அசோகர் - Emperor Ashoka - Tamil Version [Research article for students]

Sakthi Foundation

அசோகர் பின்பற்றிய நல் வழி

பாரத தேசத்தின் மிகப்பெரிய மாமன்னர்களுள் ஒருவர் அசோகர்.இவர் கி.மு.273ல் பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் புத்தர் அவதாரம் செய்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தார்.இவர் புத்த பெருமானின் அறிவுரைகளை மிகவும் நுட்பத்துடன் ஆழ்ந்து கற்று, தன்னுடன் தொடர்பு படுத்தி அறிந்ததால், தன்னை மாற்றிக் கொண்டார்.

மிகக் கொடுமையான கலிங்கப் போருக்குப் பின் அவருக்கு இம்மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மை.தன் வாழ்க்கையில் புத்த சமயத்தை உலகம் முழுவதும் பரவச் செய்த மிக உயர்ந்த திருப்பணியை அசோகர் செய்துள்ளார்.

அவர் தன் ஆட்சிக் காலத்தில் பல புத்த சமய வழிபாட்டு இடங்களையும், புத்தர் நினைவுச் சின்னங்களையும் ஏற்படுத்தினார்.வரலாற்றைக் கூறும், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஸ்தூபி கோபுரங்கள் [தூண்கள்] பல உருவாக்கினார்.அவற்றுள் சான்ச்சியும் சாரநாத்தும் மிகவும் முக்கியமானவை.

புத்தர் பிறந்த லும்பிணி வனத்தில் விஹாரமும் [வழிபாட்டு ஸ்தலம்], அவர் ஞானம் பெற்ற புத்த கயாவில் கோவிலும், அவர் முதன்முதலில் தன் தர்மநெறியை போதித்த சாரநாத்தில் தர்ம சக்ரத்துடன் கூடிய ப்ரமாண்ட ஸ்தூபியையும், அவர் பல காலம் உபதேசம் செய்த வைசாலியில் விஹாரமும், அவர் முக்தி அடைந்த குஷி நகரில் விஹாரமும் அமைத்தார்.இலங்கை, சைனா, ஜாவா, சுமத்ரா, பல கிழக்கு தேசங்களுக்கு இவர் காலத்திலேயே புத்த மதம் பரவியது.

இவரது அனுமதியுடன் வரலாற்றில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல உயர்ந்த கருத்துகளை இவர் காலத்திலேயே ஸ்தூபிகளில் கல்வெட்டுக்களாகப் பொறித்தனர் அரசாங்கத்தினர்.மாணவர்களுக்குத் தேவையான அசோகர் பின்பற்றிய சில உயர் தர்ம நெறிகளை இப்பகுதி மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

அசோகர் கூறுகிறார்....

”தாயையும் தந்தையையும் முதலில் மனிதன் மனதார மதிக்க வேண்டும்.

வீட்டில் உள்ள உறவினரையும் சுற்றத்தையும் அன்புடன் மதிக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு உயர்ந்த மரியாதையை மனிதன் தர வேண்டும்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும் மதிக்க வேண்டும்.

முடிந்த வரை அசைவ உணவைத் தவிர்த்து, உயிர்க்கொலையைத் தவிர்த்திடுக.

கோயில்களில், விழாக்களில் உயிர்கள் பலியிடுவதைத் தடை செய்ய வேண்டும்.

விளையாட்டுக்காகக் கூட ஒரு உயிரைத் துன்புறுத்த வேண்டாம்.

சிறியவரானாலும் வயதானவர் ஆனாலும் தர்மத்தின் வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

நாம் பின்பற்றும் நல்ல விஷயத்தை நான்கு பேருக்கு எடுத்துக் கூற வேண்டும்,அவர்களை வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கு உடல் ஆரோக்யத்தைக் காக்கும் மருத்துவக் கூடங்களை நிறுவுகிறேன்.அதில் மூலிகைகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.இல்லாத மூலிகைகளை விளைவிக்கவும் வேண்டுகிறேன்.

அரண்மனையில் உணவில் அசைவம் சேர்ப்பதைப் படிப்படியாகக் குறைக்க ஆணை இடுகிறேன்!

பெற்றோர்கள், படித்த பண்புள்ளவர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் ஆகியோரின் அறிவுரைகளைப் பின்பற்றுக.

குறைவாகச் சேமியுங்கள், குறைவாகச் செலவு செய்யுங்கள்!

நண்பர்களிடம் உண்மையான நட்பைக் காட்டுங்கள்.

கஷ்டப்படும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முடிந்தவரை உதவுக.

ஒரு நல்ல செயலைச் செய்வது மிகவும் கடினம்.அதைச் செய்ய முயற்சிப்பவனே நாட்டுக்குத் தேவை.

குற்றவாளிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டின் வயோதிகர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்யத் தகுதி உடையவர்கள் ஆனால் விடுதலை செய்க.

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மக்களின் தேவைக்கான செய்தி என்னை வந்து அடையலாம்.

மக்களின் நலனுக்காக என்னை எளிதில் பார்க்க அனுமதிக்கவும்.

அரசனின் உத்தரவுகளை, செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மக்களின் நலனைத் தவிர அரசனுக்கு வேறு நற்கதி என்பதே இல்லை!

மனுதாரர்களை நீண்ட காலம் காக்க வைக்காமல் விரைவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்க.

அவசரமான வேலைகள் எதுவாயினும் மன்னனும் மக்களும் அதைத் தள்ளிப்போடுவதால் இழப்புகள் ஏற்படும்.

அனைவரும் முடிந்தவரை புலன் அடக்கம் கொண்டு தீய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

வெறும் சுகபோகக் கேளிக்கைகளில் மட்டும் மனம் செலுத்தாமல் ஆன்மீக ஞானத்துக்கு மக்கள் பாடுபடுக.நானும் இப்போது உல்லாசப் பயணங்களை ஆன்மீகப் பயணமாக மாற்றிக் கொண்டேன்.இவ்வாண்டு புத்த கயாவுக்குச் செல்கிறேன்.

வேலைக்காரனையும் அடிமையும் அன்புடன் நடத்துக.

கண்மூடித்தனமான வெத்துச்சடங்களில் ஈடுபடாமல் அதைப் புரிந்து கொண்டு செய்க.குறிப்பாகப் பெண்கள் மூடத்தனமான சடங்குகளைத் தவிர்த்திடுக.

உயர்ந்த தர்மத்தின் வழியில் வாழ்வது என்ற உயர்சடங்கை அனைவரும் செய்க.

ஆன்மீகப் பெரியோர்களையும், ஆசிரியர்களையும் கெளரவம் செய்வது நல்லது.

உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதில் பயம் வேண்டாம்.

வெளிப்படையான மரியாதை மற்றும் உயர் வகைப் பரிசுகள் எனக்கு உங்களிடம் இருந்து வேண்டாம்! தயவு செய்து நல்லவனாக வாழ்க.அதுவே எனக்குப் பிடிக்கும்!

யாரையும் தரக்குறைவாக மதிப்பிட வேண்டாம்.

சரியான காரணம் இல்லாமல் யாரையும் குறை கூற வேண்டாம்.

அளவுடன் பேசுக.

பிற சாதிகள், பிற மதத்தினரை மதிக்க வேண்டும்.அப்போதே ஒற்றுமை ஏற்படும்.

முயற்சி செய்க, சோம்பலை விடுக, பொறுமையைக் கடைப்பிடித்திடுக, செய்யும் செயலில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

தினமும் நீங்கள் செய்த நல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் நினைத்துப் பாருங்கள், அப்போது உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வழி கிடைக்கும்.

நல்ல காரியங்களைச் செய்யும் போது அதைத் தான் செய்ததாகவும், கெட்ட காரியம் செய்த போது அதைத் தான் ஏற்க மறுப்பதும் மிகவும் அறியாமை ஆகும்.

பேராசை, கோபம், அகங்காரம் ஆகியன வன்முறைக்கு மக்களை இட்டுச் செல்லும்.அவற்றை மனதில் கொள்ளவே கூடாது!

கிளிகள், வாத்துகள், குருவிகள், வெளவால், பெண் ஆமை, ஆற்று ஆமை, எலும்பு இல்லாத மீன், முள்ளம்பன்றி, அணில், மான், காளைமாடு, குரங்கு, காண்டாமிருகம், பெண் வெள்ளாடுகள், பெண் செம்மறி ஆடுகள், பெண் பன்றிகள், குட்டி போட்டுப் பாலூட்டும் எவ்விதமான விலங்குகள், சேவல்கள் ஆகியன கொல்லப்படக் கூடாது.

யானைகள் தண்ணீர்க் குடிக்கும் குளங்களில் மீன்களைக் கொல்லல் லூடாது.

ஒரு உயிரினத்துக்கு நாமாக மற்றொரு உயிரை உண்ணக் கொடுக்கக் கூடாது.

பெளர்ணமி காலங்களில் அசைவம் தவிர்க்க வேண்டும், உண்ணா நோன்பு இருந்திடுக.அசைவ உணவினை விற்கவும் தடை செய்கிறேன்!

அறுவடை செய்யப்பட்ட வயல்களைக் கொளுத்தத் தடைச் சட்டம் போடுகிறேன்.

மக்கள் அனைவரும் நான் பெற்ற குழந்தைகள் என்ற எண்ணம் அரசனுக்கு வர வேண்டும்.நல்ல பணியாளிடம் தன் குழந்தையை ஒப்பட்டைத்த தாய் போல் அரசன் தரமான நேர்மையான அரசாங்க அலுவலரிடம் நாட்டை ஒப்படைத்து நிம்மதி கொள்கிறான்.

சிறைக் கைதிகள் அவர்களின் மாற்றத்தின் அடிப்படையில் அவர்தம் பிறந்த தினத்தன்று விடுதலை செய்யப்படலாம்.

விசாரணையின் போது காவலரால் கைதி இறந்தால் அக்காவலர் மிகவும் கொடுமையாக தண்டிக்கப் படுதல் வேண்டும், அபராதம் செலுத்த வேண்டும்!

மரண தண்டனைக் கைதிகளின் உறவுகள் தகுந்த ஆதாரத்துடன் அதைத் தடுக்க என் முன் வழக்கைக் கொண்டு வரலாம்.

மக்கள் பயணிக்கும் வழிகளில் நிழலைத் தர ஆல மரங்கள் நட்டுள்ளேன்.அதன் மூலம் பசுமையும் தட்பவெப்பமும் சீராகும், மழைக்கு வழி செய்யும்.

தரமான மாந்தோப்புகளை ஏற்படுத்தி உள்ளேன்.அதன் மூலம் பலருக்கு வேலை கிடைத்துள்ளது.

அரைக் கிலோமீட்டர் தூர இடைவெளியில் கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.அவற்றின் தூய்மையை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தனித்தனியே குடிநீர் வசதிகள் செய்துள்ளேன்.

பயணிகள் தங்கி, உண்டு இளைப்பாறச் சத்திரங்கள் எழுப்பியுள்ளேன்.

எனக்குப் பின்வரும் அரசர்களும் மக்களுக்கு இதையே செய்ய வேண்டுகிறேன்”

என்று தன் கல்வெட்டுக்கள் மூலம் தன் அசர ஆணைகளை, மக்களுக்கு வேண்டிய அறிவுரைகளை அசோகர் கூறி இருக்கிறார்.

பல்லவ நாடு - Pallava Kingdom for students
”ஊர் கூடினால் தான் தேர் நகரும்” - தைப்பூசம் கட்டுர...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries