St.Thomas Mount - பரங்கி மலை

 

கி.பி 52ல் பாரத தேசத்தின் வடபகுதிக்கு வந்தார் ஏசுவின் மாணவருள் ஒருவரான புனித தாமஸ்.பின்னர் அவர் சேர தேசத்தின் தலைநகர் [இக்காலக் கேரளத்தின் கொடுங்கல்லூர்] வந்து மன்னனின் ஆதரவுடன் ஆன்மீகப் பணி செய்தார், மக்களின் மரியாதையைப் பெற்றார்.

அதன் பின்னர் அவர் தொண்டை தேசத்தின் துறைமுகப் பட்டிணமான திருமயிலைக்கு வருகிறார்.அங்கிருந்து ஆன்மீகப் பணியாற்றினார்.சைதைக்கு அருகில் உள்ள சின்னமலை மற்றும் பரங்கி மலைப்பகுதியில் அடிக்கடி தாமஸ் தவம் செய்வது வழக்கம், மக்களையும் அன்றைய ஆன்மீக அன்பர்களையும் பார்ப்பதும் வழக்கம்.

பரங்கி மலையில் அவர் பாரதக் கலாச்சாரத்தின் அடிப்படையில் புனித சிலுவையை வடிவமைத்தார்.அதைச் சாதி மத பேதம் இன்றி மக்கள் வணங்கினர் என்று கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டின் பயணிகள் குறிப்புகள் கூறும்.

அம்மலையில் அவர் உயிர் நீத்தார்.சிலர் அவர் கொல்லப்பட்டார் என்பர்.சிலர் அவர் ஒரு வேடனின் தவறான அம்பு எய்தலால் இறந்தார் என்பர்.

அவரது உடல் மயிலையில் சமாதி வைக்கப்பட்டு அதன் அருகில் தான் இன்றைய உலகப் புகழ் பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளது.

கி.பி 15ஆம் நூற்றாண்டில் போர்த்துகீஸிய மன்னரின் கட்டளையின் பேரில் பல யாத்ரீகர்கள் இம்மலையில் அகழ்வாய்வு செய்தனர்.அப்போது தாமஸின் கற்சிலுவை கிடைத்துள்ளது.அதில் சில துளி ரத்தம் இருப்பதாகக் கூறுவர்.

அச்சிலுவையை வழிபாட்டுப் பொருளாக்கி அவர்கள் அக்காலத்திலேயே ஒரு கிறிஸ்துவத் தொழுகை இடம் உண்டாக்கினர்.

மேலும் இன்று நவீனமான சர்ச்சுடன் கூடிய அமைப்பும் உள்ளது.அதில் உலகில் பல முக்கிய கிறிஸ்துவ ஆன்மீக அன்பர்தம் உடலின் சிறிய எலும்புகள் வைக்கப் பட்டுள்ளன.

புனிதர் லூக் வரைந்த குழந்தை ஏசுவுடன் கூடிய மேரி அன்னையின் வரைப்படமும் அவ்விடத்தில் உள்ளது.

சந்திரகிரி நாயக்க அதிகாரி இப்படத்தைத் தன் பூந்தமல்லி அரண்மனைக்குக் கொண்டு வரச்செய்து பார்த்த பின் மரியாதையுடன் பல்லக்கில் மலைக்கு அனுப்பியதாக வரலாறு பதிவு செய்கிறது.

மேலும் ஏசுவின் பிறப்பை எதிர் நோக்கும் கர்ப்பினியான அன்னை மேரியின் அழகிய மேற்கத்திய பாணிச் சிலையும் உள்ளது.

St.Thomas Mount எனப்படும் புனித தாமஸ் கால் பதித்த இம்மலை பாரத தேசத்தின் ஆன்மீக ஒறுமைப்பாட்டின் அடையாளம்.

* தாமஸ் பற்றிய பல்வேறு ஆய்வுகள் தனியே வெளியிடப் படுகின்றது.