A king who loved his society like a mother - Nandhi Verma Pallava 3rd.

Sakthi Foundation

மூன்றாம் நந்தி வர்ம பல்லவன் [கி.பி 847 - 872 ஆட்சிக்காலம்]

பல்லவ மன்னர்களில் புகழ் பெற்ற பலருள் ஒருவன் மூன்றாம் நந்தி வர்ம பல்லவன்.

இவனும் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.

இவன் 63 சிவ பக்தர்களான நாயன்மார்களில் ஒருவராக மதிக்கப் படும் அளவுக்கு உண்மையான பக்தி, சமூஹ சேவை, மக்கள் நலம் ஆகியவற்றில் கவனம் கொண்டான்.

இவன் காலத்தில் பல ஆன்மீக அன்பர்களும் வாழ்ந்தனர்.

இவனுடைய தந்தை தந்தி வர்ம பல்லவன், தாய் அக்கள நிம்மதி.

தாயையும் தந்தையையும் சிவபார்வதியாகவே பாவித்து, அவருள் இருக்கும் தெய்வீகத்தை மதித்தவன் இம்மன்னன்.

”முப்புரம் எரித்த சிவனுக்குப் பார்வதி மனைவியானது போல, தந்தி வர்மனுக்கு மனைவியானாள் அக்கள நிம்மதி.

விடியற்காலையில் சூரியன் உலகிற்கு ஒளியை வாரி வழங்குவது போல, சிவனுக்குப் பார்வதி அழகிய சக்திவேலை உடைய முருகனைத் தநத்து போல், இந்திரனுக்கு அவன் மனைவி சசி தேவி ஜெயந்தனைப் பெற்றதைப் போல் அக்களை நந்தி வர்மனை உலகின் நலனுக்குப் பெற்றாள்” என்று வேலூர்ப்பளையம் செப்பேடு [copper plate inscriptions] கூறும்.

ஊருக்கு ஏற்ற பிள்ளை..

தாயும் தந்தையும் நல்லதொரு குழந்தையை உலகிற்குப் படைத்து அதன் மூலம் சமூஹ நலனைக் காக்க வேண்டும் என்பதே கந்தபுராணம்.அதை உணர்த்தும் இல்லற ஸ்தலமே காஞ்சிபுரம்.அவ்வூரின் மன்னன் உலகிற்கு நம்மை செய்தான்.பெயருக்கு ஏற்ப அவன் அன்னை நிம்மதி கொண்டாள் என்பதில் ஐயமே இல்லை!தாய் தந்தையரின் முதல் கடமை - பெற்ற குழந்தையை நல்லவராக வளர்த்தல்.

அமைதியையே பெரிதும் விரும்பிய மன்னன்

வரகுண பாண்டியன் மதுரையில் இருந்து வந்து பல்லவருக்கு உட்பட்ட சோழ தேசத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினான்.இதை அறிந்த நந்தி வர்மன் அப்பாண்டியனுடன் தெள்ளாறு என்ற ஊரில் மிக பயங்கரமான போர் செய்தான்.பாண்டியனை காரைக்கால், திருநள்ளாறு ஆகிய ஊர்கள் வழியே மதுரை வரை துரத்திச் சென்றான், வெற்றி கண்டான்.அவனது மகள் மாறன்பாவை என்பவளைக் கல்யாணம் செய்தான்.வீரக்கழல் அணிந்த சிங்கம் போல் போரிட்டதால் அவனை மக்கள் ”கழற்சிங்கன்” என்றும் புகழ்ந்தனர்.

இதைப் புகழ்ந்தே அவனுக்கு ”தெள்ளாற்று எறிந்த நந்தி வர்ம பல்லவன்” என்ற விருது ஏற்பட்டது.அவனது வீரப்போரைப் புகழ்ந்து வர்ணிக்கும் நந்திக் கலம்பகம் என்ற தமிழ் இலக்கியமும் எழுதப்பட்டது.வேறு சில போர்களும் இவன் செய்தான்.

சுந்தரரின் ஆன்மீக மாணவன்

இப்போருக்குப் பின் அவன் அமைதியான வழியில் தேசத்தை ஆண்டான்.

திருநாவலூர் சிற்றரசர் நரசிங்க முனையரையர் இவனது நெருங்கிய அன்பர்.இவரே சுந்தர மூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை.சுந்தர மூர்த்தி நாயனாரின் ஆன்மீக வழிகாட்டல் நந்தி வர்மனுக்கு மிக அதிகம் கிடைத்துள்ளது.

அதே போல் இப்பல்லவ மன்னனின் சேனைத்தலைவர் கோட்புலியார்.இவரும் மிக உயர்ந்த சிவ பக்தர்.

சுந்தர மூர்த்தி நாயனார் சேரமான் பெருமாள் நாயனாருடன் சேர்ந்து ஆன்மீகப் பயணம் செய்து, சைவ சமயத்தின் பக்தி நெறியைப் பரப்பினார்.

அவர் தான் முதன்முதலில் சைவ அடியார்களின் வரலாற்றைத் ”திருத்தொண்டத்தொகை” ஆகப் பாடினார்.அதில் நந்தி வர்மனைக் கழற்சிங்கன் எனவும், கோட்புலியையும், நரசிங்க முனையரையாரையும் சேர்த்தார்.

63 நாயன்மார்களில் இவர்கள் இடம் பெறும் தகுதியை இவர்கள் இம்மன்னனுடன் இணைந்து பெறும் அளவுக்குத் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது தேசத்தின் ஆன்மீக அமைதி வளர்ச்சியைக் காட்டுகிறது.வேறு சில சைவ அன்பர்களும் இவர் காலத்தில் வாழ்ந்தனர்.

இவன் காலத்து வரகுண பாண்டியன் தான் மாணிக்கவாசகரின் அரசன்.

எனவே மாணிக்க வாசகர், மதுரைப் பாணபத்ரர் ஆகியோரும் இவன் காலத்தே வாழ்ந்தனர்.

மன்னர்கள் போரைத் தவிர்த்து அதிகம் அமைதியான வாழ்வில் நாட்டம் காண பக்தி மார்க்கம் பெரிதும் உதவியது எனலாம்.

நீதி வழுவாத நந்தி வர்ம பல்லவன்

இம்மன்னன் தன் ராணியுடன் ஒரு முறைத் திருவாரூர் ஸ்ரீத்யாகராஜ ஸ்வாமி கோயிலுக்குச் சென்றான்.அங்கு கோயிலைச் சுற்றி வருகையில் அவன் ராணி நந்தவனத்தில் இருந்த ஒரு அழகிய பூவை எடுத்து அதன் வாசனையை அனுபவித்தாள்.இதனால் கோபம் கொண்ட செருத்துணையார் என்ற சிவ அன்பர் ”ராணி! இறைவனுக்கு மட்டும் என உள்ளதை உங்களைப் போன்ற உயர் மக்கள் எடுத்து அனுபவித்தால் மகக்ளுக்கும் கோயில் பொருட்களில் கை வைப்பார்களே! இதை யோசிக்கவில்லையா? வேறு ஆளாக இருந்தால் கைகளை வெட்டி இருக்கும் அளவு தண்டிக்கப்பட வேண்டும்.அப்போது தான் மக்கள் கோயில் சொத்தில் கை வைக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

இதை அறிந்த நந்தி, ”சரியாகச் சொன்னீர், வாசனை அனுபவித்த மூக்கையும் அல்லவா அரிய வேண்டும்?” என்று தன் மனைவி, ராணி என்ற பற்று இல்லாமல் நீதியைப் பேசினான்.

இதை அறிந்த சுந்தரர் மன்னனை,

”கடல் சூழ்ந்த உலகு எல்லாம் காக்கின்ற பெருமான்

காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று பாடினார்.

கோயில்களுக்கு மக்களும் மன்னர்களும் எழுதி வைத்துள்ள பொது சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தும் இக்காலத்தவர்க்கு என்ன தண்டனையோ?

நந்தி வர்மன் அதிகம் ஈடுபட்ட கோயில் கலை

சிதம்பரம் கோயிலின் மூலஸ்தானத்துக் கூரை அமைப்பு மாதிரி மாமல்லபுரத்து ரதக்கோயிலில் உள்ளது.இதற்கு ”சாலாகார விமானம்” என்று பெயர்.இவ்வமைப்பை நந்தி பல கோயில்களில் செய்தான்.

திருக்காட்டுப்பள்ளி [செங்கல்பட்டுக்கு அருகில் பொன்னேரிக்கு அருகில் உள்ளது]

இவ்வூரில் உள்ள சிவன் கோயிலை அமைக்க நந்தி வர்மன் நில தானம் செய்துள்ளான்.அக்கோயிலைக் கட்டியவன் யக்ஞ பட்டன் என்ற அந்தணன்.

கிளியனூர்

திண்டிவனம் அருகில் கிளியனூரில் இவன் கட்டிய விஷ்ணு கோவில் இடிந்து இன்று விஷ்ணு சிலை மட்டும் எஞ்சி உள்ளது.அதில் உள்ள கல்வெட்டு, ”ஒய்மா நாட்டுக் கிளிஞலூர் திகைத்திறல் விஷ்ணு க்ரஹம்” என்று கூறுகிறது.

இவருக்கு ”விழுப்பெருந்தாய விஷ்ணு க்ருஹத்து நின்று அருளிய பெருமாள்” என்று பெயர்.

பல்லவர்கள் இசைக்கலையையும் நன்கு ஆதரித்து அதைக் கற்கவும் செய்த காரணத்தால் தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசை மூலமே மக்களை பக்திக்கு இழுத்தனர்.நந்தியும் இக்கலையை ஆதரித்தான்.

இவன் காலத்தில் சமண புத்த மதங்கள் குறைந்தன.ஆனால் இம்மன்னன் யாரையும் வெறுத்து ஒதுக்கவில்லை!

இலக்கியங்களை ஆதரித்த மன்னன்

நந்தியின் அரசவையில் இருந்த பெருந்தேவனான் மஹாபாரத்தைத் தமிழில் ”பாரத வெண்பா” என்று முழுமையாகப் பாடினார்.

இவன் பெயரில் தான் நந்திக் கலம்பகம் பாடப்பட்டது, ஆனால் புலவர் பெயர் தெரியவில்லை.

சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவராகப் பதிகங்கள், மாணிக்க வாசகரின் திருவாசகம், திருக்கோவை, சேரமான் பெருமாள் பாடிய பக்தி நூல்கள் ஆகியவற்றை இவன் சேகரித்துப் போற்றிப் பரப்பினான்.

நந்தி வர்மன் செய்த திருப்பணிகள் - தானங்கள்: [சில]

கோயில்களை மையப்படுத்தியே சமூஹப் பணிகள் அமைந்த காலம் அது.எனவே மன்னனும் மக்களும் கோயிலுக்கே தான தர்மங்கள் செய்து அதன் மூலம் ஆதரவு அற்றோர்க்கும் இறைவனுக்கும் பணி செய்தனர்.இம்மன்னன் செய்த பல கோயில் தானதர்மங்கள் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் மூலம் தெரியவருவதைக் காண்க:

வேலூர் அருகில் பள்ளி கொண்டா கிராமம் - நாகநாதேச்சுவரர் கோயில்

பள்ளிகொண்டாவான வித்தூரில் சிவன் கோயிலில் முகமண்டபத்தை அமனி கங்கரையர் மகன் செல்வ வாணவராயன் கட்டினான்.அமனி கங்கரையர் நந்தியின் ஆட்சியின் கீழ் ஆண்டவர்.

புதுக்கோட்டை - குன்னாண்டார் கோவில் கிராமத்தில் பர்வத கிரீஸ்வரர் கோவிலி

மீபுழை நாட்டு வடுவூர் கணவதிமான் திருவாதிகை விழாவில் 200 சிவ அன்பர்களுக்கு அன்னதானம் செய்ய நெல் தானம் செய்தான்.

திண்டிவனம் - கிளியனூர்

இவ்வூர்ப் பெருமாளுக்கு விளக்கு ஏற்றவும் நைவேத்யத்துக்கும் 300 ஆடுகளும் நிலங்களும் இவ்வூர் மக்களே நந்தி வர்மன் முன் தானம் செய்தனர்.

திருச்சி லால்குடி சப்தரிஷீசுவரர் கோயில்

இறைவன் பணிக்கு நந்தி வர்மன் 60 காசுகளும், இஞ்ஞாட்டு நல்லிமங்கலம் சபை [வழக்குரைஞர்கள்] 20 காசுகளும் அளித்தனர்.

நெல், நெய், நுந்தா விளக்கு எரிய இவை பயன்படுத்தப்படும்.

திருக்கோயிலூர்

நந்தி வர்மனின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசன் சித்தவடவனார்.இவரது தங்கைகள் இருவர்.மகாதேவடிகள் - வாணகோவதிகள்.இருவரும் சிவன் கோயிலுக்கு நிலங்கள் தந்தனர்.

பொறுப்பில் இருக்கும் மனிதரப் பார்த்தே மக்கள் சமூஹத்தில் வாழ்வர்!

அதற்கு நந்திவர்ம பல்லவன் 3 ஒரு உதாரணம் என்பதை மனதில் கொள்க.

Mamallan Narishima Pallava King - a legendary cele...
Mahabalipuram - Tiger cave and 5th century A.D Mur...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries