Mahabalipuram - a guide
Sakthi foundation
மாமல்லபுரம்
நெர்பேயாறு
பெரும்பாணாற்றுப் படை என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியம்.இதில் பல்லவ தேசம் ”தொண்டை நாடு” என்று பெயரிடப்படுகின்றது.அதன் தலைநகரம் காஞ்சிபுரம் என்றும், அதை இளந்திரையத் தொண்டைமான் ஆண்டான் என்றும் கூறப்படுகின்றது.அவனது துறைமுகம் நெர்பேயாறு என்று கூறப்படுகின்றது.இதுவே இக்கால மாமல்லபுரம்.
கடல் கடந்த வாணிபம்...
ரோம், சைனா, இலங்கை, அரேபியா, சுமத்ரா, ஜாவா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடன் கடல் வாணிபம் செய்தனர் பல்லவர்கள். அவர்களின் துறைமுகம் இவ்வூர் ஆகும்.மிகப்பெரிய மரக்கப்பல்கள் மூலம் கடல் பயணம் மேற்கொண்டனர். கி.பி நான்காம் நூற்றாண்டின் சைனா காசுகளும், முதலாம் தொடோஸியஸ் என்ற ரோம் அரசன் காலத்துக் காசுகளும் இங்கு கண்டு பிடிக்கப் பட்டன. ஸ்ரீஹரி, ஸ்ரீநிதி என்று பெயர் பொறித்த பல்லவக் காசுகளும் கிடைத்துள்ளன.
கி.பி முதல் நூற்றாண்டில் பெரிப்ளூஸும், கி.பி 142ல் டோலமியும் இவ்வூரைப் பற்றிய தகவல்களைத் தங்கள் பயணக் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர்.மிகச் சிறந்த கடல் வாணிப ஸ்தலத் துறைமுகமாக இவ்வூர் விளங்கியது.
மல்லை, கடல் மல்லை என்ற பெயர்கள் இவ்வூருக்கு உண்டு.கடல் வழி மூலம் பல பொருட்கள் மலிந்து வியாபாரத்துக்கு வருவதால் மல்லை என்று பொருள் கொள்ளலாம்.
புனித பூமி...
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று மாமல்லபுரம். வைஷ்ணவ ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் இவ்வூரில் பிறந்தவர் ஆவார்.இவரது காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு ஆகும்.ஒன்பதாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவ்வூரின் ஸ்தல சயனப் பெருமாள் மீது பதிகங்கள் பாடி இருக்கிறார்.அவரது காலத்தில் கடற்கரைக் கோயில்களில் வழிபாடுகள் நிகழ்ந்துள்ளன. ”சுடுகாட்டில் வாழும் சிவனுடன் கூட இருக்கும் பெருமாள்” என்ற அர்த்தத்தில் அவர் கடற்கரைக் கோயில் இறைவனைப் புகழ்கிறார்.
இக்கோயில் பல கடல் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் இப்போது ஊரின் நடுவில் உள்ள பெரிய கோயிலை ஏற்படுத்தினர்.அதில் பூதத்தாழ்வாருக்குத் தனி சன்னிதியும் உள்ளது. பூமிக்கு மரியாதை செய்யும் வகையில் இக்கோவில் தாயார் ஸ்ரீநிலமங்கை நாச்சியாராக அருள் பாலிக்கிறார்.
உண்மை!
தன் பிள்ளைகளுக்கு விசேஷமாகத் தன் மடியில் தின்பண்டங்களைக் கட்டி வைத்திருக்கும் தாயைப் போல் பூமித் தாய் தன் கடற்கரையில் பல்லவர்களுக்கு என்றே பாறைகளை வைத்துக் காத்திருந்தாள் என்று வர்ணிக்கலாம்.
கடற்கரைக் கோயில்கள்...
மாமல்லபுரம் என்று காதில் விழுந்தவுடன் மனக்கண்களில் தெளிவாகக் காட்சிக்கு வருவது கடற்கரைக் கோவில்கள்.
இவை கி.பி 700 - 728 கி.பி காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
இவற்றை உருவாக்க முன்னோடியானவன் நரசிம்ம வர்ம பல்லவன் 1.
ஆனால் முழுமை பெற்றது இரண்டாம் நரசிம்ம வர்மனால் தான்.இவனின் மற்றொரு பெயர்தான் ராஜ சிம்ம பல்லவன்.
மார்கோ போலோ இவ்வூரை வந்து காண்கையில் கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.இன்று இரண்டு மட்டுமே உள்ளன. 2006ல் சுனாமி வருவதற்கு முன் கடல் உள்வாங்கிய போது, கடல்படுக்கையில் சில கோயில்களின் மேல் பாகங்கள் காணப்பட்டன.இவற்றை நரசிம்மவர்மன் 2 எழுப்பியுள்ளான்.
மேலும் கடலால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காலத்தில் கற்பாறை அரண் [பாதுகாப்பு] போடப்பட்டுள்ளது.
2004 சுனாமிக்கு முன் கடல் உள்வாங்கிய போது ஐரோப்பிய கடல் பயணிகள் குறிப்பிட்ட ஏழு கோவில்களில் மூழ்கிய கோவில்கள், மயில், சிம்மம், யானை, குதிரை போன்ற கற்சிற்பங்களும் கடற்படுக்கையில் தென்பட்டுள்ளன.
பழங்காலத் துறைமுகம்...
கோவிலுக்கு முன் அகழ்ந்து எடுக்கப் பட்ட துறைமுகத்தின் சில பகுதிகளைக் காண முடியும்.குறிப்பாகக் கப்பல்களை, ஓடங்களைக் கட்டும் இடத்தைக் காணலாம்.
கடலில் தன்மை, இடம் இத்தனை நூற்றாண்டுகளில் மாறுபட்டிருக்கின்றது.
தெப்பக்குளம் அதன் நடுவில் மண்டபம் என்ற கோவில் குள அமைப்புக்கு முன்னோடியாக ஒரு அழகிய கல் தளம் போடப்பட்ட நீர்க்குளம் அமைகிறது.அதன் நடுவில் சிறிய மண்டபமும், பெரிய வராகமும் [காட்டுப்பன்றி] உள்ளன.
இதை வராஹ அவதாரம் என்று காண்பதை வித, சாளுக்கியர்கள் பல்லவர்கள் குளத்தில் தண்ணீர் குடிக்கிறார்கள் என்ற போர் வெற்றிச் சின்னமாக மனதில் பதிகிறது.
”தண்ணீர் குடிக்க வச்சிட்டான்”என்ற பழமொழியை இவ்விடத்தில் கருத்தில் கொள்க.
1. ஷத்ரிய சிம்ஹ பல்லவேச்வர க்ருஹம் [ஷத்ரிய சிம்மேஸ்வரன் என்பது சிவனைக் குறிக்கும்]
2. ராஜ சிம்ஹ பல்லவேச்வர க்ருஹம்
3. பள்ளி கொண்டு அருளிய தேவர் க்ருஹம் [ஸ்தல சயனப் பெருமாள்]
4. நரபதி சிம்ஹ க்ருஹம் என்ற பெயரில் ஒரு கோவில் இருந்துள்ளது. அதில் நரசிம்மர் இருந்திருக்கக் கூடும்.
என மூன்று கோவில்களின் பெயர்களைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
”யானைகளும், நவமணிகளும் ஏற்றுமதிக்காகக் குவிந்திருக்கும் கப்பல்கள் மிதக்கும் கடல் மல்லை”என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
கடற்கரைக் கோயில்களில் 16 பட்டை சிவலிங்கமும் ஸ்தல சயனப் பெருமாளின் ப்ரமாண்டமான கிடந்த கோலமும் உள்ளன.இம்மூர்த்திகளை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
கோவில்களைச் சுற்றி அரணாகக் கற்பாறைச் சுவர்களும், அவற்றில் நந்திகளும் அமைந்துள்ளன.
மகேந்திர வர்மனும் முதலாம் நரசிம்ம வர்மனும், இரண்டாம் நரசிம்ம வர்மனும், ராஜ சிம்ம வர்மனும் இவ்வூரில் உள்ள பல கலை வேலைப்பாடுகளை உருவாக்கி உள்ளனர்.
புத்த விஹாரங்களின் மாதிரிகளைக் கொண்டு கோயில்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. அஜந்தா எலோரா குகைக் கோயில்களை ஒத்த குகைக் குடை வரை மண்டபங்கள் அமைகின்றன.வாதாபிப் போருக்குப் பின் அங்கிருந்த பல சிற்பிகளை நரசிம்ம வர்மன் தமிழகம் அழைத்து வந்து, அவர்களின் கூட்டமைப்பில் பல கலைப்பாடுகளை உருவாக்கி இருக்கிறான்.
சைவ வைஷ்ணவ சமய வளர்ச்சிக்கு மாமல்லபுரம் குகைக் கோயில்கள் மிகவும் உறுதுணை செய்கின்றன.
அவனுக்குப் பின்னர் ராஜ சிம்ம வர்மனும், பிற்காலச் சோழர்களும், நாயக்க மன்னர்களும் சில வேலைகளைச் செய்துள்ளனர்.
ஒரே கற்பாறையால் செதுக்கி உருவாக்கப்பட்ட MONOLITH வகைக் கோவில்கள் மொத்தம் ஒன்பது உள்ளன.
பஞ்சபாண்டவ ரதங்கள்?
இவற்றை உருவாக்கியவன் ராஜசிம்ம பல்லவன் ஆவான். அவனைக் குறித்த பல தகவல்களை இங்குள்ள பல்லவ கல்வெட்டுக்கள் கூறுவன.
”ப்ருதாஸ்”எனப்படும் புகழ் மாலைச் செய்யுள்கள் ரதங்களில் உள்ளன. ராஜசிம்மனை ”ஆத்யந்த காமன்”என்று புகழ்கின்றன். [எல்லையில்லாத புகழ் ஈட்டுவதில் முடிவில்லாத ஆசை கொண்டவன் என்று பொருள்]
பராபரா, பரா, நாராயண மனோஹரன், புவபாஜனன், நரசிம்மன், மஹாமல்லன், சர்வதோபத்ரன், ரண ஜெயன் போன்ற பல பட்டப்பெயர்களைக் கல்வெட்டுகள் தருகின்றன.
பஞ்ச ரதங்களில் - சனாதன தர்மத்தின் அறுவகைக் கடவுள்களுக்கு உரிய ரதக்கோவில்கள்...
அவற்றுள் ”பஞ்ச பாண்டவர் ரதங்கள்”எனப்படுபவை மிகவும் ப்ரஸித்தி பெற்றவை.ஆனால் அவை பஞ்ச பாண்டவர்களுக்கே உரியதா என்ற ஆய்வுக் கேள்வி உண்டு. காரணம் அவற்றுள் உள்ள துர்கைக் கோவில், முருகனுக்கு உரிய மாபெரும் யானை, துர்கையின் சிம்ம வாஹனம் ஆகியன சில கேள்விகளை முன் வைக்கின்றன.ஆதி சங்கரரின் அத்வைத்த தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பல்லவன் நரசிம்ம வர்மன் 1 ஏன் வேத மார்கத்தின் அறுசமய தெய்வங்களுக்கு இவற்றை ஏற்படுத்தும் எண்ணத்தை விதைத்து இருக்கக் கூடாது?
கொற்றவைக் கோவில்...
துர்கையின் அழகிய சதுர வடிவான கோயில் மிகவும் கண்ணைக் கவர்கின்றது.அது அழகிய மிக நுட்பமான வழுவழுப்பாக இருக்கிறது. சுவற்றுடன் புடைப்புச் சிற்பமாக துர்கை மிகப் பழமையான தோற்றத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். ”குட்டை க்ரஹம்”என்றே இது அழைக்கப் படுகின்றது. கோவிலை ”க்ரஹம்”- வீடு என்றே பல்லவர்கள் அழைத்தனர்.
சங்கும் [தற்போது இல்லை] ப்ரயோக சக்ரமும் தாங்கிய விஷ்ணு துர்கை வடிவில் தேவியை வடித்துள்ளனர்.வலது கை சற்று சாய்ந்து அபயக்கரம் காட்டுவதாகவும், இடது கை கம்பீரமாகத் தொடை மீது ஊன்றப்பட்டும் உள்ளன.இக்கால விஷ்ணு துர்கை சற்று இடையை வளைத்து இருப்பது போல் காணப் படும்.ஆனால் இவள் நேராக நிற்கிறாள்.அன்னையில் தலைக்கு மேல் இருபக்கமும் அவளது பணியாளர்களாக மொத்தம் நான்கு பூதகணங்கள் உள்ளன.
அன்னை பருத்த ஸ்தனங்களில் துணியால் கச்சு அணிந்துள்ளாள்.இது அக்காலப் பெண்களின் மேலாடை வகையைக் காட்டும்.இடையின் இரு புறமும் அழகிய தொங்கல் பட்டுகள் வழிந்துள்ளன.
பாதங்களில் சிலம்பும், கரங்களில் பருத்த வளைகளும், கழுத்தில் மணிமாலைகளும் உள்ளன.காதுகளில் பெருத்த குழைகளும், தூக்கி அலங்கரித்து முடியப்பட்ட முடிமகுடமும் தலையில் உள்ளது.எளிய தோற்றமே பல்லவ சிற்பங்களின் தன்மை.அன்னை அழகிய தாமரை இதழ் பீடத்தின் மீது நிற்கிறாள்.
மிக உயர்ந்த த்யாகம்..
மிகத் தொன்மையான கொற்றவை - காளி வழிபாட்டின் சின்னமாக இக்கோவில் உள்ளது.உள்ளே அன்னையின் கீழ் இரு வீரர்கள் தங்கள் தலையையும், உடல் பாகங்களையும் வெட்டி பலி இடுவதாகச் சிற்பங்கள் உள்ளன.தன் கற்றை முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கித் தன் தலையை அரியும் கோலத்தில் அவ்வீரன் அமர்ந்திருக்கிறான்.தன் தேசத்தின் நலனுக்காக உடல் பற்றை, உயிர்ப் பற்றை, வாழ்க்கைப் பற்றை விடுத்துத் தன் ஆணவம் அகன்று தன்னையே பலியிடும் உயர்நிலை பலி சாக்தத்தில் [சக்தி வழிபாட்டில்] இருந்துள்ளது.அவ்வாறு உயிர் த்யாகம் செய்த வீரர்களுக்கு உரிய வீர நடுகற்கள் தமிழகத்தில் பல உள்ளன.
மிகப் பழங்காலத்தில் கொற்றவை வழிபாட்டில் ரண பலிகளும் உண்டு.சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றைக் கூறும்.பல்லவ தேசத்தின் நலனுக்காகத் தங்கள் இன்னுயிரை பலி இட்ட இரு வீரர்களாகவும் இருக்கக் கூடும்.
கோவிலின் வெளிவாசலில் இருபுறத்தேயும் இரண்டு த்வார பாலகிகள் உள்ளனர்.இக்கோவிலில் பூஜைகள் நிகழ்ந்து இருக்கலாம்.
சுற்றுப் ப்ரகாரத்தில் மகிஷனின் தலை மீது நிற்கும் விஷ்ணு துர்கை [கோஷ்ட மூர்த்தி] இருக்கிறாள்.இந்த pattern எல்லாம் ஆதியில் கோவில் வாஸ்த்துவில் அருவுருவமாக இருந்ததை, பல்லவர்கள் உருவமாகக் கொண்டு வந்தனர். கோஷ்டம் [மாடம்] மிக அழகிய வேலைப்பாட்டுடன் உள்ளது.
By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/