Thiruvaaroor Home – birth place

கொண்டு இருந்தார்.முத்துசாமி தீக்ஷிதரும் இவரும் தோழர்கள், அடிக்கடி சந்தித்து சத்சங்கம் வைத்துக் கொண்டுள்ளனர்.

இவர் தாம்பூலம் தரித்துக் கொள்வதில் மிக்க ஈடுபாடு உடையவர்.அலங்காரப் ப்ரியர். ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே இறைவனை எண்ணி எண்ணிப் பாடல்களைப் பாடுவது வழக்கம்.

இவர் காமாக்ஷியையே அதிகம் தெலுங்கு, வடமொழி மற்றும் தமிழில் பாடினார்.மிக்க கன ராகங்களையும் ஸ்வர ஜதிகளையும் பயன்படுத்தினார்.”தாய்-மகன்” பக்தி பாவனையில் அன்னை பராசக்தி மீது இவரது கீர்த்தனைகள் அமைகின்றன.

மதுரை மீனாக்ஷிக்கு நவரத்னமாலை...

மதுரை மீனாக்ஷி மீது ”நவரத்ன மாலிகா” என்ற மிக அத்புதமான 9 கீர்த்தனைகள் இவரது மொழி ஆளுமையையும், பாவ பக்தியையும், சங்கீதப் புலமையையும் காட்டும்.அக்காலத்தில் இவரை ”தாள ப்ரஸ்த ஸ்யாம க்ருஷ்ணன்” என்று அழைப்பர்.

மனைவியே தெய்வம்...

தன் மனைவியை மிக்க அன்புடனும் மரியாதையுடனும் நடத்தியவர்.அவர் இறந்த 16ஆம் நாள் இவரும் காரியங்களை முடித்து இறைவனடி சேர்ந்தார்.

சுமார் 300 கீர்த்தனைகள் பாடியுள்ளார் என்று கூறப்படினும் பல கிடைக்கவில்லை.இவரது கீர்த்தனைகள் நீண்டவை.

வாரிசுகள்

இவரது மூத்த மகன் பஞ்சு. இவர் பங்காரு காமாக்ஷியைப் பூஜித்தவர்.இவரது மகன் ஸ்ரீத்யாகராஜரிடம் இசை பயின்றார். அவர் பெயர் சுப்பைய சாஸ்த்ரி [1803 - 1862]. ப்ரஸிபெற்ற வீணை தனம்மாளின் அன்னை இவரது மாணவி ஆவார்.