Need of Buddism for present day - Tamil version

Sakthi Foundation

போதியின் கீழ் பரிணமித்தவர்

தெளிந்த ஞானத்தின் மூலம் தன்னை யார் என்று உணர்ந்த தன்மைக்கு ”புத்த” என்று பெயர்.அத்தன்மையை அடைந்த சித்தார்த்த கெளதமர் என்ற இளவரசன் புத்தர் ஆனார்.இத்தன்மையை உலகில் யார் வேண்டுமானாலும் - மதம்-மொழி-சாதி-குலம்-தொழில்-பால்-இனம்-நாடு வேறுபாடு இன்றி அடைய முடியும் என்பதையே புத்தர் பலவழிகளில் தன் வழிகாட்டுதல்கள் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் வேத வழியில் உள்ள சமயங்களை ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் தங்கள் கைவசம் எடுத்துக் கொண்டு அதன் மூலம் சுயநலத்துடன் அரசியல்-பொருளாதார-பதவி-பட்ட-செல்வாக்கினைத் தேடினர்.

சாதிப் பாகுபாடுகளும், அதை ஒட்டிய பல தனிமனிதக் கொடுமைகளும், அவமதிப்புகளும், மிகவும் கண்மூடித் தனமான மூட நம்பிக்கைகளும் புத்தர் வாழ்ந்த காலத்தில் நாட்டில் மண்டிக்கிடந்தன.

 ஏன்- எப்படி - எதற்கு என்று பகுத்தறிவுடன் ஆராயாமலும், புரிதல் இல்லாமலும் வெற்றுச்சடங்குகளில் மக்கள் ஈடுபட்ட காலம் புத்தர் வாழ்ந்த காலம்.

வழிபாடு, சமயம், ஆன்மீகம், பக்தி, சேவை, சடங்கு இவை அனைத்தும் தன் இஷ்ட காம்யார்த்தங்களை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு, புலன்களால் போகானுபவ சுக வாழ்வை அடையவே மக்கள் அவற்றைப் பயன்படுத்த மதவாதிகளால் வழிகாட்டப்பட்ட காலம் அது.[அதுவே இன்றும்]

வேதாகமங்களின் மூலம் பண்டைய மஹரிஷிகள் எடுத்துரைத்த உயர்ந்த சத்யப்பொருள்களை மதவாதிகள் மறைத்த காலம் அது.அதை உள்ளது உள்ளபடி விளக்கக் கூடிய விழிப்புணர்வு இல்லாமல் தன்னிஷ்டப் போக்கில் குருமார்களும் ஆன்மீக ஆச்சாரியர்களும் உபதேசித்தும் பதிவுகள் செய்தும் வாழ்ந்த காலம்.

மன்னர்களும் மக்களும் மண் - பெண் - பொருள் - புலன் சுகம் என்றவற்றிலேயே குறி வைத்த காலம்.பலிகளும் போர்களும் அதன் பெயரில் மலிந்து கிடந்த காலம்.

ஒரு சமுதாயத்தில் அதிகம் எது தீமையை ஏற்படுத்துமோ அதைக் கையில் எடுத்துக் கொண்டு, அதைத் திருத்தி அமைத்து மக்களுக்கு வழிகாட்ட காலம் காலமாக சமூஹ ஆர்வலர்கள், புரட்சியாளர்கள், தன்னலமற்ற ஆன்மீகப் பெரியோர்கள் வருகிறார்கள்.அதைப் போல் தான் நம் புத்தரும் அவர் காலத்தில் வாழ்கிறார்.

உயர்ந்த சத்தியப் பொருளை எடுத்துக் கூறிய சான்றோர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றிக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம்.

புத்தர் பெருமானின் வரலாற்றை எழுதிய காலத்தில் அவர் தெய்வமாக மாறி இருக்கிறார்.இதே நிலை தான் ஸ்ரீராமன், ஸ்ரீக்ருஷ்ணன் ஆகியோருக்கும் நேர்ந்தது.எதார்த்த வாழ்க்கையில் மனிதனுடன் அவர்தம் வாழ்வியல் உண்மைகள் தொடர்பு படுத்தப் படுதல் மிக மிக அவசியம்.இல்லையென்றால் அவர்களை மனிதன் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

திரைப்படத்துக் கதாநாயகன் வேலையை அவர்கள் செய்ய வரவில்லை.அதைப் போல் அவர்களை வர்ணிப்பதால் அவர்களுக்கு என்ன பயன்?

அவர்கள் சொன்னபடி வாழ்ந்த உண்மையை இக்கால மக்களின் எதார்த்தவியலுடன் தொடர்பு படுத்திடாவிடில் மனிதனுக்கு அது வெறும் ஒரு ரசனைக் கதையாகத் தான் இருக்கும்.அது நம் வேலையல்ல.

”என்னை என் நலனுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்ற ஒரு தனிமனிதனின் நான்மீக எண்ணமான விதையே அவனைச் சேர்ந்த சமூஹத்தின் மாற்றத்துக்குக் காரணம் ஆகிறது.

உயர்ந்த ஆச்சாரிய சான்றோர்கள் தம் கருணையால் ஓரளவுக்கு புத்தபெருமானின் வாழ்வியல் இக்காலத்தில் நமக்கு எங்கு ஏன் எதற்குத் தேவை என்பதை உணர்த்தினர். அதன் அடிப்படையில் இச்சரிதத்தை மீண்டும் Uni5 முறையில் எழுதுகிறோம்.

மாதவியும் மணிமேகலையும்

தன் நாயகன் கோவலன் மறைந்த பிறகு மாதவி தன் பதினெட்டு வயது அழகிய மகள் மணிமேகலையுடன் புத்த சமயத்தில் சேர்ந்து துறவியானாள் என்று மணிமேகலை கூறுவதைக் கேட்டு மீண்டும் மீண்டும் என் மனம் ஆழ்ந்த சிந்தனையில் ஊறியது.

அவள் ஏன் அவ்வாறு செய்தாள்?

உன்னத மணியைக் கடலில் இழந்தது போல மக்கள் அச்செய்தி கேட்டுத் தவித்தனர் என்பது உண்மை!

அழகிய மகள், உயர்ந்த சோழ தேசத்து அரசவை நர்த்தகிப் பதவி, தாய், தோழி, செல்வம், மக்களின் மதிப்பு என வாழ்ந்த மாதவி ஏன் துறவி ஆனாள்? அது வெறுத்த துறவித் தன்மையா? இல்லை! இல்லைவே இல்லை!

கண்ணகியின் சரிதத்தினை மிகவும் விஸ்தரித்துப் பேசலாம்.மாதவியின் சரிதம் விரைவில் முடிந்த குறுங்கதை போன்றது.காரணம் அவள் புத்த நெறியின் மூலம் வாழ்வின் உயர் சத்தியத்தைத் தேடும் பணியில் தன்னை ஈடுபடுத்தினாள்.அத்தோடு மனிதம் முடிகிறது.இதுவே வேத வழிச் சத்தியப்பொருள் கூறும்.

அழகும், செல்வமும், பதவியும், போகமும் நிலையில்லாதவை என்பதை அவள் உணர ஆரம்பித்தாள்.

தன் மகளைச் சோழன் மகன் விரும்பினாலும், அவனால் மணந்து கொண்டு இல்லறம் செய்யத் தன் கணிகையர் குலம் ஒரு தடையாகும் என்பதையும் உணர்ந்தாள்.

மணிமேகலையைப் பெற்றுப் பதினெட்டு ஆண்டுகள் கோவலனுடன் வாழினும் அவளுக்குக் ”கோவலனின் மனைவி” என்ற நிலை இன்றும் சமுதாயத்தில் கிடைக்கவில்லையே! அவள் ஒரு ஆசை நாயகி தானே!

என்ன ஆயினும் இப்பிறப்பில் தனக்கும் தன் சந்ததியினருக்கும் வேறு மாற்றம் இல்லை என்பதை மாதவி மிகவும் ஆழ்ந்த அனுபவங்கள் மூலம் உணர்ந்தவள்.

பட்ட அனுபவம் மூலம் தனக்கும் தன் வாரிசுக்கும் அவள் சாதாரண மனித வாழ்வில் இருந்து விலக்கு தர எண்ணினாள்.

அறவண அடிகள் என்ற புத்த சமய ஆச்சாரியரின் வழிகாட்டுதலில் உண்மையான தர்மம் என்பது என்ன என்பதை அவள் அறிந்தாள்.

உடனே துறவு பூண்டாள்.அது ஒரு நொடியில் எடுத்த உணர்ச்சி பூர்வமான முடிவே அல்ல.

இம்முடிவை மணிமேகலை ஏற்க அவளது வயது ஒரு தடையாகும்.ஆனால் அவளை வலுக்கட்டாயமாக மாதவி துறவில் ஈடுபடுத்தினாள்.ஆனால் தாயின் பல தனிமனித ப்ரச்சனைகளை மணிமேகலைக் காண்கிறாள், அறிகிறாள், சிந்திக்கிறாள்.அதனால் தான் துறவறத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

கசாப்புக்கடை ஆடுகளா நாம்?

கசாப்புக் கடையில் தன் இனம் கண்முன் வெட்டப்படுவதைக் கண்டு, தனக்கும் அடுத்த சில நிமிடத்தில் இதே கதி என்று உணர்ந்து தப்பிக்கத் தெரியாமல் ஆடு புல் உண்பதைப் போல், மனித வாழ்வில் படும் இன்னல்களைப் பற்றித் தெரிந்தும் அதைத் தீர்க்கும் வழி அறிந்து அதில் போகாமல் மனிதன் உழல்வது எத்தனை முட்டாள் தனம்?

அதே முட்டாள் தனத்தைத் தான் மேலும் செய்யக் கூடாது, தன் மகளும் செய்யக் கூடாது என்றே தப்பித்த ஆடாய்.... மாதவி வாழ்க்கையின் கூர்வாளின் வீச்சில் இருந்து தர்ம நெறி வாழ்க்கைப் பாதையில் தப்பித்து விடுகிறாள்.

மனிதனின் அனைத்துத் துயரங்களுக்கும் ஆசை தான் காரணம் என்ற சத்தியத்தை புத்தர் கண்டறிந்தார் என்கிறோம்.அவ்வாசையை அகற்ற அவ்வாசையின் விளை நிலமாம் மனம் என்ற வயலை அல்லவா கண்காணிக்க வேண்டும்? மனமாற்றத்துக்கே உயர்ந்த தர்மநெறிகள் வேதங்கள் மூலம் காட்டப்பட்டன.அவை மறை பட்டன.புத்த பகவான் அதை மீண்டும் வெளிக்கொணர்ந்தார்.

அதை அறிந்த மாதவி மணிமேகலையுடன் துறவு கொண்டு மனதை வேறுவழியில் செலுத்தினாள்.

புத்தரை இக்காலத்தில் நாஸ்திகவாதிகள் கையில் தங்கள் ”தெய்வம்” என எடுத்துக் கொண்டு உள்ளனர்.

புத்தர் என்னும் பள்ளி முதல்வர்...

ஒரு பள்ளிக்கூடம்.தேர்வு நெருங்குகிறது.ஆனால் யார் சொல்லியும் கேட்காமல் மாணவர்கள் சதா ஆட்டம் பாட்டம் விளையாட்டு என்று காலம் கழித்தனர்.ஒரு நாள் பள்ளி முதல்வர் அவர்தம் கொட்டத்தை அடக்கினார்.விளையாட்டுப் பொருட்களை எடுத்துத் தன் அறைக்குள் பூட்டினார்.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

இதே கதி தான் புத்தர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கும் அவர் செய்தார்.சதா சமயங்களை வாதத்துக்கும், பொருளுக்கும், பதவிக்கும், தன்னல ஏற்றத்துக்கும் பயன்படுத்தி வந்த சமுதாயத்தில் அவர் சில உண்மைகளைப் பூட்டி வைத்தார்.தெய்வம் என்ற பெயரில் ஏற்படும் சீர்கேடுகளை மாற்ற அவர் முடிவு செய்தார்.

”எனது ஏற்றத்தாழ்வுகளுக்கு நானே காரணம்” - ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற உயர்ந்த உண்மையையே புத்தர் மிகவும் அடிப்படையாக மக்களுக்கு உணர்த்த முயன்றார்.

”எனது தனி மனித மாற்றங்களுக்கு தெய்வத்தை இடையில் நிறுத்தக் கூடாது” என்பதை அவர் உணர்த்தினார்.

”தெய்வம் என்ற ஒன்றின் அடிப்படையில் மனிதனின் சுயநலமான செயல்கள் இயங்கவே கூடாது” என்பதை உணர்த்த முயன்றார்.

வெறுமனே சமயச்செயல்களால் வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கை கொண்டு, உண்மையாக மனதை தெய்வீகத்தில் மக்கள் நெறிப்படுத்தாமல் இருக்கும் தன்மையை இன்றும் காண்கிறோம்.இதையே புத்தர் எதிர்க்கிறார்.

வெறுமனே ஒரு கோயிலுக்குப் போவதால் தன் வாழ்க்கை மாறிவிடும் என்ற கண்மூடித்தனமான பக்தியை புத்தர் மறுக்கிறார்.

அவர் வேதங்களுக்கு எதிரானவர் அல்ல.வேதங்கள் என்றால் வடமொழியில் எழுதப்பட்ட நான்கு வேதங்களை உடனே கண்முன் கொண்டு வராதீர்.சத்தியத்தை உணர்த்தும் உண்மையான வாக்கே வேதம்.அதை நம் தேசத்தில் மஹரிஷிகள் உணர்ந்து தெளிந்தனர்.உதாரணத்துக்கு நம் திருக்குறளை எடுத்துக் கொள்க. அதில் உள்ள வாழ்வியல் உண்மைகளை யாரும் மறுக்கவே முடியாது.ஆனால் திருக்குறளுக்கு உரை எழுத முற்படும் நாஸ்திகன் கடவுள் வாழ்த்தை ஒதுக்குவதும், குடிப்பவன் கள்ளுண்ணாமையை ஒதுக்குவதும், அசைவ ப்ரியர்கள் புலால் மறுத்தல் அரிகாரத்தை ஒதுக்குவதும் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்?

அவர்கள் மேற்கண்ட அதிகாரங்களை விடுத்து வெறும் ரசிப்புத் தன்மையால் பிற அதிகாரங்களுக்குப் பலநூறு பக்கங்கள் உரை செய்யினும் வீணே!

அதே போல் தான் அனைத்திற்கும் மூல காரணமான ஒரு உண்மை உள்ளது என்பதை வேதம் சொல்ல, அதை புத்தர் மறுத்தால் அது உண்மை அல்லவே!

ஆனால் அவ்வுண்மையை தெய்வீகத் தோற்றங்களாக உருவகம் செய்வதையும் அவையே உண்மை என்பதையும் அவர் மறுத்தார்.

நாம் பார்த்து மகிழ்வது போன்ற தெய்வத்தை அவர் மறுத்தார்.

ஆனால் மூல காரணத்தை அவர் மறுக்கவில்லை.

ஆனால் அதே வேளை அவர் அதைப்பற்றி வெளிப்படையாக எடுத்துரைக்கவில்லை.

காரணம் அவரவர் அதை அனுபவிக்க வேண்டும்.

சர்க்கரை என்பதைத் தாளில் அழகாக எழுதி நக்கினால் இனிக்குமா?

அடுப்படியில் சென்று அதைக் கையால் எடுத்து வாயில் இட்டால் தான் அதன் சுவை அனுபவத்தால் சுகம் தரும்.

தர்மத்தின் உண்மையும் அதே போல் தான்.

புத்தரிடம் நம் கேள்விகள்..

தர்மத்தின் எல்லைக் கோடு எது?

தன்னை யார் என உணர்த்தல்.

அவ்வாறு உணர்வதால் என்ன ஆகும்?

தனக்குள் உள்ள மூலகாரணம் புரியும்.

அதை உணர்ந்தால்?

மனம் ஒருமுகமாகும்.

மனம் ஒருமுகமானால்?

தேவை அற்ற எண்ணங்கள் மனதில் எழாது.எழுந்தாலும் ஞானத்தால் அவை விலக்க மனிதன் பக்குவப்படுவான்.

தேவையற்ற எண்ணங்கள் விலகினால்?

ஆசைகள் விலகும்.

அப்போது?

எண்ணத்தை நிறைவேற்றும் வினைச்செயலை மனிதன் செய்ய மாட்டான்.

வினையை அறுப்பது என்பது வெறுமனே மனிதன் சும்மா இருப்பதா?

இல்லவே இல்லை! தன்னலம் சாரா வினைகளை மனிதன் செய்தே தீர வேண்டும்.

தனக்கும் தன் குடும்பத்துக்கும் சமூஹ மேம்பாட்டுக்கும் சுயநலச்சிந்தனை இல்லாமல் மனிதன் வினை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால்?

சுக துக்கங்களை சமச்சீராகப் பார்க்கும் தன்மை ஏற்படும்.

அதனால் என்ன ஆகும்?

இன்ப-துன்ப உழல்ச்சி மனிதனுக்கு இல்லை

இன்ப-துன்பங்கள் உழல்ச்சி இல்லாத போது மீண்டும் ஒரு பிறவி இல்லை.

ஏன்?

எண்ணத்தால் இச்சையால் அதை சுகிக்க மனிதன் பிறவி எடுக்க வேண்டும்.

எண்ணமற்ற இச்சையற்ற வினையற்ற ஏதும் இல்லா நிலை தான் நிர்வாணம்-அம்மணம்-எல்லாவற்றையும் கழற்றி எறிந்த தன்மை.அது தான் முக்தி!

இது அனைவராலும் முடியுமா?

அனைவருக்கும் இது ஒன்றே பொது தர்மம்.

அனைவரும் அதைச் செய்ய வேண்டும், இல்லையேல் செய்யப்பட வேண்டிய கட்டாயம் வாழ்வில் வரும்.

பாரத தேசத்தின் உயர் சின்னம்

நமது மூலத்தின் தன்மையை நம்முள் உணர்தலே தர்மம்.

அதுவே தர்மச்சக்கரம்.

அதையே புத்தர் உருட்டுகிறார்.

இது குறியீடு, அதையே மாமன்னர் அசோகர் வடிவமைத்தார்.

உலகின் உயர்ந்த மனித தர்மத்தை எடுத்துக் கூறிய ஒரே தேசம் பாரதம்!

அதனால் தான் இங்கு ஞானியரும் அவர்தம் சமய வழிகளும் அதிகம்.

அதனால் தான் பாரத தேசத்தின் மூவர்ணக் கொடியில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டது.

நீ யாராக வேண்டுமானாலும் இரு!

ஏழை-பணக்காரன், ஆண்டி-மன்னன், ஆண்-பெண்-திருநங்கை,நல்லவன்-கெட்டவர்,கற்றவன்-அறிவிலி,மேதை-மூடன்,மொழி, இனம், குலம், கோத்திரம், மதம்,இனம் - நீ எதுவாகினும் உனக்கு இது ஒன்றே தர்மம்.

புத்தர் அவதாரப் புருஷரா?

மேற்கூறிய வினா-விடையே வேத வழி.

அதையே மீட்டுருவாக்கம் செய்தார் புத்தர்.

அதனால் தான் அவர் அவதாரம் ஆனார்.

யார் அவதாரப் புருஷர்?

ப்ரபஞ்ச சத்தியத்தின் கட்டமைப்பை எவன்-எவள் தன்னுள் கண்டு தெளிந்து உணர்ந்து அதன் மூலம் மாபெரும் சமூஹ நல்மாற்றத்துக்கு வழிவகுக்கிறாரோ அவரே அவதாரம்.

அவர் மஹாவிஷ்ணுவா?

இல்லை-ஆம்

என்ன இது குழம்பம்?

சங்குச் சக்கரம் கதை தாமரை ஏந்திய மஹாவிஷ்ணுவல்ல இவர்.

பின்?

”விஷ்ணுத்வம்” என்றால் பரிபூர்ணமாய் எங்கும் யாதுவாய் வ்யாபித்திருக்கும் ஞானம் ஆகும்.

அப்போது சர்வ ஞானியாய் முழுமையான புத்தர் விஷ்ணு தானே?

தர்மம் ஒன்றே, அது பொது..

தெய்வீகமாய்த் தானே இருப்பதை உணர்த்தும் ”அஹம் ப்ரம்மஸ்மி” என்ற உயர் சத்தியத்தை உணர்த்துவதே பாரத தேசத்தின் சான்றோரின் கடமையாக இருந்தது,இருக்கிறது.அதையே ”தத்வமஸி” என்று சபரிமலையில் தர்மசாஸ்தா தன் சின்முத்ரைக் குறியீட்டால் உணர்த்துகிறார்.தர்மம் என்பது ஒன்றே! அதனால் அது பொது! அதனால் தான் அத்தர்மத்தை பாரத தேசத்தில் தோன்றிய அனைத்துச் சமயங்களும் ஏற்று வழிகாட்டுகின்றன.அதனால் தான் தர்ம சாஸ்தா இந்து-சமணம்-புத்தம் என முப்பெரும் நெறிகளிலும் உண்டு.

புத்த பெருமான் இக்காலத்தில் மிகவும் அவசியம்.சதா பொருள்களின் மோஹ அலைக்குள் சிக்கித் தன்னிலை மறந்து சுயநலத்தின் உச்சிக்குப் பரிமணித்துக் கொண்டு இருக்கும் மானுடத்திற்கு ஒரு வேகத்தடை புத்த நெறி!

பொருள்,புலன் சுகம் இதுமட்டுமல்ல வாழ்க்கை...வேறு ஒன்று உள்ளது என்பதை விளக்கம் வருகிறது புத்த நெறி.அது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

வாழ்க்கையின் மிகப் பெரிய கொடும் துயரங்களால் ஞானம் வருமுன் மெதுவாக மனதை நெறிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

துறவு தான் புத்தமா?

துறவு என்பது வெளிப்படையிலா? உள்ளார்ந்தா? இது அவரவர் விருப்பம்.ஆனால் துறவு என்பது நமக்கு வேண்டிய ஒரு பொருள்  இருந்தாலும் இல்லை என்றாலும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கும் தன்மை.இதை அவனவன் அவசியம் பயிற்சி செய்ய வேண்டும்.

கிருமிகளின் தாக்குதலில் இருந்து ஊரைக் காலி செய்யும் மக்கள் போல், அவர் காலத்தில் குடும்ப வாழ்வைக் காலி செய்து புத்த சங்கங்களில் கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்தனர் மக்களும் மன்னரும்.அது அன்று தேவையாக இருந்தது.சமூஹத்தில் பாதுகாப்பு வேண்டித் துறவு பூண்ட நிலை அக்காலத்தில் அதிகரித்தது.

இன்றும் அதே துறவு நிலை உள்ளது.அதனால் தான் பல தேசங்களின் ஆன்மீகத் தேடல் மனிதர்கள் மடங்களை நோக்கிப் பயணம் செய்கிறார்கள்.இது தனிமனித இஷ்டம்.

புத்தர் வலுக்கட்டாயமாக அத்துறவை வலியுறுத்தவில்லை.

துறவுக்கும் பக்குவம் தேவை.

ஆனால் உள்ளார்ந்த துறவித் தன்மையைப் பயிற்சி செய்ய வலியுறுத்துகிறார்.

தான் கூறும் எதையும் கண்மூடித் தனமாக ஏற்கக் கூடாது என்பது புத்தரின் வாக்கு.

புத்தருக்குப் பின் புத்த மதப்பரிமாணம் துறவை வலுக்கட்டாயம் செய்து சங்கத்தில் கூட்டம் சேர்த்தது, சமூஹம் தன்னிலை தவறி imbalance ஆனது.பாரத தேசத்தின் ஆணிவேரான குடும்ப அமைப்பும், இல்லறமும் கேள்விக்குறிகள் ஆயின.மீண்டும் அவற்றைக் கொண்டு வரத்தான் தமிழகத்தில் சைவமும் வைஷ்ணமும் முற்பட்டன.

சைவமோ வைஷ்ணவமோ சமண நெறிக்கோ புத்த நெறிக்கோ சாக்கிய நெறிக்கோ எதிரியில்லை.

ஆதியில் அந்நெறியினைச் சொன்ன ஆச்சாரியர்களுக்குப் பின் அவை திரிபு பட்டன.அவற்றுக்குத் தான் எதிர்ப்பு உண்டானது.

இன்றும் இந்து சமயத்தின் பல கண்மூடித் தனமான சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் அல்லவா?ஆனால் உண்மையில் அவை மாற்றிச் சொல்லப்பட்ட அசத்தியம் ஆகும்.

புத்தர் சத்தியத்தை மீட்டுருவாக்கம் செய்து அவர் வழியில் சொன்னார்.

மனதின் அடையாளமே மனிதன்.

அம்மனதை நெறிப்படுத்துவதே கல்வி.

அக்கல்வி வெறும் பொருள் சேர்க்கும் தொழில் கல்வியாகி விட்டதால் இக்காலத் தலைமுறைகள் பாதிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

மனவியல் பரிணாமத்துக்கே அனைவரும் பாடுபட வேண்டும்.

புத்தர் மனம் என்ற அந்த மாபெரும் சக்தியை நெறிப்படுத்த syllabus - பாடத்திட்டம் வகுத்தார், பின்பற்றினார், உபதேசித்தார்.

எது போதி ஞானம்?

போதி மரம் என்பது அரச மரம்.அரசன் - சமூஹத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்துபவன்.உயர்ந்த ஞானத்தின் தன்மை போதி என்று குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.நிழலின் கீழ் கோடையின் கொடுமை தெரியாது.அதுபோல் போதியான உயர்ஞானம் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் இன்னல்கள் வாட்ட மாட்டா.

 

இவற்றின் அடிப்படையில் நாம் புத்தரின் வரலாற்றைக் காண்போம்.

அவருடன் நம்மைத் தொடர்பு படுத்திப் பரிணாமத்துக்கு முயல்வோம்.

மனதை நெறியாக்கும் போது அதுவே போதி ஞானம் தருகிறது.

மனதின் பக்குவப்பட்ட தன்மையே போதி ஞானம்.

அது அனைவருக்கும் உரியது.

அதையே புத்தரும் வலியுறுத்துகிறார்.

போதியின் கீழ் உட்காரவாவது முயற்சிப்போம்....

ஆசிரியர்கள்

Dr.Pradheep Challiyill - M.Sc,Ph.D - Dr.Madeswaran.M - M.A, Ph.D

Chennai, 15.1.2016 [Pongal day]

Poraiyar Andavar Middle School homages the senior ...
Poraiyar UNI5 center - Parents feedback for Octobe...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries