Mahendra Verma Pallava - 6th century A.D

Sakthi Foundation

மகேந்திர வர்ம பல்லவன் [கி.பி 6]

பல்லவ மன்னர்களுள் சிலர் மிகவும் புகழ் பெற்றவர்கள்.அவர்களுள் ஒருவர் மஹாபலிபுரத்துச் சிற்பங்களுக்கும், குடைவரைக் கோயில் கட்டிடக் கலைக்கும் வித்திட்ட மகேந்திர வர்மன் ஆவார்.அவரது வரலாற்றை மக்களுக்கும், மாணாக்கருக்கும் எளிமையாக இப்பகுதி எடுத்துக் கூறுகிறது.

மகேந்திரனின் தந்தை...

இவரது தந்தை சிம்ம விஷ்ணு பல்லவன்.

இவர் சோழ தேசம், களபரர், மாளவம், சேர தேசம், பாண்டிய தேசம், இலங்கை ஆகிய பகுதிகளை வெற்றி கொண்டு தன் பல்லவ சாம்ராஜ்ய ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான்.ஆந்திராவின் க்ருஷ்ணா ஆற்றங்கரை முதல் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் வரை இவன் பல்லவ தேசத்தை விரிவு செய்தான்.

இளவயது யுவராஜன்...

இவன் மகன் மகேந்திரன் இளைய வயதில் அதிகம் ஆந்திராவிலேயே வாழ்ந்தான்.

அப்போது குண்டூர் மாவட்டம் சேஜர்லா என்ற ஊரில் ஒரு சிவன் கோயிலைப் பழுது பார்த்தான் என்று கல்வெட்டு கூறும்.அக்கோயில் இன்றும் உள்ளது.அதன் பெயர் கபோதேஸ்வரர் கோயில். இதன் மூலம் மிகச்சிறிய வயதிலேயே கட்டிடக் கலையிலும் சமயத்திலும் அவனுக்கு இருந்த ஆர்வம் தெரிகிறது.

தன் அப்பாவின் மரணத்துக்குப் பின் மகேந்திர வர்மன் காஞ்சிபுரத்துக்கே வந்து முடிசூடி மன்னன் ஆனான்.கி.பி 600 - 630 வரை அவன் மன்னனாக இருந்துள்ளான்.இவன் மகன் தான் மஹாபலிபுரத்தில் பல வேலைகளைச் செய்த முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன்.

தமிழ், வடமொழி, தெலுங்கு, பாலி, ப்ராக்ருதம் ஆகிய மொழிகளை மகேந்திரன் கற்றான்.

வடமொழியில் இலக்கியங்கள், இசைப்பாடல்கள் மற்றும் நாடகங்கள் எழுதும் அளவுக்கு மொழித்திறன் கொண்டு விளங்கினான்.

”மத்த விலாஸம்” என்பது இம்மன்னன் எழுதிய மிகவும் நகைச்சுவை கலந்த நாடகம் ஆகும்.இதன் மூலம் அவனுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு புரிகிறது.மேலும் சமூஹத்தில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கிறான்.அதன் மூலம் இவன் மக்களின் மீது கொண்ட கவனமும் தெரிகிறது.

புள்ளலூர்ப் போர்

அமைதியை விரும்பும் மன்னனுக்கு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி மூலம் ஆபத்து வந்தது.கி.பி 610ல் அவன் ஆந்திராவின் பல பகுதிகளைக் கைக்கொண்டான், காஞ்சிபுரத்தைத் தாக்கினான்.அப்போது மகேந்திர வர்மன் புலிகேசியைப் புள்ளலூர் என்ற ஊரில் போரிட்டுத் துரத்தினான்.அவ்வூர் இன்றும் காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது.ஆனால் புலிகேசி சும்மா இருக்கவில்லை, அடிக்கடி தொந்தரவு செய்தான்.

கல்வெட்டு வர்ணிக்கும் போர்...

”பல்லவ வீரர்கள் என்ற குளிர்பனியை சாளுக்கியப் புலிகேசி என்ற சூரியன் ஒன்றும் இல்லாமல் செய்தது.

காற்றில் தூசிகள் பறப்பதைப் போல் வெகு எளிதில் புலிகேசி காஞ்சிபுரத்துக்குள் நுழைந்தான்.ஆனால் இந்திராம் மகேந்திரனைப் போல வீரம் கொண்ட மகேந்திர பல்லவன் அவனை வெற்றி கொண்டு விட்டான்”

மகனுக்கு ஏற்ற வேலை...

தக்க வயது வந்த தன் மகன் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவனுக்கு இளவரசு பட்டம் சூட்டி மாமல்லபுரத்தில் இருந்து கடல் வாணிபத்தைக் கண்காணிக்க வைத்தான் மகேந்திர வர்மன்.

அதுவரை மாமல்லபுரம் ”நீர்ப்பெயற்று” என்றே வழங்கி வந்தது.நரசிம்ம வர்மன் சிறந்த மல்லனாகப் பட்டம் பெற்றதைக் கொண்டாடும் வகையில் மாமல்லபுரம் என்று பெயரிட்டான் மகேந்திர வர்மன்.தன் மகனின் வளர்ச்சியில் மிகவும் கவனம் கொண்டு இருந்தான் மகேந்திரன்.

பல ஊர்களை அமைத்த மன்னன்...

காஞ்சிக்கு அருகில் உள்ளது மாமண்டூர்.

அவ்வூரில் மகேந்திரன் மழை நீரைத் தேக்கி வைக்கும் பெரிய ஏரி ஒன்றை உண்டாக்கினான்.அது இன்றும் உள்ளது.அதற்குச் சித்ரமேகத் தடாகம் என்றும் அழகிய பெயரை வைத்தான்.

மாமண்டூருக்கு அருகில் மகேந்திர மங்கலம் என்ற ஊரை உண்டாக்கினான்.

சென்னைக்கு அருகில் வாலாஜா பேட்டைக்கு அருகே மகேந்திரவாடி என்ற ஊரையும் அவ்வூரில் ஒரு பெரிய ஏரியையும் உருவாக்கினான்.

சோழ தேசத்தில் கடற்கரைப் பகுதியில் மகேந்திரப்பள்ளி என்ற அழகிய சிவன் கோவிலை உருவாக்கினான்.அதை ஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளார்.

சிறப்புப் பெயர்கள்:

மகேந்திர விக்ரம வர்மன், மகேந்திர போத்தரசன், பகாப்பிடுகு, லலிதாங்குரன், குணபரன்,மத்தவிலாஸன், அவனிபாஜனன், சத்யசந்தன், புருஷோத்தமன், சத்ருமல்லன், சங்கீர்ண ஜாதி, சித்ரகாரப்புலி, சேதகாரி, விசித்ரசித்தன், அலுப்த காமன், கலகப்ரியன், அபிமுகன், மகா மேகன், நரேந்திரன்.

கலைஞர் மகேந்திரன்

மகேந்திர பல்லவன் இசை, ஓவியம், சிற்பம் ஆகிய நுண்கலைகளில் ஆர்வம் கொண்டு இருந்தான்.

மத்தவிலாஸம் - நாடகம், தக்ஷிண சித்ராக்யம் - ஓவிய நூல், கந்தர்வ சாஸ்த்ரம் - இசை நூல் ஆகியன மகேந்திரன் எழுதிய மிக முக்கிய நுண்கலை நூல்கள்.

தமிழகத்தைக் கோயில்களுக்குப் பெயர் சிறக்க வைத்த மன்னன்...

குறிப்பாக இவன் கட்டிடக்கலையில் மாற்றங்கள் கொண்டு வந்தான்.தரமான செங்கற்கள் கொண்ட கோயில்களையும் எழுப்பினான்.அவற்றுக்கு ”மண் தளி” என்று பெயர். [தளி - சிவன் இருக்கும் கர்ப்பக்ருஹம்]

இவன் காலம் வரை, தமிழகத்தில் பல கோயில்கள் மண், செங்கல், கலவை, மரத்தால் உருவாக்கப்பட்டன.அவை அடிக்கடி பழுதுபட்டன.

வடதேசத்தின் அஜந்தா எல்லோரா குகைக்குடைவரைக் கோயில்களை சமண முனிவர்கள், பெளத்த முனிவர்கள் மூலம் கேள்விப்பட்டு அதை அறியத் தன் தேசத்து அறிஞர்களை, சிற்பிகளை, ஓவியர்களை, பொறியாளர்களை அனுப்பினான் என்று தெரிகிறது.அவர்கள் அவற்றின் நுட்பங்களை அறிந்து வந்து தமிழகத்தில் இயற்கை இடம் கொடுத்த மலைகளில், பாறைகளில் குடைவரைக் கோயில்களை உண்டாக்கினர்.சுமார் ஐம்பது குடைவரைக் கோயில்கள் தமிழகத்தில் இவன் காலத்தில் உருவாயின.

[மாமல்லபுரம், வல்லம், திருச்சி மலைக்கோட்டை, மண்டகப்பட்டு, மாமண்டூர், தளவானூர், மகேந்திரவாடி, மேலைச்சேரி, சித்தன்ன வாசல், சீயமங்கலம், குரங்கணில் முட்டம், சிங்கவரம், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம் ஆகிய ஊர்களில் இன்றும் அழியாமல் மகேந்திர வர்மன் அமைத்த குடைவரைக் கோயில்கள் உள]

சமயம்

இவன் காலத்தில் தான் காஞ்சிபுரம் கல்வியில் சிறந்ததாக விளங்கியது.அனைத்து மதங்களையும் கற்றுக் கொடுக்கும் மடங்கள் நிறைந்து இருந்தன.புத்த மதம் மாமல்லபுரம் வழியே கிழக்கு நாடுகளுக்கும் பரவியது.புத்தம், சமணம், சைவ, வைஷ்ணவம் மற்றும் சக்தி வழிபாடு அதிகமாக இருந்தது.காஞ்சிபுரத்தையே கோயில்களின் நகரமாக மாற்ற ஆரம்பித்தான் மகேந்திரன் எனலாம்.

முதலில் சமணனாக இருந்த மகேந்திரன் அப்பர் மூலம் சைவனாக மாறினான்.பல சிவன் கோயில்களை எழுப்பினான்.அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோர் இம்மன்னன் காலத்தில் காஞ்சியில் வாழ்ந்தனர்.அப்பர் மடம் நடத்தினார்.

குடைவரைக் கோயில்களில் உள்ள சுவையான தகவல்கள்:

Rockfort city ஆன திருச்சி மலைக்கோட்டைக் கல்வெட்டு என்ன கூறுகிறது?

”சமண சமயத்தை விட்டு சைவ சமயத்துக்கு மாறிய மகேந்திரன் சோழ தேசத்துக்குக் கிரீடம் போல் விளங்கும் மலைக்கோட்டை மேல், குகைக்குள் சிவனுக்கு ஆலயம் செய்தான்.

அழகிய காவிரியைப் பார்த்து, கங்கையைத் தலையில் சூடிய சிவன் எங்கே காவிரியையும் தலையில் சூடிடுவாரோ என்று சந்தேஹித்து, பார்வதி இம்மலையில் தங்கியுள்ளாள்.

மகேந்திர பல்லவன் சிவனுடன் அழியாப் புகழ் கொள்ள தன் அழகிய உருவத்தையும் குகைக்குள் செதுக்கியுள்ளான்.

தன் மனதில் சதா சிவனை பஜிக்கும் மகேந்திரன் மிகவும் பக்தியுடன் இந்த குகைக்கோயிலை அமைத்துள்ளான்.

தரையில் நின்று பார்த்தால் காவிரியின் அழகும் பெருமையும் விளங்காது என்று சிவன் சொல்ல, அவருக்கு மலை மீது குகையில் கோயில் வைத்தானோ?

இதற்கு ”லலிதாங்குர பல்லவேஸ்வர க்ருஹம்” என்று பெயர் விளங்குகிறது”

விழுப்புரத்துக்கு அருகில் உள்ள மண்டகப்பட்டுக் கல்வெட்டு தரும் சில உண்மைகள்:

”செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமலும் ப்ரம்ம ஈஸ்வர விஷ்ணுகளுக்கு விசித்ரசித்தனால் அமைக்கப்பட்ட கோயில்”

தளவானூர்க் கல்வெட்டு [செஞ்சிக்கு அருகில் உள்ள கிராமம்]

”தன் படை வீரர்களால் பகைவர்களை அடக்கிய சத்ருமல்லன் சிவனுக்கு நன்றியாக அமைத்த சத்ருமல்லேஸ்வரம்”

வாலாபேட்டைக்கு அருகில் உள்ள மகேந்திரவாடிக் கல்வெட்டு:

”மகேந்திரவாடியில் மகேந்திர தடாகம் அருகில் உலக மக்கள் கண்டு மகிழும்படி அழகு மிகு முராரியான விஷ்ணுவுக்கு மகேந்திர விஷ்ணு க்ருஹத்தை மகேந்திர பல்லவன் அமைத்தான்”

மாமல்லபுரத்தில் மகேந்திரன்

மாமல்லபுரத்தை உலகம் போற்றும் சிற்பக் கருவூலமாக மாற்றிய பெருமை கொண்டவன் மகேந்திரன்.அவன் எழுப்பிய மூன்று கோயில் அமைப்புகள் மாமல்லபுரத்தில் உள்ளன.

கோடிக்கால் துர்கை மண்டபம், சகர ராஜ சிற்பம் [பகீரதன் தவம்], தர்மராஜா ரதக்கோயில் எனப்படும் மும்மூர்த்தி ரதம் [பாண்டவர் ரதக்கோயில்]

முற்காலத்தில் தமிழகத்தை ஆண்டு, கோயில் கட்டிடக் கலைக்கும், ஓவியத்துக்கும் புதிய பரிணாமத்தைக் கொடுத்த மகேந்த பல்லவன் புகழ் தமிழகத்துக் கோயில்கள் உள்ள வரை இருக்கும்.வீணாக மண்ணாசை கொண்டு போரில் தன் வெறிச் செலுத்தாமல் இயற்கை அளித்த மலைக்குகைகளில் இறைப்பணி செய்து கலைக்கும், சமயத்துக்கும் உறுதுணை செய்த இம்மன்னன் இல்லை என்றால் தமிழகத்தில் உயர்ந்த கோயில் கலை இல்லை!

Mamallapuram or Mahabalipuram - a name research
Madurai’s Talk....A students creation about an anc...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries