Sakthi Foundation
”ஊர் கூடினால் தான் தேர் நகரும்” - தைப்பூசம் கட்டுரை


இன்று [24.1.2016] தமிழகத்திலும் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேஷிய தேசங்களில் முருகப் பெருமானுக்குத் தைப் பூசத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

நமது செந்துரையில் UNI5 CENTERன் சார்பில் பல ஆண்டுகள் முன் தைப்பூசம் ஒரு முறை மிக விமர்சியாகக் கொண்டாடப் பட்டது.

தற்போதும் பள்ளியில் முருகனுக்கு மிக விமர்சியாகத் தைப்பூசம் நடத்தப்பட்டது.

தை மாதம் என்பது தமிழகத்தில் அறுவடை முடிந்த காலம்.அக்காலத்தில் அதிகம் விவசாயிகள் வாழ்ந்த காலம்.அப்போது கையில் அறுவடையின் பலனாகப் பணமும் பொருளும் இருக்கும் காலம்.

அதனால் தான் தை மாதத்தில் அதிகம் திருமணம் வைத்தனர்.”தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியும் அதை அடுத்தே தோன்றியது.

தைப் பெளர்ணமி நாளில் பொங்கலுக்கு அடுத்து மக்கள் ஊர் தோறும் ஒன்று கூடித் தங்கள் தெய்வத்திற்கு நன்றி கூறும் விழாவே பூசம் எனலாம்.

பூசத்தில் மக்கள் குறிப்பாகப் பாத யாத்திரை செய்வதன் மூலம் உடலை ஆரோக்யத்தைப் புத்துணர்ச்சி பெற வைப்பர்.

மேலும் அப்பாத யாத்திரை போகும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடை, உணவு ஆகியன வழங்கிடுவர்.

தங்களை ஆளும் பரம்பொருளைத் தம் இஷ்ட தெய்வமாகக் கொள்ளும் மக்கள் அத்தெய்வத்தைத் திருத்தேரில் இருத்தி ஒன்று கூடி இழுத்துப் பெருமை செய்வர்.

பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற பல விழா நிகழ்வுகள் பூசத்தில் நிகழும்.

பால் குடம் - கால்நடைகளில், குழந்தைகளின் நலம், வயிற்றில் பால் வார்த்தால் போல் தன் ப்ரச்சனை தீரப் பெற்ற ஒரு பக்தன் தன் இஷ்ட தெய்வத்துக்குப் பால் குடம் எடுக்கிறான். மேலும் பால் த்யாகத்தின் சின்னம்.த்யாக உணர்வுடன் தான் குடும்பத்திலும் சமூஹத்திலும் மனிதன் வாழ்தல் அவசியம் என்பதைப் பால் குடம் குறியீடாக உணர்த்தும்.

காவடி - ”குடும்ப பாரத்தைத் தோளில் சுமக்கிறேன்” என்பத்து பலரின் வாக்கு.
விதவிதமான அழகிய காவடிகளை பக்தர்கள் தோள்களில் மாறி மாறிச் சுமந்து ஆடிப்படிச் சென்று இறைவனுக்கு அக்காவடி பாரத்தை இறக்குவது வழக்கம்.வாழ்க்கையின் அனைத்து விதமான ப்ரச்சனைகளுமே பாரம் தானே!? தன் தெய்வத்தின் அருளால் அப்பாரம் பால் போல், பூப்போல், மயிலிறகு போல் மென்மையாக மாறிட பால், மயில், புஷ்பக்காவடிகளை நேர்த்திக் கடன் செய்வதே ”காவடி எடுப்பு” ஆகும்.காவடியை அடிப்படையாகக் கொண்டு ஆடிப்பாட உருவானதே காவடிச்சிந்து ராகமும் இலக்கிய வகையும் ஆகும்.

அலகு குத்துதல் என்பது அக்யுபங்க்சர் மருத்துவத்துடன் தொடர்புடையது.தான் தன் உடல் என்ற சுய அடையாளத்தில் இருந்து பக்தன் வலியை மறந்து கூரிய வேலை முதுகிலும், வாயிலும் நாவில் குத்திக் கொள்வதே அலகு.

தைப்பூச விழா மிகச் சிறப்புடன் கொண்டாடப் பட்டதை ஞானசம்பந்தரின் மயிலாப்பூர் தேவாரம் பதிவு செய்கிறது.

தமிழ்த் தெய்வமாம் முருகனுக்கு மிக விமர்சியாகப் பூசம் கொண்டாடப் படுகிறது.

உயிர்க்கொலையை எதிர்த்து உள் ஒளியைக் காணத் தூண்டிய இராமலிங்க வள்ளலார் ஜோதியாகிப் பரத்துடன் கலந்த நாள் தைப்பூசமே ஆகும்.

”ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் ஓய்வு காலத்தில் பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் ஆன்மீக விழா பூசம் தான்.இதன் மூலம் அக்காலத்தும் இக்காலத்தும் குடும்பங்கள் ஒன்று கூடும் சமூஹ அமைப்பைக் காண்க.

மலேஷியாவில் பத்து மலைக் குகை முருகன் கோயிலில் பல லட்சம் அன்பர்கள் பூசம் கொண்டாடுவது வழக்கம்.உலகின் மிக உயரமான முருகன் சிலையும் இங்கு தான் அமைகிறது.

சிங்கப்பூரில் கொரியர்களும் சீனர்களும் பூச விழாவில் பங்கேற்பது வெகு இயல்பான ஆன்மீக ஒற்றுமைக்கான சான்று.

இலங்கையில் கண்டி கதிர்காமம் முருகன் கோயில் பூச விழாவிற்குப் பெயர் போனது.

அறுபடை வீடுகள், விஷ்ணு ஆலயங்கள் ஆகிய ஸ்தலங்கள் பூசத்தைக் கொண்டாடும்.

தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரை, வைகாசி விசாகம் ஆகியன இனி வரிசையாக வரும் தேரிழுக்கும் விழாக்கள் ஆகும்.பல ஊர் மக்களும் தத்தம் வசதிக்கும் காலத்துக்கும் ஏற்ப இம்மாதங்களில் ஒன்றில் தேர்த்திருவிழா எடுப்பது வழக்கம்.

வைகாசிக்குப் பின் பருவமழை ஆரம்பிக்கும் முன் மீண்டும் நிலப்பணிக்கு உழவர்கள் திரும்புவதோடு விழாக்கள் சற்று குறைவதைக் காண்கிறோம்.

தொழிலையும் இயற்கையையும் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டே பாரத தேசத்து விழாக்கள் அமைவன.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் தில்லைக்கூத்தனை ப்ரதிஷ்டை செய்த நாளும் தைப்பூசமே!

இன்று தைப்பூச விழாவை மக்கள் மிக ஆடம்பர விளம்பரத்துடன் பக்தி இல்லாமல் கொண்டாடுவதைக் காண்கிறோம்.

அமைதியாக, ஆழ்ந்த பக்தியுடன், விழிப்புணர்வுடன், கலை உணர்வுடன் விழாக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

”ஊர் கூடினால் தான் தேர் நகரும்” என்ற பழமொழியை இனி வரும் சமூஹம் நன்கு உணர இவ்விழா உதவும்!