Sakthi foundation

பல்லவ நாடு

தமிழகத்தின் வடக்குப் பகுதியைப் பழங்காலத்தில் தொண்டை நாடு என்று மக்கள் அழைத்தனர்.அப்பகுதியைத் ”தொண்டை மான்” என்ற சிறப்புப் பெயர் கொண்ட பல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டப் பகுதிகள் அக்காலத்துத் தொண்டை தேசம் ஆகும். காஞ்சி மரங்கள் நிறைந்த வனப்பகுதியைத் திருத்தி ஊரை அமைத்ததால் ’காஞ்சி’ என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வூரைக் ‘’கச்சி’’ என்று மிகப் பழைய தமிழ் இலக்கியங்கள் அழைக்கும்.

தொண்டை மன்னர்களை வீழ்த்தி சில வேறு வடதேசத்து மன்னர்கள் இம்மண்ணைக் கைக் கொண்டதுடன் தமிழகத்தின் சோழ, பாண்டிய தேசங்களை பிடித்துக் கொண்டனர்.

சுமார் கி.பி 5ஆம் நூற்றாண்டில் வடகிழக்குப் பகுதியில் இருந்து வந்த பல்லவ அரசன் இப்பகுதியைக் கைக்கொண்டான். சோழருக்கும் பாண்டியருக்கு அவரவர் நாட்டைத் திருப்பி அளித்தான்.

அப்போது காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ மன்னர்கள் பலர் பல்லவ தேசத்தை ஆண்டனர்.கி.பி 5 - 9 நூற்றாண்டுகள் வரைப் பல்லவர்கள் வடதமிழகத்தை ஆட்சி செய்தனர்.

 அவர்கள் மாமல்லபுரத்தைத் துறைமுகம் ஆக்கிக் கொண்டனர்.அதன் மூலம் க்ரீஸ், ஈஜிப்ட், சைனா, அரேபியா, இலங்கை, ஜாவா, சுமத்ரா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் கடல் வாணிபம் செய்து பல்லவ தேசத்தைப் பணக்கார தேசமாக மாற்றினர்.

பல்லவ மன்னர்கள் மக்களை நன்கு பாதுகாத்தனர்.தமிழ், சம்ஸ்ருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்யத்துவம் தந்தனர்.சில பல்லவ மன்னர்கள் சம்ஸ்க்ருதத்தில் நாடகங்கள் கூட எழுதி உள்ளனர்.

தங்களைப் பற்றி, தங்கள் பணிகளைப் பற்றி, முக்கியமான நாட்டு நடப்புகள் பற்றிக் கோயில் சுவர்களில் கல்வெட்டு மூலம் பதிவுகள் செய்தனர்.செப்புத் தகடுகளில் எழுதும் முறையையும் கையாண்டனர்.

பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்கள் அதிகமாக மக்களால் பின்பற்றப் பட்டன.மத வேறுபாடு இல்லாமல் மன்னர்கள் வாழ்ந்தனர்.

மகேந்திர பல்லவன்

கி.பி ஏழாம் நூற்றாண்டில் பல்லவ தேசத்தை ஆண்ட மகேந்திர பல்லவன் மிகவும் நல்லவன்.அவன் மஹாராஷ்ட்ராவில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்கள், அதில் உள்ள அழகிய சிலைகள், ஓவியங்கள் பற்றிக் கேள்விப் பட்டு அவற்றைப் போலவே தன் நாட்டிலும் செய்ய ஆர்வம் கொண்டான்.

தன் பல்லவ தேசத்தில் உள்ள பல ஓவியர்களையும் சிற்பிகளையும் அங்கு அனுப்பி அவற்றைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டான்.பின்னர் தன் தேசத்தில் எங்கெல்லாம் மிகப் பெரிய பாறைகளும் , மலைகளும் உள்ளனவோ அவற்றில் குடைவரை குகைக் கோயில்கள், ஓவியங்கள் செய்தான்.

இவன் மல்யுத்தத்தில் மிகவும் கெட்டிக்காரன்.மக்கள் அவனை ”மாமல்லன்” என்று அழைத்தனர்.தன் துறைமுக ஊருக்கு அவன் ’மாமல்லபுரம” என்ற பெயரை வைத்தான்.அவ்வூரின் இயற்கையான பெயர் ’கடல் மல்ல” ஆகும்.

 குறிப்பாகத் தன் துறைமுக நகராகிய மல்லையில் பல பெரிய பாறைகளையும் கற்குன்றுகளையும் அழகிய சிற்பங்களாகவும் கோயில்களாகவும் உருவாக்கினான்.

பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிவன் கோயில்கள் ”பல்லவனீச்சுரம்” எனப்படும்.விஷ்ணு கோயில்கள் ”விண்ணகரம்” எனப்படும்.

திருச்சிமலைக்கோட்டை, நாமக்கல், சித்தன்ன வாசல், காஞ்சிபுரம், மல்லை ஆகிய பல ஊர்களில் பல்லவர்கள் அமைத்த கற்கோயில்களும் குகைக் கோயில்களும் உள்ளன.

பல்லவர்கள் சிவபெருமானின் நந்தியைக் கொடிச் சின்னமாகவும், சிங்கத்தை அரச முத்திரையாகவும் கொண்டனர்.

முழுக்க முழுக்க கருங்கற்களைக் கொண்டு கோயில்களை உருவாக்கும் கட்டிடக் கலையைப் பல்லவர்களே தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தனர்.புராண இதிகாசக் காட்சிகளைச் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தும் கலைகளை அதிக அளவில் அறிமுகம் செய்தனர்.

_____________________________________

நகரேஷு காஞ்சி

பாரத தேசத்தில் மக்களுக்கு வாழ்க்கையில் நல்வழிகாட்டும் பெரியோர்கள் அதிகம் வாழ்ந்த நரகங்கள் ஏழு.அவை சப்த மோக்ஷ புரிகள் எனப்படும்.அதில் ஒன்று காஞ்சிபுரம்.

வடமொழியின் மிகச் சிறந்த புலவன் மஹாகவி காளிதாஸன் காஞ்சிபுரத்தை ”நகரேஷு காஞ்சி” - நகரம் என்றால் அது காஞ்சியே என்று பாடியுள்ளார்.

பாரவி, பாணினி ஆகிய மிகப்பெரிய வடதேசத்துப் புலவர்களும், சைனாவின் ஹ்வாங் ஸ்வாங் போன்ற பல வேற்று தேச அறிஞர்களும் காஞ்சிபுரம் வந்து வாழ்ந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தின் சிறப்பை சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆகிய காப்பியங்கள் எடுத்துக் கூறும்.குறிப்பாக மணிமேகலையில் இவ்வூரின் அழகு, அமைப்பு பற்றி  அதிகம் பேசப்படுகிறது.

நமது காலத்தில் கல்கி க்ருஷ்ணமூர்த்தியின் புகழ் பெற்ற சரித்திர நவால் சிவகாமி சபதம்.அதில் இவ்வூர் பற்றிய மிக அதிகமான தகவல்களை ஆசிரியர் எழுதியுள்ளார்.

மணிமேகலை - சோழ தேசத்துப் பூம்புகாரில் வாழ்ந்த கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை தன் 18ஆம் வயதில் புத்த துறவி ஆனாள். இவ்வூரில் தங்கி புத்த மதம் பற்றிய கல்வி கற்றாள். அகிம்சாவாதம் மூலம் சிறையில் வாழ்ந்த பல கைதிகளைத் திருத்தினாள்.பின்னர் அக்ஷய பாத்திரம் மூலம் ஆதரவு அற்றோர்க்கு அன்னதானம் செய்த பெருமை இவ்வூருக்கே உண்டு.

ஆன்மீக பூமி - ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார் இவ்வூரில் அவதரித்தார்.பல ஆழ்வார்கள் இவ்வூரில் உள்ள விஷ்ணு கோயில்களைப் பாடி உள்ளனர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், பல்லவ மன்னன் காடவர்கோன், பட்டிணத்தார், அருணகிரியார் ஆகியோரும் பல பாடல்களால் இவ்வூரில் உள்ள சிவன் கோயில்களைப் பாடி உள்ளனர்.

திருத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், ஐயடிகள் காடவர்கோன் போன்ற சிவபக்தர்கள் இவ்வூரில் வாழ்ந்தனர்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீக ஞானி ஸ்ரீஆதி சங்கரர் காஞ்சியில் மடம் ஏற்படுத்தி மக்களுக்கு நன்மைகள் செய்தார்.இன்றும் அம்மடம் இயங்கி வருகிறது.

மேலும் ஆன்மீக குருவான ஸ்ரீமத் ராமானுஜர் [12 கி.பி], வேதாந்த தேசிகர் [14 கி.பி] ஆகியோர் இவ்வூரில் பலகாலம் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டு செய்தார்கள்.

நமது காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா இவ்வூரில் பிறந்து வாழ்ந்தவர்.அவரது வீடு இன்று அழகிய பார்வை அகமாக மாற்றப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் முதல் கல் கோயில்

 தமிழகத்தில் முதல் கல் கோயில் காஞ்சியில் உள்ள கைலாச நாதர் கோயில்.

இதை மாதிரியாகக் கொண்டே பின்னர் பல அரசர்களும் பல வகையில் கற்கோயில்கள் அமைத்தனர்.குறிப்பாக மூலஸ்தானத்தை முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டும் அமைப்பைப் பல்லவர்களே அறிமுகம் செய்தனர்.

கல்லூரிகள் - அக்காலத்தில் காஞ்சியில் புத்த மதக் கல்லூரி, சமண மதக் கல்லூரி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் இருந்துள்ளன.குறிப்பாக கிழக்கு தேசங்களில் இருந்து புத்த மதத்தை அறியப் பலர் வந்துள்ளனர்.

மேலும் காஞ்சியை சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, பெளத்த காஞ்சி, ஜைன காஞ்சி என்று அக்காலத்தில் பிரித்தனர்.சுமார் 1000 பெரிய சிறிய கோயில்கள் இருந்துள்ளனர்.இன்று சுமார் 100 கோயில்கள் உள்ளனர்.

ஊரின் மிக முக்கியமான கோயில் காமாக்ஷி அம்மன் கோயில் ஆகும்.இதைக் காம கோட்டம் என்று பழைய நூல்கள் அழைக்கும்.

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமி ஸ்தலம் இங்குள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் ஆகும்.நம் நாட்டின் மிகப் பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று.மண்ணால் ஆன சிவலிங்கமும், 4000 ஆண்டுகள் வயதான மாமரமும் இங்கு உள்ளன.

காஞ்சியில் மொத்தம் 18 விஷ்ணு கோயில்கள் உண்டு. அவற்றுள் ஸ்ரீவரத ராஜ பெருமாள் கோயில் மிகவும் பெரியதாகும். உலகளந்த பெருமாள் கோயிலில் பூஜை செய்த தமிழ் அறிஞர் பரிமேல் அழகர் என்பர் கி.பி 10ஆம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு அருமையான விளக்க உரை எழுதினார்.அதையே இன்றும் நாம் படிக்கிறோம்.

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயில் குமர கோட்டம் ஆகும்.இங்கு  

தான் கி.பி 10ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தைத் தமிழில் எழுதினார்.

காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கும், பச்சரிசி இட்லிக்கும் புகழ் பெற்றது.புகையை விட மெல்லிய பட்டு ஆடைகளைப் பல்லவர்கள் மேற்கு நாடுகளுக்குக் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் இன்று ஒரு மாவட்டத் தலைநகர்.இவ்வூர் சென்னையில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 72 Km தொலைவில் அமைந்துள்ளது.ஆந்திர கர்நாடக மாநிலப் பேருந்துகள் அதிகம் வரும்.மெட்ரோ மின்சார ரயிலும் சென்னையில் இருந்து உள்ளன.