மூர்மார்கட்
ஆண்டுக்கு ஒருமுறை மதராஸில் புத்தகக் கண்காட்சி வருகிறது.
ஆனால் ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் புத்தகக் கண்காட்சி போல் ஒரு விற்பனைப் பகுதி மதராஸில் இயங்கியது.
முன்பெல்லாம் யாராவது மதராஸ் போகிறார்கள் என்றால் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள் ஒரு புத்தகப் பட்டியலே கொடுத்து விடுவார்கள்.
குறிப்பாக second hand books அதிகம் கிடைக்கும் இடமாக இது இருந்தது.
அது தான் கி.பி 1985 மே 30ஆம் நாள் தீக்கு இரையான மூர் மார்கட்.
இன்றைய சென்டரல் ரயில் நிலையத்தின் தோழர்கள் நால்வர்.
ரிப்பன் மாளிகை, விக்டோரியா மஹால், மூர் மார்கட், தென்னிந்திய ரயிவே தலைமைச் செயலகம்.
பாவம் மூர் மார்கட் நண்பன் தீயில் வெந்து கருகியது, இன்று அவ்விடத்தில் நவீன பாணியில் ரயிவே முன்பதிவு செய்யும் கட்டிடம் நிற்கிறது.
மூர் மார்கட்டின் நினைவுச் சின்னம் கூட கடைகளின் மத்தியில் அமிழ்ந்து கிடப்பதைக் காண்க.
கவர்னர் ஜென்ரல் ஜார்ஜ் மூர் கி.பி 1898ஆம் ஆண்டு மூர் மார்கட்டுக்கு அடிகோலினார். இந்தோ சாரசானிக் முறையில் ரீ இல்ஸ் என்பவர் வடிவமைக்க அழகாகக் கட்டிடம் எழும்பியது. அதை எழுப்பியவர் ஏ.சுப்ரமண்ய ஐயர். கி.பி 1900ல் கட்டிடம் பல கடைகளுடன் இயங்க ஆரம்பித்தது.
இன்றைய ப்ராட்வேயில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு என இக்கட்டிட வளாகம் எழுப்பப் பட்டது. இறைச்சி, காய்கறிகள், பழைய புத்தகங்கள், செல்ல ப்ராணிகள், பழங்காலக் கலைப்பொருட்கள், துணிகள், உணவுப் பண்டங்கள், மலர்கள் .....
இப்புத்தகங்களின் மிச்ச சொச்ச வியாபாரப் பணி இன்றும் மதராஸின் லஸ் பகுதியில், வேறு சில இடங்களில் காணலாம்.
”இது மதராஸ் மூர் மார்கட்டில் வாங்கியது” என்று என் காது பட பல ஊர் மக்கள் பெருமை சொல்வதைக் கேட்டுள்ளேன்.
இத்தனை ஏன், 1970களில் வண்ண மீன்கள் மூர் மார்கட்டில் மட்டும் தான் கிடைக்கும்.என் தகப்பனார் க்லேஸ்கோ தகர டப்பாவில் ஓட்டைகள் போட்டு, தண்ணீர் நிரப்பிச் சில வண்ண மீன்களைக் கொண்டு வந்து மதுரையில் எங்கள் வீட்டு ஹாலில் வைத்தார்.அவை மூர்மார்கட் மீன்கள் தான்.
பல மாணவர்கள் இங்குள்ள நூல்களை வாங்கிப் படித்துத் தேர்ந்துள்ளனர்.
விலை மலிவாகவும் பொருட்களை இங்கு வாங்க முடியும்.குறிப்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்ததால் பல ஊர் மக்களின் வியாபாரம் அதி வேகத்தில் நடக்குமாம்.
”மூர்மார்கட் போகாம வராதீங்க...” என்று சொல்லியே அனுப்புவர்.
மூர் மார்கட் எரிந்த செய்தி வானொலியில் அறிவிப்பான போது நான் வேதனைப் பட்டேன்.காரணம் நான் வாங்க வேண்டும் என்று கனவில் வைத்திருந்த பொருட்கள் இனி எப்போது கிடைக்கும் என்று அழுதேன்.
எனக்குத் தெரிந்து 1980களில் முதல் டிஜிடல் கடிகாரம் மூர்மார்கட்டில் வாங்கப்பட்டு என் அத்தைகள் கட்டினதைக் கண்டேன்.
பலருக்கும் ஜீவாதாரத்தைக் கொடுத்த அங்காடி அது.
பூம்புகாரிலும் மதுரையிலும் பழங்காலத்தில் பலவித அங்காடிகள் இருந்ததைப் போல் தான் மதராஸின் மூர் மார்கட் பெருமை பெற்றிருந்தது.
பெரியவர்கள், என் வயதினர் இன்றும் சென்ட்ரல் வழியில் போகும் போது மனக்கண்ணில் மூர் மார்கட்டைத் தேடுகிறோம், ஏங்குகிறோம்.
அன்றைய மதராஸிகளின், ஏன் தமிழகத்தின் முதல் நடுத்தர வர்க்கத்தினர் – ஏழைகளின் மால் என்று சொன்னாலும் தவறில்லை!