Mahabalipuram - Tiger cave and 5th century A.D Murugan temple

Sakthi Foundation

புலிக்குகை - அதிரண சண்ட சிவன் கோயில் - சப்த மாதர்கள் - முருகன் கோயில்

 

சென்னையில் இருந்து செல்லும் போதே மாமல்லபுரத்துக்கு முன்பே இடது புறம் சாளுவன் குப்பம் என்ற இடத்தில் புலிக்குகை வருகிறது.அரசு அதன் பெயரை நல்ல பெரிய எழுத்தில் வழிகாட்டி உதவியுடன் வைப்பது அவசியம்.அதை விட  நம் தேசத்து மக்கள் மதுவைக் குடிக்க இப்பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ள அவலமான மஹா கேவலமான நிலை!

மேலை தேசத்து நாகரீகம் என்ற பெயரில் அங்குள்ள தீய விஷயங்களில் மஹாமோஹம் கொண்டு நாம் நம் கலாச்சாரச் சின்னங்களைச் சீரழிக்கிறோம்.மேலை தேசத்து மக்கள் சுமார் 200 ஆண்டு பழமையையே மிகவும் போற்றக் கூடியவர்கள் என்பதை இந்த மூட ஜனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மிகச் சிறிய வயதில் இருந்தே பள்ளிகளி சமூஹ நாகரீகம் மிகவும் வலியுறுத்தப் படுதல் அவசியம்!

ராஜவிம்ம பல்லவன் குடைந்து செய்த அழகிய அமைதியான குகைக்கோயில் தான் புலிக்குகை.

கம்பீரமான சிம்ம முகங்கள் குகையின் நுழைவாசலை அலங்காரம் செய்கின்றன.அவை விழிப்புணர்வின் குறியீடு ஆகும்.

இரண்டு யானைகளும் குதிரையும் வடிக்கப் பட்டு உள்ளன.அவற்றின் மீது சதுரமான மாடத்துள் சிவன் அமர்ந்துள்ளார்.

குகைக்கோயிலின் நடுவில் படிகளின் மீதேறிச் செல்லும் வழி உள்ளது.

முன் மண்டபம் கூடிய கர்ப்ப க்ருஹம் அமைந்துள்ளது, ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை!

முன்மண்டபத் தூண்களில் சிம்மம், அதன் மீது ஏறிய மாவீரனின் அழகிய சிற்பங்கள் உள்ளன.

பல்லவர்கள் மானுட வாழ்வியல் ஆதார சக்தியை அதிகரிக்கும் சக்தி வழிபாட்டில் ஆழ்ந்த கவனம் செலுத்தினர்.காரணம் மாமல்லபுரத்தில் பல இடங்களில் கொற்றவையாம் துர்கைக்கே அதிகம் சிற்பங்களும் வழிபாட்டு இடங்களும் அமைகின்றன.

புலிக்கோயிலை வலம் வருகிறோம், மேற்கொண்டு வடக்கு நோக்கிச் செல்ல மிக ப்ரம்மாண்ட உயரமான பாறைகள் உள்ளன.என்னென்ன திட்டங்கள் பல்லவர் அதன் மீது வைத்து இருந்தாரோ? உயரத்தில் அதைச் செதுக்க ஆரம்பித்த அடையாள எச்சங்கள் உள.

மேற்கொண்டு பயணிக்க பல பாறைகள், உப்புக் காற்றால் குடையப்பட்டுள்ளன.பல்லவ சிற்பிகளிடம் கடல் காற்று சிற்பக்கலையைக் கற்றுக் கொண்டதோ?

இந்தக் காற்றும், வானும், கடலும் அல்லவா அவர்கள் வேலை செய்த அழகை அனுபவித்து இருக்கும்?

மேலும் சென்றால் மற்றொரு குகைக்கோயில், இன்று வழிபாட்டில் உள்ளது.

அதுவே அதிரணசண்ட குகைக்கோயில்.

இது சிவன் கோயில்.

இதை ராஜசிம்ம பல்லவன் செய்தான் என்று பாறைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

ராஜராஜ சோழன் காலத்தில் இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது என்று தரையின் மீது பாறைக்கல்வெட்டு கூறும்.

”கயிலை மலையைப் போலும் இமய மலையைப் போலும் மிக அழகான உயர்ந்த கோயிலை ராஜசிம்மன் உலக நலனுக்காக ஈஸ்வரனுக்குச் செய்தான்” என்று கல்வெட்டு கூறுகிறது.

கர்ப்ப க்ருஹத்தில் எண் கோணப்பட்டை லிங்கம் மிளிர்கிறது.பின்புறச்சுவற்றில் பல்லவருக்கே உரிய styleஆன சோமாஸ்கந்த மூர்த்தி!

வெளிப்புறத்து இரு பக்கங்களிலும் சோமாஸ்கந்தர் உள்ளனர்.

கோயிலின் வெளியே மிக நீண்ட பாண லிங்கம் இன்று கொடிமரமாகத் தவறாக நடப்பட்டு உள்ளது.

அதன் அருகில் பல்லவரின் நந்தி இருபிளவாய்ச் சேர்க்கப்பட்டு பூஜையில் உள்ளது.

கோயிலின் சேதமான சில கல்பகுதிகளைச் சுற்றி வைத்துள்ளனர்.அதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று உடைந்து போன தலை அற்ற மிகப் பெரிய இறைவன் சிலை.அதை ஒரு ஓரத்தில் கிடத்தி உள்ளனர்.அது சற்று தொலைவில் உள்ள முருகன் கோயிலின் மூல விக்ரஹமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

சிவனை வணங்கி நந்தியின் வலது புறப்பறையில் பார்த்தால் மிகவும் நுட்பமான துர்கை மகிஷனுடன் போரிடும் தேவி மஹாத்மிய காட்சி வடிக்கப்பட்டு உள்ளது.தேவியின் வீர கம்பீர சிம்மவாஹினித் தோற்றமும், அசுரன் ”ஐயோ என்னை வதைத்தது போதும்!” என்று கை ஜாடை காட்டுவதும், பூத கணங்கள் அவனை வதைப்பதும், குறிப்பாக ஒரு பூதம் அவன் கையைக் கடிப்பதும் வர்ணிக்க முடியாத கல்லோவியம்!

அடுத்து உள்ள ஓட்டுக்கூரைக் கோயிலுக்குள் அத்துர்கையின் சப்த மாதர்கள் உள்ளனர்.

அடுத்து வேலியை விட்டு வெளியே வரும் போது 2004 சுனாமி காட்டிக் கொடுத்த பல்லவர் கால முருகன் கோயில் அகழ்ந்து எடுக்கப்பட்டு உள்ளதைக் காணலாம்.சுடுமண் செங்கல், பரந்த பெரிய மண் கற்கள், கருங்கற்கள் கொண்டு ஒரு பாறையை ஒட்டி இக்கோயில் அமைகிறது.

நீண்ட வேலாயுதம் நடப்பட்டு உள்ளது.சில உடைந்த கற்களும் கோயில் பகுதிகளும் கவனம் இல்லாமல் உள்ளன.

சிவன், துர்கை, முருகன் என மூன்று பெரிய தெய்வங்களுக்கும் வழிபாடு செய்த மக்களின் சமயநெறியும், பல்லவனின் சிற்பக் கலை ஈடுபாடும், பக்தியும் சிந்திக்க உரியவை.

எதை கொண்டு செதுக்கினர்?

எதைக் கொண்டு அளந்தனர்?

எதைக் கொண்டு தீட்டினர்?

எத்தனை காலம் பாடுபட்டனர்?

எத்தனை பேர் உழைத்தனர்?

என்னவெல்லாம் திட்டம் வைத்து இருந்தனர்?

எவர் எல்லாம் மேற்பார்வை பார்த்தனர்?

எதை எல்லாம் த்யாகம் செய்தனர்?

மன்னன் என்ன கூலி தந்தான்?

இதை எல்லாம் யோசித்தால் அப்பகுதியைத் தூய்மையாக வைக்கச் சில முட்டாள்களுக்கு அணு அளவேனும் அறிவு வரும்!

I thank the photographer[?] who helped me to repair my camera and guard who directed me to excavated Murugan temple today.

Dr.M.Madeswaran., Madras, 6.2.2015

A king who loved his society like a mother - Nandh...
Mahabalipuram - a guide
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries