St.Thomas tomb in Madras - a true report
Sakthi Foundation
தர்மம் மிகு சென்னையில் புனித தாம்ஸின் ஜீவசமாதி
புனித தாமஸ் பாரத தேசத்தில் குறிப்பாக மயிலையில் உள்ள சாந்தோம் பகுதியில் வாழ்ந்துள்ளார் என்பதில் ஐயம் இல்லை. தாமஸ் தம் ஆத்மா ஷாந்தி அடைந்ததால் அவ்வூர் சாந்தோம் ஆனது. மயிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர் ஏசுவின் ஆன்மீக நெறிகளை ப்ரச்சாரம் செய்துள்ளார்.
அவர் காலத்தில் அவர் பரப்பிய கிறிஸ்துவ நெறி இன்றையதில் இருந்து சற்று மாறுபட்டதே! உள்ளூர் அரசனின் ஆதரவும் மக்களும் அவருக்கு இருந்துள்ளது.
அவர் கல்லால் செதுக்கிய புனிதச் சிலுவையும் அதைச் சுற்றியுள்ள திருவாச்சியும் அதை உள்படுத்த வடித்தக் கருங்கல் மண்டபமும் புனித தீர்த்த பெருங்கிண்ணமும் சாந்தோம் தேவாலய அருங்காட்சியகத்தில் உள்ளன.
இருபுறமும் சிம்மங்கள் கொண்ட பல்லவர் காலத் தூண்களுடன் கூடிய தோரண வாயிலுடன் கூடிய மூலஸ்தானமே கற்சிலுவையுடன் தாமஸ் அமைத்துள்ளார்.மக்களின் கலை, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை அடிபடையாகக் கொண்டே சமயங்கள் வளர்கின்றன.
ஆனால் போர்த்துகீஸியர்களால் பிற்காலத்தில் அவர் எழுப்பிய தேவாலயம் முற்றிலும் அகற்றப்பட்டு ஐரோப்பியக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்து விட்டது.
இவையெல்லாம் மக்கள் மனதில் வேற்றுமையை ஏற்படுத்தும் உத்திகள்.தாம் பின்பற்றும் ஒரு சமயம் தன் மண்ணினுடையதே அல்ல என்பதை மக்கள் பிரிவினைப் பார்வையில் பார்க்க ஆரம்பித்தும் விட்டனர், அதனால் உள் தேசத்து மதப்பூசல்கள் அதிகரித்தன.
இன்றைய கிறிஸ்துவ நூல்கள் கூறுவது போல பல ஆயிரக் கணக்கில் மக்கள் கிறிஸ்துவத்தைத் தழுவியிருப்பின் கண்டிப்பாக மூவேந்தர் தம் காலத்து இலக்கியங்களும் கல்வெட்டுகளும் கலைகளும் அவற்றைப் பதிவு செய்திருக்கும்.
ஆனால் மக்கள் தாமஸ் கூறிய ஆன்மீக நெறியைப் பின்பற்றினரே ஒழிய ஒரு மதத்தை அல்ல.
தாமஸ் மறைந்த பின் அவரது பூதவுடல் மயிலை வாழ் மக்களால் மன்னனால் மிக்க மரியாதையுடன் ஜீவ சமாதி ஆக்கப்பட்டது.
அவரது சமாதியில் வேண்டிக் கொண்ட போதும், புனித மண்ணை உட்கொண்ட போதும் உடல் பிணிகள் நீங்கின.பலமுறைக் கல்லறை அதற்காகத் திறக்கப் பட்டுள்ளதை வரலாறு காட்டுகின்றது.
தாமஸ் பாரத தேசம் வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள்....
கி.பி 250
தாமஸ் மூலம் இந்தியாவும் அதைச் சுற்றியுள்ள தேசங்களும் ஏசுவின் ஆன்மீக நெறிகளை அறிந்தன. [ஒரு சிரியா மொழி நூல்]
கி.பி 396
சிரிலோனாஸ் என்ற கிறிஸ்துவ குரு சிரியா மொழியில் ஒரு கவிதை எழுதியதில் தாமஸ் பாரத தேசத்தில் பணி செய்ததைக் குறிப்பிடுகிறார்.
கி.பி 4
எடெசா நகர் கிறிஸ்துவச் சபைக்குத் தாமஸின் உடலின் சில எலும்புகள் கொண்டு வரப்பட்டன.
அதே நூற்றாண்டில் க்ரகோரி நஸியான்ஸன் என்பவர், ”ஏசுவின் மாணவர்கள் பூமியில் பல தேசங்களில் பணியாற்றினாலும் அத்தேசத்து மக்களிடையே வேற்றுவர்களாகத் தான் கருதப்பட்டுள்ளனர், குறிப்பாகத் தாமஸ் இந்தியாவில் பல இன மக்களுடன் வாழ்ந்தார்....”
கி.பி 5
யோவான் பொன்வாய் என்ற கிறிஸ்துவ குரு, ”ஏசுவின் பல மாணாக்கரின் கல்லறைகள் எங்குள்ளன என்பதைப் பற்றித் தெரியவே இல்லை, ஆனால் பாரத தேசத்தில் தாமஸின் கல்லறை உள்ளது....”
கி.பி 6
தூர்ஸ் நகர ஆயர் ஃப்ரான்ஸ், ”இந்தியாவின் மயிலை தாமஸின் கல்லறைக்கு அருகில் மிக அழகிய கோயிலும், சன்யாசிகள் மடமும் உள்ளன” [இவையே இன்று அருங்காட்சியகத்தில் உள்ள பல்லவர் கால ஜீவசமாதிக் கோயிலின் எச்சங்கள், மேலும் பல சமயத்தவரும் தாமஸின் கல்லறையில் தொழுதுள்ளனர்.அவ்விடத்திற்கு அருகில் சன்யாச மடம் இருந்திருக்க வாய்ப்புண்டு.அல்லது அது கபாலீச்சரத்தின் மடமாகவும் இருக்கலாம்.
கி.பி எட்டாம் நூற்றாண்டு ஜூலை எட்டாம் நாள் தாமஸின் பூத உடலின் எலும்புகள் எடெசா நகருக்குக் கொண்டு வரப்பட்டன என்று சில கல்வெட்டுகள் கூறுவன.
ரோம் நகரில் உள்ள மிகப்பழைய குறிப்பு ஒன்று டிசம்பர் 21ஆம் நாள் தாமஸ் மறைந்தார் என்கிறது.
கான்ஸ்டாண்டிநோபிள், ”இந்திய அரசனால் தாமஸ் கொல்லப்பட்டார்” என்கிறார்.இவர் மூலம் தான் தூய ஆன்மீக நெறியான கிறிஸ்துவம் மதமாக்கப் பட்டது என்பதில் ஐயமே இல்லை.
தாமஸ் உயிர்விட்ட இடம் இன்றைய St.தாமஸ் மலை என்பதில் ஐயமே இல்லை.
அம்மலையைக் ”கல்மீனா” - கடினமானப் பாறைகளும் மணமும் சூழ்ந்த குன்று என்று போர்த்துகீஸியர் குறிப்பிடுவர்..
கி.பி 883ல் ஆங்கிலேய அரசன் போரில் வெற்றி பெற்றதன் காணிக்கையாக சில விலைமிக்க பொருட்களைத் தாமஸின் ஜீவசமாதிக்கு அனுப்பியுள்ளான்.
கி.பி 1293ல் மார்கோபோலோ [வெனிஸ் யாத்ரீகர்] கூறுகிறார்,
”கிறிஸ்துவர்களும் சிரியா தேசத்து அன்பர்களும் கடல் பயணம் மேற்கொண்டு தாமஸின் கல்லறையை தரிசனம் செய்வதைக் கண்டேன்.அவர்கள் தாமஸை ”அவரியான்” - மிக உயர்ந்த மனிதன் என்றே அழைக்கிறார்கள்.
தாமஸின் கல்லறை மண் சிவப்பாக உள்ளது.அதை எடுத்து உட்கொள்ளும் வ்யாதியஸ்தன் குணமாகிறான்.இப்பணியை இங்குள்ள கிறிஸ்தவர்கள் மேற்கொள்கிறார்கள்.இறைவனின் அருள் கலந்த தாமஸின் கருணையால் தான் இது நிகழ்கிறது...”
கி.பி 13
”தாமஸ் இறந்தவுடன் மலாப்பில் [மயிலாப்பூர்] கல்லறை வைக்கப்பட்டார்” - பசாரா நகர் மார்ஸலோமா ஆயரின் குறிப்பு.
அதே நூற்றாண்டில் மார்கோபோலோ மாபார் கடற்கரையில் தாமஸின் கல்லறைத் தான் கண்டதாகக் கூறுகிறார்.
கி.பி 14
''தாமஸின் கல்லறை இந்தியாவில் மையிலான் என்ற ஸ்தலத்தில் உள்ளது” - நெஸ்தோரியர் அமீர்
கி.பி 16
மலபார் கிறிஸ்தவர்கள் சிலர் மெலியாப்போர் கடற்கரையில் உள்ள தாமஸின் கல்லறையைப் பழுது பார்க்கிறார்கள் என்று கொடுங்கல்லூர் தேவாலய ஆயர் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.
தாமஸின் கல்லறைக்குள்........
கி.பி 1517ல் கல்லறை திறக்கப் பட்டுள்ளது.
போர்த்துகீஸிய வணிகர்களுடன் வந்த அத்தேசத்துக் கிறிஸ்துவ மத குருமார்கள் கல்லறையை உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் அனுமதியுடன் திறந்துள்ளனர்.
[டியாரகோ ஃபெர்னான்டஸ், பாஸ்தியோ ஃபெர்னான்டஸ் ஆகியோ அக்குருக்கள் ஆவர்]
”தாமஸின் கல்லறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அதை ஒரு உள்ளூர் இஸ்லாமியர் கவனித்துக் கொள்கிறார்.அதில் அவன் விளக்கை ஏற்றி வழிபாட்டுக்கு வைத்தான்.அவன் முன்னோர்கள் அப்படித்தான் செய்தனராம்.கல்லறையை அவன் ”பெத்துமா” [தாமஸின் வீடு] என்றான்..” - ஃபெர்னான்டஸ்
அவ்வூரில் தங்கிய அக்குருமார்கள் கி.பி 1523ல் தான் கல்லறைத் தோண்டினர்.கஸ்ப்பார் கொய்லியோ என்ற போர்த்துகீஸிய தலைமை குரு அதற்குள் மயிலை வந்துள்ளார்.அவர் முன்னிலையில் தான் தாமஸின் கல்லறை திறக்கப்பட்டது.
டைரிக் குறிப்பைக் காண்க....
கல்லறை உடைத்துத் தோண்டினோம்.முதலில் கடல் மணலும் சுண்ணாம்புமும் கலந்து வந்தன. அதன் உள்ளே புனிதரின் கபாலத்தின் உடைந்த எலும்புகள், முதுகெலும்பு ஆகியன இருந்தன. அங்கே பெரிய மண்குடமும் இருந்தது.[அதனுள் அவர் பயன்படுத்திய பொருட்களையும் புனித நூலையும் இட்டு வைத்து இருக்கலாம்.]
மூன்று அடி உயரம் கொண்ட மரப்பிடியுடன் கூடிய ஈட்டி [தாமஸ் கையில் இருந்த ஞானத்தின் அடையாளம்] இருந்தது.அது இருப்பினால் ஆனது.
மேனுவெல் தெ பெரியா என்ற நம் கப்பலின் மாலுமி அவற்றை எல்லாம் அழகிய பெட்டிக்குள் சேகரித்தார்.அப்பெட்டியை அன்று மயிலை முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.
கி.பி 1559. விஜய நகர அரசன் தாமஸின் எலும்புகளையும் வேலையும் தன் அரண்மனையில் வைத்து மரியாதை செய்தான்.
அதே ஆண்டில் சில எலும்புகளையும் வேலின் சிறு பகுதியையும் கொச்சினுக்கு அனுப்பினர்.அங்கிருந்து அவை கோவிற்கு அனுப்பப் பட்டன.இன்றும் நிபாந்தரில் உள்ள சர்ச்சில் அவை உள.
கி.பி 1729ல் மீண்டும் தாமஸின் கல்லறை திறக்கப் பட்டது. கல்லறையைச் சுற்றியுள்ள மணல் மந்திரிக்கப்பட்டு மக்களுக்குத் தரப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் இன்று 2016ல் கல்லறை மிகவும் நவீனமயமாக உள்ளது.சின்னமலையிலும் தாமஸ் மலையிலும் கிடைத்த ஜீவாதார உணர்ச்சிப் பெருக்கு இங்கு எமக்கு ஏற்படவில்லை.ஆனால் இன்று பல இடங்களில் அவரது உடலின் பல எலும்புகள் உள்ளன என்று தெரிகின்றது.
என்ன ஆயினும் பாரத தேசத்தின் சனாதன தர்மத்தில் நாம் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறோம்.மத த்வேஷங்களும் வன்முறைகளும் இருந்துள்ளன.ஆனால் அவற்றை மீறி மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கான்கின்றனர்.
இன்று சாந்தோமில் அமைந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற பெஸிலிகா சர்ச்சில் இன்று காலை ப்ரார்த்தனைகள் மேற்கொண்டேன்.தர்மமும் அஹிம்சையும் கைகூடி நம்மால் இயன்ற சேவைகளை இறைவனின் ஆளுமையின் கீழ் ஆணவமின்றிச் செய்ய அடியேன் தாமஸிடம் வேண்டினேன்.
சென்ற டிசம்பரின் கீழை தேசப்பயணம் என்னுள் பெளத்த சமண ஆய்வுகளை, கற்றலை, புரிதலை, ஏற்றலை ஏற்படுத்தின.
இவ்வாண்டு வேளாங்கண்ணி மாதா மூலம் ஆரம்பித்த இப்பயணம் இன்று ஒரு தேர் நிலை சேர்ந்த வண்ணமாக அமைகிறது.
”தர்மம் மிகு சென்னை” என்று வள்ளல் பெருமான் புகழும் இம்மாநகரம் பற்பல புனித ஸ்தலங்களுடன் கூடிய உன்னத ஆன்மீக அன்பர்தம் ஜீவசமாதிகளையும் கொண்டு இருப்பதால் வளமுடன் உள்ளது!
ஆச்சாரியர்கள், குருமார்கள் மூலமே இறையை உணர்ந்து அருள் பெற முடியும் என்பது தானே உண்மை?! அதைத் தானே அனைத்துச் சமயங்களில் உள்ள ஆன்மீகப் பெரியோரும் உணர்த்துகிறார்கள்?
அதில் ஏசுவின் அருட்தொண்டர் தாமஸின் ஜீவசமாதியும் மயிலையில் அமைந்து நமக்கு அருள் புரிவதை நாம் பயன்படுத்தி உலக க்ஷேமத்திற்காகப் பாடுபடுவோமாகுக!
ஆமென்!
ஓம் ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!
* ஏசு வாழ்ந்த ஸ்தலங்களை எல்லாம் தரிசிக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனையைத் தாமஸ் அருளட்டும்.
By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/