St.Thomas - a respected disciple of Christ by Indians

Sakthi Foundation

St.தாமஸும் பாரத தேசமும்

 

பாரத தேசம் பல சமயங்களின் பிறப்பிடம் ஆகும்.

தூய பக்தியும் ஞானமும் கலந்த ஆன்மீக வழியில் மனிதன் தன் மனதைச் சமைப்பது - பக்குவம் செய்வது சமயம் எனப்படும்.

இதையே சம்ஸ்க்ருதத்தில் ”மத[tha]m'' என்கிறோம். Madham என்றால் யானைக்கு ஏற்படுவது.வடமொழி உச்சரிப்பில் மிக்க கவனம் தேவை.ஒலிக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும்.

வேதகாலம் முதல் சமணம், பெளத்தம், சாக்கியம் போன்ற பல ஆன்மீக வழித்தோன்றல்கள் பாரத தேசத்தில் வளர்ந்து மக்களுக்கு வழிகாட்டி வருவதை வரலாற்றில் காண்கிறோம்.

அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் பரந்த ஞானமும் மனோபாவமும் பாரத தேசத்திற்கே என்றென்றும் உண்டு என்பதற்கு வேறு தேசங்களில் இருந்து வந்த சமயங்களையும் ஏற்றுக் கொண்ட சாட்சிகள் முன் நிற்கின்றன.

ஒரு சமயத்தைப் பிடிக்காமல் போனால் அதை மக்களும் அரசியலும் வேருடன் சாய்ப்பதையும் வரலாற்றில் காண்கிறோம்.

இப்பின்னணியில் கி.பி 52ஆம் நூற்றாண்டில் பாரத தேசத்துள் அடியெடுத்து வைத்த கிறிஸ்துவத்தின் வரலாற்றுத் தடங்களைச் சற்றுக் காணும் கட்டுரை இதுவாகும்.

சென்னை மாநகரின் நவீன போக்கிலும் அமைதியாகப் பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் காக்கும் இடங்கள் பல உள. அவற்றில் கிறிஸ்துவ சமயம் சார்ந்த மூன்று வரலாற்றுத் தடயங்களைப் பற்றிக் காண்போம்.

புனித தாமஸ்

இவர் ஏசுவின் பன்னிரு மாணவர்களில் ஒருவர்.

ஆனால் இவரது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் இவரை ஆழ்ந்த பகுத்தறிவாளராகக் காட்டும்.

இவர் ஏன் எதற்கு எப்படி எதனால் என்று ஆராய்ந்தே எதையும் ஏற்கிறார்.

குறிப்பாக ஏசு உயிர்த்தெழுந்தார் என்று அறிந்தவுடன் அவரைத் தான் காணாமல் நம்புவதற்கு இல்லை என்கிறார்.

அவரது ஆணிகள் அறைபட்டக் கரங்களின் அடையாளங்களையும் ஈட்டியால் குத்தப்பெற்ற வலது விலாப்பகுதியையும் ஸ்பர்சித்துப் பார்த்த பின்னே ஏசுவின் உயிர்த்தெழுகையைத் தாமஸ் ஏற்கிறார்.

ஏசுவின் அறநெறித் தத்துவங்களுக்காக அவர் கொல்லப்படும் சூழல் வரும்போது தைரியமாக அவருடன் தானும் உயிர்விடும் அளவுக்கு அவருக்கு விஸ்வாசம், மரியாதைத் தன் ஆசான் மீது இருந்தது.

மேலும் ஏசுவின் உண்மைத் தன்மையை உணர்ந்த, ”என் ஆண்டவரே! என் கர்த்தாவே” என்று அவரை அழைத்த முதல்வர் தாமஸ்.

இவர் ஏசுவிற்குப் பின் சிந்து தேசம் தொடங்கி வளரும் பாரத தேசத்திற்குக் கி.பி 52ல் வருகிறார்.

சேர தேசத்து வாணிகன்

சேர தேசத்தின் தலைநகர் வஞ்சி.அதுவே இன்று திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர்.இதைக் கிராங்கணூர் என்றும் அதன் துறைமுகப்பகுதியை முசிறி என்றும் வரலாறு கூறும்.மேற்கத்திய, மத்தியத் தரைக்கடல் தேசங்களுடன் தென்னாட்டவர்க்குக் கடல் வாணிபத் தொடர்ப்பு இருந்தது.

சேர தேசத்தின் வாணிகன் அப்பன் என்பவனுடன் தாமஸுக்கு நட்புறவு உண்டு என்பது வரலாற்றுக் குறிப்பு.

ஏசு பாரத தேசத்திற்கு வந்து புத்த சமய நெறிகளையும் உண்மையான வேத நெறிகளையும் அறிந்துள்ளார்.Lost years of Christ என்ற ஆய்வுச் சான்றுகள் அவற்றைக் கூறும்.

”அதுவே நான்  என்ற தத்வமஸி” அல்லது ”அஹம் ப்ரம்மஸ்மி” என்ற உயர் பரம்பொருள் தத்துவத்தை உணர்ந்தவர் ஏசு.

அதை அவர் யூதர்களிடம் எடுத்து விளக்கிய போது அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான் யார்?

ஏசு ”நான்” என்று குறிப்பிடுவதை அவரது உருவம் சார்ந்த குணமாகக் கொண்டு விட்டால் குழப்பம் வரும்.எப்படி கீதையில் கண்ணன் ”நான்” என்று குறிப்பிடுவதை அவரது உருவத்துடன் அடையாளம் கண்டு குழப்புகிறார்களோ அதே கதைதான் அத்வைத்தத்தில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, குருவின் அருளால் வெகு விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம்.

ஏசுவோ, புத்தரோ, கண்ணனோ ”நான்” என்றது ”பரம்பொருள்” தன்மையையே!

இதை எந்த அளவுக்கு ஏசுவும் விளக்கிச் சொன்னார், அதை யூதர்களும் மக்களும் எந்த அளவு புரிந்து கொண்டனர் என்பது மிகப்பெரிய ஐயமே!

சிலுவையில் அறைந்து கொல்லும் அளவுக்கு மிகக் கேவலமான தண்டனையை ஏசு பெறக் காரணம் ஆன அவரது ஆன்மீக நெறியைப் புரிந்து கொள்ளாமல் போனதே காரணம்.

அதே போல் தான் அவரது பன்னிரு மாணவர்களின் இறப்பும் இயற்கையானதாகவே இல்லை.மிகக் கொடூரமான வகையில் தண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அவர்தம் வரலாறுகள் கூறும்.

தாமஸ் அடிப்படையில் பகுத்து உள் நோக்கும் குணம் உடையவர்.அதனால் தான் அவர் தன் ஆசான் ஆன்மீக நெறி பயின்ற பாரத தேசத்தில் வந்து உண்மைத் தன்மையை அறிய முற்பட்டிருக்க வேண்டும்.

அத்வைத்த சத்தியத்தை சேர தேசத்தில் ஆழ்ந்து கற்றிருக்க வேண்டும்.காரணம் அதை மீட்டுருவாக்கம் செய்த ஆதிசங்கரர் தோன்றிய பூமி சேர தேசம்.சங்கரர் அத்வைத்தத்தை உருவாக்கவில்லை.அதை தூசு தட்டி வெளிக் கொணர்ந்தார், மீட்டுருவாக்கம் செய்தார்.சங்கரருக்கு முன்னோடிகளாக இருந்த ஆசான்களிடத்தே தாமஸும் அறிமுகமாகி சில விஷயங்களைத் தெளிந்திருக்க வேண்டும்.

பின்னர் அதையே தன் ஆசான் ஏசு எடுத்துரைத்த வரலாற்றையும் ஏசுவைப் பற்றிய வரலாற்றையும் சேர மன்னனுக்கும் மக்களுக்கு கூற முற்பட்டுள்ளார் என்று கருத இடமுண்டு. அதை ஏற்ற மன்னன் கொடுங்கல்லூர் கடற்கரையில் தாமஸுக்கு, வழிபாட்டு ஸ்தலம் உருவாக்க அனுமதி கொடுத்துள்ளார்.

சான்றோர் வாழும் தொண்டை தேசத்தில்...

ஆனால் அவர் கற்றவர்கள் வாழும் தொண்டை தேசம் [இன்றைய வடதமிழகம் - காஞ்சிபுரம் அதன் தலைநகர், பிற்காலப் பல்லவ தேசம்] வர முற்பட்டுள்ளார்.

காரணம் ஆன்மீக நெறியின் முன்னோடிகளான பல சமயத்தவரும் வாழும் தலைமைச் செயலகமாகக் காஞ்சிபுரம் இருந்துள்ளது.சமணம், பெளத்தம், சாக்கியம், வேத நெறிச் சமயங்களின் பீடாதிபதிகளும் பாரத தேசத்தின் பல சமய ஆச்சார்ய புருஷர்களும் காஞ்சியில் வாழ்ந்தனர். மேலும் கிழக்கத்திய தேசங்களுக்குக் கடல் வழியே செல்வதற்கான மயிலை, மாமல்லபுரத் துறைமுகங்களும் தொண்டை தேசத்தில் தான் அமைந்துள்ளன.ஒருவேளை தாமஸ் இலங்கை மற்றும் கிழக்கத்திய தேசங்களுக்குச் செல்ல முற்பட்டிருக்க வேண்டும்.

மேலும் அவர் காலத்துக் கிறிஸ்துவம் என்பது என்ன என்பதை ஆராய்ந்து காண வேண்டும்.இன்று இருக்கும் சமயங்கள் பற்பல கால தேசத்துக்கு ஏற்ப பல மாற்றங்கள் கண்டுள்ளன.இதற்குக் கிறிஸ்தவமும் விதிவிலக்கன்று!

படித்தவன் பாட்டைக் கொடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதற்கு ஏற்ப ஏசு சொன்னதும், தாமஸ் சொன்னதும் பிற்காலத்து போதகர்கள் சொன்னதும் எப்படி ஒற்றுமை கண்டிருந்தன என்பது ஐயமே!

தாமஸ் காஞ்சியில் பல சமயத்தார்களைச் சந்திக்கும், பேசும், விவாதிக்கும், வாதாடும் நோக்கில் தொண்டை தேசம் வந்திருக்க வேண்டும்.

இன்றைய மயிலைக்குச் செல்லும் வழியில் உள்ள சைதாப்பேட்டையின் அடையாற்றின் கரையில் உள்ள சிறு குன்றில் [இன்றைய சின்னமலை] தாமஸ் தன் ஆன்மீகப் பயிற்சிகளை செய்திருக்கிறார்.குறிப்பாக தொழுகை, த்யானம் ஆகியன செய்வதற்கான இயற்கையுடன் கூடிய அமைதியைச் சின்னமலை இன்றும் உண்டாக்கி விடுவதைக் காண்கிறோம்.அவர் மயிலை அரசன் மகாதேவன் என்பவனால் துரத்தப்பட்டு உயிருக்கு அஞ்சி, சின்னமலைக் குகைக்குள் ஒளிந்து இருந்தார் என்பது ஏற்பதற்கு அல்ல!

இறைவனை முற்றிலும் தம்முள் உணர்ந்த ஞானிகள் உயிருக்கு அஞ்சியதே இல்லை.

புத்தர், ஏசு, அப்பர், சம்பந்தர் போன்ற பலர் கேவலம் உயிருக்கு அஞ்சியதே இல்லை.

த்யாகத்தின் சின்னமாம் கல் சிலுவை...

சின்னமலையில் இன்று இருக்கும் குகைக்குள் அவர் தங்கியது, அவ்விடத்தே உள்ள ஞானிகளுடன் நட்புறவு கொண்டு இருக்கவும் இருக்கலாம்.சின்னமலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முன்னூறு அடி உயரம் உள்ள இன்றைய பரங்கி மலை எனப்படும் St.தாமஸ் மவுண்ட்டில் அவர் வாழ்ந்தார்.

அம்மலையில் அவர் த்யாகத்தின் குறியீடான சிலுவையைப் பாரத சிற்பக்கலைப் பாங்கில் வடித்து வழிபட்டார்.திருவாச்சியுடன் கூடிய சிலுவையே தேவாலயத்தில் உள்ளது.”த்யாகமே உலகத்திற்கு மேன்மை தரும்” என்ற வாசகம் அதில் உள்ளது.அது ஹீப்ரு மொழியாக இருக்க வேண்டும்.

திருவாச்சி - ப்ரபாவளி என்பது விழிப்புணர்வின் சின்னம்.அதன் உச்சி நடுவில் சிங்க முகம் இருக்கும்.இதில் கீழ் நோக்கிய புறா உள்ளது.புறா அமைதியின் சின்னம்.மனித வாழ்க்கை என்பது தன்னலம் பாராமல் இருப்பதன் அடையாளத்தை இக்குறி உணர்த்தும்.

அதன் அருகில் St.லூக் வரைந்த மேரியுடன் கூடிய ஏசுவின் வண்ணப்படம் உள்ளது.அதைச் சந்திரகிரி மன்னர் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று மரியாதை செய்து மீண்டும் பல்லக்கில் பூந்தமல்லியில் இருந்து அனுப்பினார் என்று வரலாறு கூறுகிறது.

சென்னை மாநகரின் வரலாற்றில் இம்மலைக்கு மத வேற்றுமை பாராமல் மக்கள் சென்று ஒரு வழிபாட்டுச் சின்னத்தை வணங்கியதாகக் கூறப்படுகிறது.அது இக்கல் சிலுவையே எனக் கொள்ளலாம்.

தாமஸ் அவர்களைப் பூணூல் இட்ட, குடுமி வைத்த இந்தியன் வேல் வீசிக் கொள்வதாகப் பழைய ஓவியம் அம்மலையில் காட்டுகிறது.பூணூல் வலம் இடமாக அணியப்பட்டதே தவறு.அவரைக் கொல்ல வேண்டும் என்றால் சேர மன்னனோ, தொண்டை மன்னனோ கொன்றிருக்கலாம். கி.பி 72ல் கோயில் பூஜாரிகளால் தாமஸ் கொல்லப்பட்டார் என்று கூறுவர்.சமயப்பொறை காத்த அக்காலத் தென்னாட்டவர் அவரைக் கொன்றார்கள் என்பது புனைந்துரை வரலாறே.

கொல்வது, உயிர் த்யாகம் செய்வது, இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது என்பதெல்லாம் மேற்கத்திய சாயல்.

எதற்காக ஆயுதங்கள்?

தாமஸ் தன் கையில் வேல் ஏந்தியுள்ளார்.அதே போல் பன்னிரு மாணவர்களும் ஏதோ ஒரு ஆயுதத்தை ஏந்தியுள்ளனர்.ஆயுதம் என்பது அறியாமையைக் களையும் ஞானத்தின் குறியீடே.தாமஸ் வேல் தாங்கியதற்குக் காரணம் அவர் காலத்தில் திராவிட ஆன்மீகச் சின்னங்களில் வேலாயுதம் மிகவும் உயர்நிலைக் குறியீடாக இருந்துள்ளது என்பதில்லை ஐயம் இல்லை. அவரது உடலுடன் ஈட்டியும் சாந்தோம் கல்லறையில் இருந்துள்ளது. கொல்லப்பட்ட ஈட்டி புனிதப்பொருள் ஆக வேண்டுமோ?

இன்று இம்மலையில் தாமஸின் பாதத்தின் பெருவிரல் எலுப்பின் சிறிய துண்டும், வலது கை எலும்பின் சிறிய துண்டும் பாதுகாக்கப் படுகின்ரன.மஹான்கள், ஞானிகள், யோகிகள், சித்தர்களின் உடல், உறுப்புகள், பொருட்கள், சமாதி ஆகிய போற்றுதற்கு உரியன என்பதை நம் தேசம் அறிந்து உள்ளது.

அவரது வேலின் முன் பகுதியும் சில எலும்புத் துண்டுகளும் சாந்தோமில் அவரது கல்லறையில் வழிபாட்டில் உள்ளன.

தாமஸின் பக்தியும் போதனைகளும் சேவையும் அக்கால மக்களை அவரை ஒரு மஹானாக - சித்தராக மதிக்க வைத்தது. அவரது மறைவுக்குப் பின் நம் தேசத்து மக்கள் அவரது உடலையும் வாழ்ந்த சின்னமலை, பரங்கி மலை [புனித தாமஸ் மலை] ஆகியவற்றை வணங்கியுள்ளனர்.அவர்கள் கிறிஸ்துவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதே இல்லை!

 

அவரது பூதவுடல் மிக்க மரியாதையுடன் சமாதியாக்கப்பட்ட ஸ்தலத்தின் மீது தான் போர்த்துகீஸியரால் இன்று காணும் சாந்தோம் சர்ச் எழுப்பப்பட்டது.[1896 A.D] மயிலைக் கபாலீச்சரம் அப்போது கடற்கரையில் அமைந்திருந்தது.மத வேற்றுமை பாராத பாரத தேசத்து முன்னோர்கள் தாமஸுக்கு சமாதிக்கோயில் எழுப்பியதில் வியப்பொன்றும் இல்லையே!

 

அப்படிப் பார்த்தால் வேளாங்கண்ணியில் அன்னை மேரி காட்சி தந்தது இந்து மதச் சிறுவர் இருவருக்குத் தான்.மதம் கடந்தது ஆன்மீகம் என்பதை உணர்தல் வேண்டும்.

மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களைப் பல்லவன் எழுப்பும் போது ஏசுவின் ஆன்மீக நெறிகள் பரவி வருவதை அறிந்து, அவருக்கும் ஒரு கோயில் எழுப்பத் திட்டம் வைத்து இருந்ததாக ஒரு வரலாறு உண்டு.இன்று மாமல்லபுரத்தில் உள்ள கணேச ரதத்தின் உச்சியில் மிகப்பழங்காலச் சிலுவைக் குறி போன்ற சின்னத்தைக் காணலாம்.

கி.பி 1582ல் போர்த்துகீஸியர் மலை மீது சிறிய சர்ச் எழுப்பினர்.

மக்கள் தம் பண்பாட்டுப் போக்கிலேயே தாமஸ் தம் ஆன்மீக போதனைகளைப் பரப்பி இருக்கிறார்.

கல் சிலுவையில் ரத்தம் வழிந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.இது தூய ஆன்மீக மார்க்கத்தில் சாத்தியமே!

தாமஸ் கொல்லப்படவில்லை என்பதையே நாம் முடிபாகக் கொள்ள வேண்டும்.

Individual killing, mass killing for religion என்பது பாரத தேசத்தில் இல்லை.

ஏசுவின் உன்னதமான மாணவர் தாமஸ்.அவர் சேர தேசம் மூலம் பாரதத்துக்குள் காலடி பதித்தார்.அவர் பல ஆயிரக் கணக்கில் மக்களைக் கிறிஸ்துவத்துக்கு மாற்றி இருந்தால், அதைப் பற்றிய குறிப்புகள் அவசியம் கல்வெட்டுக்களிலோ இலக்கியங்களிலோ இருக்கும்.அப்படி ஏதும் இல்லை. காரணம் - தாமஸ் எடுத்துக் கூறிய ஆன்மீக நெறி பாரத தேசத்தில் பழங்காலமாக வேர் ஊன்றிய அத்வைத்தக் கோட்பாடே!

அரேபியர்கள், கிரேக்கர்கள், சீனர்கள் போன்றோர் வாணிபத் தொடர்பு கொண்ட நம் தேசத்தில் அவர்கள் அவசியம் வழிபாட்டு இடங்களை அரசர்களின் அனுமதியுடன் அமைத்திருப்பர்.அதை மக்களும் கண்டிருப்பர், பலர் அந்நெறிகளைப் பின்பற்றியும் இருப்பர்.

அவ்வாறு உண்டாகப்பட்ட முதல் தேவாயமும் மசூதியும் இன்றும் கொடுங்கல்லூரில் உள்ளன.

எனவே பாரத தேசத்தின் பண்பாடு வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே என்பதை நாம் உணர்ந்து கொண்டு வாழ்வோமாகுக!

 

புத்தரோ,கண்ணனோ, ஏசுவோ, மஹாவீரரோ,தாமஸோ எம்மதமாக இருந்தால் என்ன?

 

நான் பரம்பொருள் என்று உணரும் போது நாம் வேத நெறியாளன்.

 

இருப்பது ஒரே பரம்பொருள், அது வடிவம், குணங்கள் இல்லாதது என்று உணரும் போது நான் இஸ்லாமியன்.

 

அஹிம்சையான ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்கும் போது நான் சமணன்.

 

பகுத்தறிவுடன் உண்மையை உணரும் போது நான் பெளத்தன்.

 

அன்புடன் இறைவன் பெயரின் அனைவரையும் ஏற்றுக் கொண்டு தன்னலமின்றி சேவைகள் செய்து சமூஹத்தில் அமைதியை நிலைநாட்ட முற்படும் போது நானே கிறிஸ்துவன்!

 

ஓம் ஷாந்தி! ஷாந்தி! ஷாந்திஹி!

Dr.Pradheep Kumar - Dr.M.Madeswaran

16.1.2016

Madras

We thank Mr.Gnanasekar - auto driver who took us to Chinna malai and St.Thomas Mount on 16.1.2016.

Pungeri UNI5 Center - Kanchipuram District - Paren...
Tharangampadi - Birth places of Indian press and I...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries