மதராஸின் முதல் போஸ்ட் ஆபிஸ்
ஒருவருடன் ஒருவர் கடிதம் மூலம் தொடர்பு கொள்வது மிகப் பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.
இன்று நினைத்த மாத்திரத்தில் இணைய தளம் மூலம், அலைப்பேசி மூலம் ஏதோ ஒரு கண்டத்தில் இருக்கும் தோழனை, உறவைப் பார்த்துக் கொண்டே பேசும் நிலைக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.
ஒரு கடிதம் சென்று சேர்ந்து பதில் வருவதற்கே ஓராண்டு ஆன காலமும் வரலாற்றில் உண்டு, அதைக் கற்பனை செய்து பார்க்க இக்கால மக்கள் சற்று சிரமப்படக்கூடும்.
ஒரு வீட்டில் கடிதம் வருவதை எவ்வளவு சிறப்பாகக் கருதினர் என்பதை 1980,90 களில் வாழ்ந்தோர் உணர்வர்.
கிழக்கிந்தியக் கம்பெனியும் அடிக்கடி தன் திட்டங்களை இங்கிலாந்துக்குக் கடிதம் மூலம் அனுப்பி, ஆலோசனை செய்து, தேவையான அனுமதி பெறப் பல காலம் பிடித்துள்ளது.
பிழைப்புக்காக இவ்வூரில் வாழ்ந்த ஆங்கில வீரர்களும் தம் மனதில் உள்ள உணர்வுகளைத் தன் தேசத்து உறவுகளிடம், குடும்பத்திடம், தோழர்களிடம் கொட்டித் தீர்க்கத் தவித்துள்ளனர்.
மீண்டும் தாய் தேசம் திரும்புவதே பலருக்கும் வினாக்குறியாக இருந்த சமயத்தில் கடிதப் போக்குவரத்து கைகொடுத்தது.
அதே போல் குடும்பத்தை விட்டு ஊரை விட்டு வந்த நம்மூர் வீரர்களுக்கும் பலவிதத் தொழில் முனைவோருக்கும் கடிதம் கைகொடுத்தது.
கி.பி 1736, ஜூலை ஏழாம் நாள் கோட்டைக்குள் எப்படிக் கடிதப் போக்குவரத்தைத் தரமானதாகச் செய்வது என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கி.பி 1786ல் மதராஸ் போஸ்ட் ஆபிஸ் தொடங்கப்பட்டது.
தேசம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களுக்குத் தபால்கள் எடுத்துச் செல்லப் பட்டன.ஸ்டாம்பிற்கு பதில் ஆரம்ப காலத்தில் சிறிய செப்புத் தகடுகள் ஒட்டப்பட்டன.
மதராஸுக்குள் முதலில் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் போஸ்ட் மேன் சென்று பணியாற்றினார்.ஒரு கட்டத்தில் மோட்டார் வண்டியும் பயன்பட்டது.
கேம்ப்பெல் என்ற ஆங்கிலேயர் முதல் போஸ்ட் மாஸ்டர் ஆகப் பதவி ஏற்றார்.இவர் அன்றைய கவர்னரின் P.A வாகப் பணியாற்றியவர்.
விரைவில் ராபர்ட் சிஸ் ஹோமின் கைவண்ணத்தில் இன்று துறைமுகத்தின் எதிரில் காணப்படும் கம்பீரமான அழகிய ஜார்ஜ் டவுன் போஸ்ட் ஆபிஸ் எழும்பியது.