Pallikoodam [School] - Ancient Jain's social awareness and selfless service

பள்ளிக்கூடம்

தமிழ் மொழியில் இவ்வார்த்தை அன்றாடம் மக்களுக்கு வாயில் அவசியம் சொல்லப்பட வேண்டிய வார்த்தை ஆகிவிட்டது.

School என்ற ஆங்கில வார்த்தையின் மறுமொழி வார்த்தை தான் பள்ளி.

ஆனால் இது தமிழ் மொழிச் சொல் அல்ல? பின்?

இது இந்தியாவின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்றான பாழி மொழிச் சொல்.

சரி இது எப்படி நம்மூருக்குள் வந்தது?

பாரத தேசத்தின் மிகப் பழைய சமயங்களுள் ஒன்று சமணம்.இதுவே ஜைன மதம் ஆகும்.ரிஷிப தேவரால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நெறிப்படுத்தப்பட்ட சமயம் சமணம்.

சதா சண்டை, பொருளாசை, மண் வெறி, சுயநலமான வாழ்க்கை,வன்முறை, உயிர்ப்பலி, கண்மூடித் தனமான மத நம்பிக்கைகள், உயிர்ப்பலிகள், சாதி இன மொழி வேற்றுமைகள் பாரத தேசத்தில் நிலவிய போது, மனிதனின் இன்ப துன்பங்களுக்கு விடிகால் தேடி ரிஷிப தேவர் சில உண்மைகளைக் கண்டறிந்து வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கிய சமயம் இதுவாகும்.

தமிழகத்தில் சமணம் என்றே ஜைன மதம் அழைக்கப்படுகின்றது.அம்மதத்தை மக்கள் முன் வளர்த்தவர்கள் ”தீர்த்தங்கரர்” என்று மரியாதையுடன் அழைக்கப் படுவர்.அதவாது ஆச்சாரியர்கள் என்று பொருள்.

சமண சமயத்தில் ரிஷிப தேவர் தொடங்கி மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர்.அவர்களுள் கடைசியானவர் வர்த்தமான் மஹாவீர் ஆவார்.

புத்தருக்கு முன்பே மஹாவீர் தோன்றி இச்சமயம் மூலம் மக்களை நெறிப்படுத்தினார்.

சமண சமயம் தமிழகத்தில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தது.ஆனால் சில காரணங்களால் கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் அதன் செல்வாக்கு குறைந்தது.

பின்னர் மீண்டும் கி.பி 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை மறுமலர்ச்சி பெற்றது.ஆனால் இன்று சமணம் தமிழகத்தில் வெறும் கோயில், குகைப்பள்ளிகள், தொல்பொருள் காட்சிப் பொருள்கள் வடிவில் தான் உள்ளது.மிக மிகக் குறைந்த அளவிலேயே சமணம் தமிழகத்தில் உள்ளது.ஆனால் பாரத தேசத்தின் வடபகுதி பலரால் பின்பற்றப் படுகின்றது.

இந்த சமண சமயம் மக்களுக்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறியது.அது என்ன?

நல்லது செய்தால் நல்லது நடக்கும் - தீயது செய்தால் தீயதே நடக்கும்.இதையே வினைப்பலன் என்று கூறுவர்.இதையே பாரத தேசத்தின் அனைத்துச் சமயங்களும் கூறினும், சமணம் மக்களுக்கு ஒரு வேகத்தடை போடுவது போல் இவ்வுண்மையை மட்டும் கையில் எடுத்துக் கொள்கிறது.

மக்களை நெறிப்படுத்த ஐந்து முக்கிய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளை வகுத்தது.காரணம் அவ்வைந்து காரணங்கள் மூலமே மனிதன் தீவினைக்கு இட்டுச் செல்லப் படுகின்றான்.

அவை:

உயிர்க்கொலை

போதை

பொய்யாமை

தனிமனித ஒழுக்கம் [பிறர் மனை விரும்பாமை]

அதீத ஆசை [எதன் மீதும்]

தெய்வங்களை வேண்டி, சடங்குகள் செய்து, உயிர்ப்பலி பல செய்து, போராலும் களவாலும், நேர்மையற்ற செயல்களாலும் ஈட்டிய பொருளை என்ன செய்வது?எந்த நேரத்திலும் முடிந்து விடும் மனித வாழ்க்கையை சமணம் அதிகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

உடல்-இளமை-பொருள் நிலையாமையை முன் வைத்தே சமயக்கருத்துகள் வெளிப்பட்டன.

கண்மூடித்தனமான சடங்குகளை ஒதுக்கியது.

உருவ வழிபாடுகளை ஒதுக்கியது.

சாதி-இனம்-மொழி-பால் வேற்றுமைகளை ஒதுக்கியது.

மனிதன் வினைகளில் இருந்து விடுபட்டு நித்யமான ஆனந்தத்தில் லயிக்கும் முக்திக்கு ஆன்மீகப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதையே உயர் குறிக்கோளாகக் கூறியது.

அதையே நிர்வாணம் என்று சமணர் குறிப்பர்.

எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விட்ட நிலையே நிர்வாணம் ஆகும்.

அதன் அடையாளமாக ஆண் சமணத்துறவிகள் திகம்பரராக - ஆடையே இல்லாதவராக வாழ்ந்தனர்.

பெண்களும் துறவிகள் ஆகும் சுதந்திரத்தை சமணம் அளித்தது.

பொருள் தேடியதன் பலனே அதைக் கொண்டு நான்கு வகை சமூஹ சேவை செய்யவதற்கே என்று உணர்த்தியது சமணம்.

அவை: அன்ன தானம் - அறிவு தானம் - அடைக்கல தானம் - ஒளஷத தானம்.

அன்ன தானம் - கைவிடப்பட்ட மக்களுக்கு உயிர் வாழ உணவிடல்.

அறிவு தானம் - அடிப்படைக் கல்வி மற்றும் வாழ்க்கையின் தர்மத்தை உணர்த்தும் கல்வியைத் தருதல்.

அடைக்கலம் - வாழ்க்கைத் துன்பத்தாலும், சமூஹக் கொடுமைகளாலும், போர் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருதல்

ஒளஷதம் - மிகச் சிறந்த மர்ருத்துவத்தை நோயாளிகளுக்கு அளிக்கும் மருத்துவ சேவை.

ஒதுக்கப்பட்டவர்கள், ஏழைகள், உயர்குடி வாணிபர்கள், உயர்ந்த உழவர்கள் ஆகியோரை இச்சமணம் கவர்ந்தது.

அக்காலச்சூழலுக்கு மிகவும் ஹிதம் தரக்கூடியதாக தர்ம நெறிகள் விளங்கின.கண்டிப்புடன் வலியுறுத்தப்பட்ட சடங்குகள், சம்ப்ரதாயங்கள் ஆகியவற்றில் இருந்தும் குறிப்பாக சாதி வேற்றுமையில் இருந்தும் விடுதலை பெற எண்ணிய மக்கள் சமணத்தில் சேர்ந்தனர்.

தமிழக மன்னர்கள் சமணத்தை ஏற்றுக் கொண்டு ஆதரித்தனர்.குறிப்பாக மூவேந்தர்களுள் பாண்டிய வேந்தர்கள் பல காலம் சமணத்தைப் பின்பற்றினர்.அதனால் சமண சயத்துக்குத் தமிழகத்தில் பாண்டிய தேசத்திலேயே அதீத செல்வாக்கு நிலவியது.

அதை எதன் மூலம் உணரலாம்?

தமிழகத்தில் பல இடங்களில் சமணர்களின் வழிபாட்டுக் கோயில்கள், மலைகளில் குகைக்கல்வெட்டுகள், குகைகளில் படுக்கைகள், புதை பொருள்கள், இலக்கியங்கள் ஆகியன மூலம் சமணத்தின் தர்ம நெறியினை உணரலாம்.

சமண சமயத்துக்கும் கொங்கு நாட்டுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.அதே போல் பாண்டிய நாடு சமணத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த காலத்தின் பல அடையாளங்கள் இன்று எஞ்சியுள்ளன.

அவற்றின் மூலம் இக்காலச் சமூஹம் எதை உணர்தல் வேண்டும் என்பதையே இப்பகுதியின் நோக்கமாகக் கொண்டோம்.

பாண்டிய நாடு என்பது இன்றைய திண்டுக்கல்-மதுரை-தேனி-சிவகங்கை-ராமநாதபுரம்-விருதுநகர்-நெல்லை-தூத்துக்குடி-கன்யாகுமரி மாவட்டங்கள் ஆகும்.அதுவே அன்று பெரிய நாடும் ஆகும்.

அப்பகுதிகளில் பல இடங்களில் சமண சமயத்தின் சின்னங்கள் இன்றும் கிடைக்கின்றன.குறிப்பாக மதுரை மாநகரைச் சுற்றி எட்டு குன்றுகள் சமணத்தின் முக்கிய செயல்பாட்டு ஸ்தலங்களாக விளங்கியுள்ளன.அவற்றைப் பல அறிஞர்கள் ஆய்வுகள் செய்து பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அவற்றின் மூலம் இக்காலத்தில் நாம் அறிய வேண்டியது என்ன என்பதைப் பகிர்ந்து கொள்கிறோம்.

சமண சமயத்தைப் பரப்பிய குருமார்கள் பாலி-சம்ஸ்க்ருதம்-கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்று இருந்தனர்.

அவர்கள் பல உயர்ந்த சமய, மருத்துவ, நீதி, இலக்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

சமண சமயத்தைச் சேர்ந்த பல புலவர்களும் குருமார்களும் உயர்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலக்கியங்களை எழுதியுள்ளனர். [நாலடியார், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் பல]

தமிழ் மொழியில் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினர்.பல தரமான எளிய காலத்துக்கு ஏற்ற மாற்றங்களுடன் கூடிய இலக்கண நூல்கள் எழுதினர். [யாப்பெருங்கலக்காரிகை, நன்னூல்]

கல் சிற்பம், உலோக வார்ப்புக் கலை, ஓவியம் ஆகிய நுண்கலைகளுக்கு ஊக்கம் தந்தனர்.

சமூஹத்தில் பல தான தர்மங்களும் கொடைச்செயல்களும் செய்தவரை நன்றி மறவாமல் அவர்தம் பெயருடன் அவர்தம் செயலையும் கல்வெட்டாகப் பதித்தனர்.

மன்னர்களின் புகழை மட்டும் பாடும் காலத்தில் அவர்கள் தைரியமாக சமூஹத்தில் சில கொடைகள் செய்த ஆன்மீக அன்பர்களையும் கல்வெட்டின் மூலம் பதிவு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

திகம்பர அம்மணச் சமணர்கள் ஊருக்குள் வாழவில்லை.அவர்களால் புலன் அடக்கம் சிலருக்குச் சீர்கெடலாம் என்ற உண்மையை உணர்ந்தே ஊரின் ஒதுக்குப் புற மலைக்குகைகளில் வாழ்ந்தனர்.இவர்கள் வெளிப்படையான துறவறத்தை வற்புறுத்தினார்கள் என்பதற்கு சாட்சி இல்லை.

இல்லறத்தில் இருந்த படியே முக்திக்கு வழிகாட்டும் பல எளிய தர்ம நெறிகளை வகுத்தளித்தனர்.

ஆனால் தர்ம சிந்தனையில் மனம் லயிக்க இடைவிடாத சத்சங்கம் தேவை.[உபதேசம், ஆலோசனை, கலந்தாய்வு, உரையாடல் ஆகியன சத்சங்கம் ஆகும்]அவற்றின் பொருட்டு தாம் வாழ்ந்த குகைகளில் சத்சங்கக் கூட்டங்கள் நிகழ்த்தியுள்ளனர்.

பள்ளி ஆன பளி...

சத்சங்கம் நிகழ்ந்த இடங்களே பளி ஆகும்.அதுவே பள்ளி ஆனது.

உயர்ந்த வாழ்வியல் கருத்துக்களை அடிப்படைக் கல்வியுடன் கற்றுத்தரும் சமணக்குகைகள் பள்ளிகள் எனப்படும்.

மேலும் சமண குருமார்களின் கல்படுக்கைகள் பள்ளி எனப்படும்.இன்றும் பள்ளி அறை என்பது படுக்கை அறையின் பெயரே ஆகும்.

பள்ளிகளில் மருத்துவம், வான சாஸ்த்ரம், ஜோதிடம், சிற்பம், ஓவியம், இலக்கிய-இலக்கணம், நீதிவியல் போன்ற பல துறைகளில் நூல்கள் தமிழில் செய்யப்பட்டுள்ளன.

ஊர் மக்களின் ஒத்துழைப்பை சமண குருமார்கள் பெற்றுள்ளனர்.

ஊர்ப்பெரியவர்கள், வியாபாரிகள், பெரும் நில தனவான்கள் பள்ளிகளை உருவாக்கித் தங்கள் ஊரில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அவ்வாறு பள்ளிகளை உருவாக்கியவர்களின் பெயர்களும் செயல்களும் கல்வெட்டாகப் பதிவாகியுள்ளன.

தமிழ் நாட்டில் மிகவும் பழங்காலத் தமிழ்க்கல்வெட்டு கி.மு 2ஆம் நூற்றாண்டின் ஒரு சமண குகைக் கல்வேட்டே ஆகும்.அது மதுரைப் பகுதியில் இருந்தே கிடைத்துள்ளது.

ஒரு சமணப் பள்ளியை ஒரு மலைக்குகையில் உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் ஒரு சமூஹத்துக்கே உயர் வழிகாட்டிய நல்வினைப் பயன் மனிதனுக்குக் கிடைத்துள்ளது.

குகைகளில் பொதுவாகக் கல் படுக்கைகள், கல்வெட்டுகள், சமண தெய்வங்களின் வடிவம், குறியீட்டு ஓவியங்கள், தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.

பெரும்பாலான குகைகளின் மீது விழும் மழைத் தண்ணீர் வீணாகாமல் மலையின் கீழ் வாய்க்கால ஓடி சேமிக்கப்பட்டு rain water harvesting செய்யப்பட்டுள்ளது.

ஒளி - ஒலியைக் கைவிடாத சமணம்...

வெளிச்சத்தின் விஞ்ஞான பூர்வமான உண்மையை உணர்ந்த சமணரும் ஒளி வழிபாட்டைக் கைவிடவில்லை.பூக்கள் தூவிதல், நறும்புகை போடுதல், விளக்கு ஏற்றி வழிபடுதல் ஆகியன சமணத்தில் உள்ளன.பெண் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன.வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜீவாதார சக்தியை மனிதன் அதிகரித்துக் கொள்ள வேண்டும், அதற்கு ஜோதி முன் வழிபடுதல் அவசியம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தவே பல குகைப்பள்ளிகளில் தீர்த்தங்கரர் திருமேனிகட்கு முன் விளக்கு ஏற்றி முறையாக மந்திரங்கள் உச்சரித்து வழிபடும் சடங்கை வலியுறுத்தினர்.பல கல்வெட்டுகள் அத்தகைய விளக்கு ஏற்றிடத் தேவையான பொருளை தானம் செய்த கொடையாளிகளைப் பற்றியே உள்ளன.

சமண சமயத்தை வகுத்துக் கொடுத்த மஹான்கள் பல கருத்துக்களையும் சடங்குகள் மூலம் உணர்த்தினர்.பல குறியீடுகளையும் கொண்டு வந்துள்ளனர்.

அரசாங்கத்தின் மதிப்பையும் விருதையும் பெற்ற பல வணிகர்கள் தாம் சம்பாதித்த பொருளைக் கொண்டு சமணப் பள்ளிகளை ஏற்படுத்தி ஊருக்கே விழிப்புணர்வு உண்டாகக் காரணம் ஆகி இருக்கும் உண்மையை இக்கால மக்கள் உணர்தல் அவசியம்.

இன்றும் சரியாக உண்ண வழியில்லாத மக்களும், வறுமையால் நோய்க்கு மருத்துவம் செய்ய இயலாத ஏழைகளும், தரமான கல்வி இல்லாத ஊர்களும், ஆபத்தில் அடைக்கலம் தேடும் ஜனங்களும் உண்டு.அவர்களும் நாம் ஏதாவது ஒருவழி சமணத்தின் வழிநின்று கை கொடுக்க வேண்டும்.

குருமார்களை மிகவும் மதிக்கும் பண்பாட்டை உருவாக்கிய சமணப்பண்பை நாம் பள்ளிகளிலும் ஆன்மீகத்திலும் பின்பற்ற வேண்டும்.

மதுரைக்குச் செல்லும் போதும், மேறு ஊர்களில் பயணிக்கும் போதும் சமணச்சின்னங்களை அறிந்து சென்று காண்க.கணினியில் you tube மூலமாவது அவர்தம் பழமையை, சமூஹப்பொறுப்பை உணர்க்க.அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்போம்.

Dr.Pradheep Kumar - Dr.M.Madeswaran

Madras - 16.1.2015

Under the seas of Kanyakumari - Then Madurai and K...
History of Pallava dynasty - for students and comm...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries