திருவோணம்
பாரத தேசத்தில் மிகவும் அழகு நிறைந்த மாநிலங்களுள் ஒன்று கேரளா.
கேரளா பழங்காலத்தில் ”சேர நாடு” எனப்பட்டது.அங்கு பேசப்பட்ட கொடுந்தமிழே இன்றைய மலையாளம் ஆகும்.
கேரளத்தில் மலைகளும், வயல்களும், ஆறுகளும், உப்பங்கழிகளும், கடற்கரையும் அழகு சேர்க்கும்.
கேர மரம் - அதாவது ”தென்னை மரங்களின் பூமி” என்பதே ’கேரளம” என்று வழங்கப்படுகிறது.
கேரளாவின் மிக முக்கியமான திருவிழா ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் ஆகும்.
அதுவே அங்கு அறுவடை விழாவாகும்.
ஓணம் மஹாவிஷ்ணுவின் திருநாள் ஆகும்.
திருவோணம் பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
திருக்காட்கரை என்ற ஊரிலேயே மிகப் பெரிய ஓணப்பூக் கோலம் வரையப்படுகிறது.
மஹாவிஷ்ணு மஹாபலியின் ஆணவத்தை அடக்கிட வாமன மூர்த்தியாக வந்த புராண நிகழ்ச்சியே ஓணம் ஆகும்.
மஹாபலி ஓணம் அன்று ஒவ்வொருவரின் வீட்டிற்கும் வருவதாக ஐதீஹம்.
பூக்கோலம் வரைந்து, விளக்கு ஏற்றி, பாடல்கள் பாடி ஓணம் தொடங்கும்.
வெளியூரிலும் வெளி தேசத்திலும் வாழும் மலையாள மக்கள் ஓணம் காலத்தில் தன் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவர்.
அன்று மிக அருமையான சமையல் செய்வர்.குறிப்பாக ஓணப் பாயாஸம் மிகவும் சிறப்பானதாகும்.ஓண விருந்தை ”ஓண சதயா” என்பர்.
பள்ளிகள், கல்லூரிகள், பொதுவிடங்கள் எங்கும் ஓணப்பூக்கோலம் இட்டு மகிழ்வர்.
ஆரண்முழா ஆற்றில் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் நிகழும்.
கதக்களி, மோகினி ஆட்டம், சாக்கியர் கூத்து போன்ற அழகிய நடனங்கள் ஆடப்படும்.
புத்தாடை, ஓண சதயா, ஓணக் கைக் காசு ஆகியவற்றை ஏழைகளுக்கு மக்கள் தருவர்.
சாதி மதம் வேறுபாடு இன்றி ஓணம் கொண்டாடப்படும்.
கேரளாவை ஒட்டிய தமிழகத்துப் பகுதிகளான கோவை, தேனி, கம்பம், நாகர்கோவில், கன்யாகுமரிப் பகுதிகளிலும் ஓணம் கொண்டாடப்படும்.
பூக்களைப் போன்ற மென்மையான குணம் மனதில் வர வேண்டும்.
மஹாபலியைப் போல் ஆணவம் இல்லாமல் வாழ வேண்டும்.
இருப்பதை வைத்துத் திருப்தி கொள்ள வேண்டும் என்பதையே ஓணம் உணர்த்துகிறது.
தமிழகத்தில் ஓணம் அன்று பெருமாள் கோயில்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.
பழங்காலத்தில் ஓணம் நாளில் மதுரையில் யானைச் சண்டைகள் நடத்தினர் என்று வரலாறு கூறுகிறது.
”மூன்று அடி நிலத்தால் திருப்தி அடையாதவன் மூன்று உலகங்களைக் கொடுத்தாலும் திருப்தி அடையவே மாட்டான்!” என்பதே வாமனன் மஹாபலிக்கும் நமக்கும் கூறும் அறிவுரை ஆகும்.
திருவோண வாழ்த்துகள்!