கூவம் - ”பாரதத்தின் தேம்ஸ்” என்று ஆங்கிலேயன் புகழ்ந்த நதியின் கதை
மதராஸின் பெருமையே அதன் இரண்டு ஆறுகள் தான்.
காரணம் ஆற்றின் கரைகள் தானே நாகரிகத்தின் வளர்ச்சிக் களம்?
வைகைக் கரை - மதுரை
காவிரிக் கரை - பூம்புகார், உறையூர், தஞ்சை
பேரியாற்றங்கரை - வஞ்சி [கொடுங்கலூர், கேரளம்]
அதுபோல் கூவம் மற்றும் அடையாற்றின் கரையில் திருமயிலை-திருவல்லிக்கேணி என்ற இரட்டை நகரங்கள் உருவாகின, ஆன்மீகத்துக்கும் கடல்சார் வணிகத்துக்கும் வழி செய்தன.
அவ்வாறுகளின் தன்மைகளை உணர்ந்தே ஆங்கிலேயன் இக்கடற்கரைப் பகுதியைத் தேர்வு செய்தான்.
குறிப்பாகக் கூவம் ஆற்றின் கரையில் தன் தேசத்து லண்டன் மாநகரைக் காண எண்ணினான்.அடையாற்றைத் தன் தெற்கு எல்லைக் காவல் அரணாக நம்பினான்.
இன்று இவ்வாறுகள் சுயநலம் கொண்ட நம்மால் கொல்லப்பட்டன!
மனிதனைக் கொன்றால் தூக்கு அல்லது ஆயுள் தண்டனை! இயற்கையைக் கொன்றால்? காலம் தோறும், அடுத்த அடுத்த தலைமுறைக்கு தண்டனை.சமீபத்திய பெருமழை வெள்ளம் இரு நதிகளையும் சுத்தம் செய்தது, இயற்கைக்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் அல்லவா?
கி.பி 1940களில் தம் கல்லூரிக் காலத்தில் கூவத்தில் குளித்து, நீந்தி, படகு சவாரி செய்ததை என் அன்னையாரின் தகப்பனார் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
நவீனத் தொழில்நுட்பத்தை நாம் கற்றது போதும், மேலை நாடுகளின் தேவையில்லாக் கலாச்சரங்களை விடுத்து அவன் இயற்கைக்குத் தரும் மரியாதையை நாம் கற்க வேண்டும்.
பழமையான மதராஸில் கூவம் பாய்வதன் புகைப்படங்கள் ஏக்கத்தை வரவைக்கும்!
சரி இந்த வற்றாத ஜீவ நதியின் வரலாறு என்ன?
திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற சிற்றூரில் தோன்றி, மதராஸில் நேஃபியர் பாலத்தடியில் ஓடிச் சென்று தன் தலைவனான கடலைச் சேர்கிறது கூவம்.
அதன் வடகரையில் ஆங்கிலேயர் St.ஜார்ஜ் கோட்டையை எழுப்பினர், பெரிய அரசை ஸ்தாபித்தனர்.
தொண்டை நாட்டின் முக்கியக் கடல்வழி வாணிகத்துக்குக் கூவம் உறுதுணை செய்தது.மயிலைத் துறைமுகம் மிகப் பழமை வாய்ந்தது.அதற்குள் சரக்குகளைக் கொண்டு வரப் படகுகள் இவ்வாற்றில் இயங்கின.
ஆங்கிலேயர் மிக அதிக அளவில் கூவத்தினைப் பயன்படுத்தினர்.
கூவத்துடன் வட ஆறு எனப்படும் பக்கிங்ஹேம் கால்வாயும் சேர்கிறது.
கி.பி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பச்சையப்ப முதலி என்ற பெரும் துபாஷி இவ்வாற்றில் தினமும் நீராடி, சிந்தாதறிப்பேட்டைக் கோமளேஸ்வரன் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்று அவரது சரிதம் கூறும்.
கூபம் - வடமொழியில் கிணறு என்று அர்த்தம், அதன் திரிபே கூவம்.
கிணறு போல் ஒரு வற்றாத ஊற்றாகி வழியும் தண்ணீர் கூவம் ஆகும்.
சுமார் 72 கிலோமீட்டர் பாயும் ஆறு இது.இதையே கோமளேஸ்வரம் ஆறு என்று பழந்தமிழ் நூல்கள் கூறும்.அதாவது திருவல்லிக்கேணி ஆறு என்று அர்த்தம். கோமளம் - அல்லி, தாமரை. அல்லிக்கேணி - அல்லி மலர்கள் நிறைந்த பெரிய குளக்கேணி - திவ்யதேசம் திருவல்லிக்கேணி.அதன் பகுதியில் பாயும் ஆறு கோமளேஸ்வரம் ஆறு.
கூவம் என்ற பெயரே ஆங்கிலேயரின் பழைய வரைப்படங்களில் உள்ளது, அவர்கள் வாயில் எளிதாக உச்சரிக்கப் பட்டுள்ளது.
மனம் வைத்தால் கூவம் சுத்தம் ஆகும்.ஆங்கிலத்தையும் அந்நிய கலாச்சாரத்தையும் கொண்டாடும் நாம் அவர்தம் இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வையும் ஏன் விட்டுவிட்டோம்?
ஆனால் ஒன்று, நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இயற்கை விழித்துக் கொண்டு கூவத்தைக் காக்கும்.....மற்றொரு ஆழிப்பேரலை - மழைப் பெருவெள்ளம் என.....