கத்தீட்ரல் சாலையில்....[St.George Church] - 1815 A.D
மதராஸின் கோட்டையுள் வாழ்ந்த கவர்னர்களும் வைஸ்ராய்களும் உயர்குடி ஆங்கில மக்களும், நம்மூர் மதம் மாறிய அன்பர்களும் கூடும், ப்ரார்த்திக்கும் ப்ரம்மாண்டமான சர்ச் தான் இன்று ஜெமினி பாலத்தின் கீழ் அமெரிக்கன் தூதரகத்தின் அருகில் இருக்கும் புனித ஜார்ஜ் சர்ச்.
இதையே ”கத்தீட்ரல்” என்கிறார்கள். இதனால் இச்சாலை கத்தீட்ரல் சாலை ஆனது.
சுமார் 201 ஆண்டுகள் வயதான சர்ச் இது.
அக்காலத்தின் மிகப்பெரிய லாட்டரிப் பரிசுத் தொகையைக் கொண்டு எழுப்பப் பட்ட சர்ச் இது.
மிக ப்ரம்மாண்டமான ஆர்கன் பைப் இசைக்கருவிகள் சர்ச்சில் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.
பல தேசத்தில் இறந்தவர்களின் தகவல்கள் அழகிய கல்வெட்டுக்களுடன் கூடிய பளிங்குக்கல் வேலைகளுடன் சுவர்களிலும், தரையில் நிறைந்துள்ளன.
ஆங்கிலேய உயர் அதிகாரிகள், மதராஸின் பணக்காரக் கிறிஸ்துவர்கள், அலுவலர்கள், வீரர்கள் போன்றோர் தம் புகழ்ச் சான்றிதழ் அவர்தம் மரணத்திற்குப் பின் பதிக்கப் பட்டுள்ளன.
”இவர் தன்னுடன் சேர்ந்தவர்க்கும் சுற்றத்தவர்க்கும் நன்மை செய்து, அவர்தம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்” என்ற வாசகம் தனிமனித வாழ்வின் பொருளை விளக்குகிறது.
மிக உயர்ந்த வெண்மையான தூண்கள், அழகிய உயர்ந்த கோபுரம், கடிகாரம், பலி பீடம், மணி, அழகிய பித்தளைக் கழுகுச்சிலை [ஆங்கிலேயரின் ஆளுமையின் அடையாளம்], தொங்கும் அழகிய சர விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் பல அழகிய பொருட்களைக் காண்கிறோம்.
வண்ணக் கண்ணாடிகள், ஏசுவின் ஞானஸ்தானம் வரையப்பட்ட கண்ணாடிகள் கவனத்தை ஈர்க்கும்.
கருவறைப் பீடத்தில் உள்ள புனித சிலுவை நம்மூர் உற்சவ மூர்த்திகளின் ஆதார பீட அமைப்பைப் போல் மிக நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டவை.இங்கு தான் செய்யப்பட்டிருக்க வேண்டும். சர்ஜன் கர்னல் கார்னிஷ் அதை தானம் செய்துள்ளார்.
கடிகாரம் கிழக்கிந்தியக் கம்பெணியால் 1828ல் அளிக்கப் பட்டதாம்.
1871ல் ஆறு கனமான மணிகள் கிறிஸ்துமஸ் நாளன்று இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்து பொருத்தப்பட்டது.
சர்ச்சில் பணியாற்றும் ஒரு பணியாளர் மூதாட்டி சில இடங்களை அவசியம் பார்க்கச் சொன்னார்.அவருக்கு நன்றி!