புனித மேரி தேவாலயம் - ஆஸியாவின் முதல் ஆங்கிலப் பாணி சர்ச்

செப்டம்பர் மாதம் நாள், 1662 வருடம்
எட்வர்ட் விண்டர் மதராஸ் கோட்டையின் உயர் அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றார்.
***
உணவுக் கூடத்தில் தம் சகாக்கள் ப்ரார்த்தனை செய்வதைக் கண்டார், மனம் பொறுக்கவில்லை.

அவரது உத்தரவின் பேரில் மரத்தால் ஆன சிறிய அழகிய தொழுகை இடமும் மருத்துவமனையும் கட்டப்பட்டன.

அந்த தொழுகைக் கூடமே புனித மேரி சர்ச்சின் விதை ஆகும்.

அவ்விடமே புதன் - சனிக் கிழமைகளில் கவனர் மற்றும் பிற தலைவர்கள் கூடி முக்கிய வழக்கை விசாரிக்கும் இடமும் ஆயிற்று.

அவ்விடமே பின்னர் முதல் ஆங்கிலப் பள்ளியும் ஆயிற்று.

பாரத தேசத்தில் காலடி வைத்த மேற்கத்தியரும் நம்மூர்க் கோயில்களின் பயன்பாட்டை அறிந்தனரோ?

1678 - 1680 ஆம் ஆண்டுகளில் கம்பெனியின் ஆதரவு இன்றி கோட்டைக்குள் இருக்கும் அதிகாரிகளும் பணியாளர்களும் இணைந்து நிதி திரட்டி மிக அழகிய புனித மேரி சர்ச்சை உருவாக்கி விட்டனர். ஆஸியாவின் முதல் ஆங்கிலப் பாணி சர்ச் இதுவே!

அழகிய நீண்ட உயரமான சர்ச் கோபுரம் கி.பி 1701ல் எழும்பியது. அதன் உச்சிக் கலசத்துக்குப் பொன் பூசும் பணி 1710ல் நிகழ்ந்தது.


ஸ்ட்ரெயின் ஷாம் மாஸ்டர் என்ற அதிகாரி இதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டாராம்.

படையெடுப்புகளுக்கு அஞ்சி சர்ச்சையே ஒரு கோட்டை போல் தான் எழுப்பினர்.அதை வடிவமைத்தவர் கோட்டையின் பீரங்கிப் படைத் தலைவர் வில்லியம் டிக்ஸன்.

ஆனால் 1746ல் ஃப்ரெஞ்ச் கோட்டையைக் கைப்பற்றிய போது சர்ச் சேதமானது.

புனித மேரி கருவுற்ற நன்நாளில் சர்ச் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.


போரில் இறந்தோரின் வீர மரண மெய்கீர்த்திகள், வாழ்ந்து போனவர்கள் பற்றிய குறிப்புகள் ஆகியன கல்லறைச் சான்றிதழ்களாக மிக அழகிய வேலைப்பாட்டுடன் உள்ளன. தமிழ், லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவை உள.

பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஃப்ரெஞ்ச் ஓவியம் - ஏசுவின் இறுதி விருந்து மிக நேர்த்தியாகக் கருவறையில் உள்ளது.அதன் கீழ் புனித சிலுவை, பலி பீடம், மெழுகு வர்த்திகள் உள. ஒவ்வொன்றும் ஒரு தனி அதிகாரியின் கொடையாகும்.

கோட்டையின் முதல் பாதிரிமார் முதலான கிறிஸ்துவப் பாதிரிகளின் பெயர், ஆண்டு பதிவாகி உள்ளன.

பதினெட்டாம் நூற்றாண்டின் முதலில் இருந்து ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்துவர்தம் பெயர்கள், முகவரிகள் உள்ள பதிவேடும் பார்வைக்கு உள்ளது.

இந்தியர் தம் மரியாதையை அதிகம் சம்பாதித்த தாமஸ் மன்ரோவின் கல்லறை உள்ள இடம் இது தான்.

அழகிய காணிக்கை பேழை, பளிங்குக்கற்களில் மேற்கத்திய கைவண்ணம், மிக அழகிய விரிந்த கூடம், விலாசமான ஜன்னல்கள், மாடிப்படிகள், கலைச்சிற்பங்கள், புனித ஞானஸ்தானத் தீர்த்தம் உள்ள கருங்கல் ஆகியன உள, கண்டு களிக்க வேண்டும்.

கோட்டைக்குள் முதல் கல்யாணம்...
அழகிய இவ்விடத்தில் தான் அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தை உருவாக்கக் காரணமான எலிஹூ ஏலில் கல்யாணம் நிகழ்ந்தது.அதுவே கோட்டையுள் நிகழ்ந்த முதல் கல்யாணமாம்.

முதல் விதவைக் கல்யாணம்...
சென்னைக்குள் தீக்குளிக்க நிர்பந்தம் செய்யப் பட்ட ஒரு விதவையைக் காப்பாற்றிக் கல்யாணம் செய்து கொண்ட அதிகாரி ஜாப் சார்னாக்.கொல்கத்தா நகரை உருவாக்கிய ஜாப் சார்னாக்கின் மூன்று பெண்களும் இங்கு தான் ஞானஸ்தானம் பெற்றனர்.இவரது கல்யாண தினத்தின் நினைவாக அழகிய கருங்கல் மற்றும் மரவேலைப்பாடு கொண்ட தீர்த்த பாத்திரம் இவரால் சர்ச்சுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மதராஸ் கோட்டை என்றவுடன் நினைவில் கண்முன் வரும் உயரமான கொடி மரமும் புனித மேரி சர்ச்சும் பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள்.