ஜார்ஜ் டவுன் - கருப்பர் நகரம் - சென்னப் பட்டிணம்

 

* கடற்கரையின்கண் அமையும் நகரம், பட்டிணம் ஆகும்.

நம்மூர் நாயக்க மன்னனின் அனுமதி பெற்று, கூவத்தின் கரையில் வியாபாரம் நிமித்தம் கோட்டையும் குடோனும் கட்டிக் கொண்ட ஆங்கிலேயர், தம் கோட்டைக்குள் யாரையும் தேவையில்லாமல் நுழையவோ வாழவோ விடவில்லை.

மிகப் பழங்காலக் குறிப்புகளின்படி இன்று ஜார்ஜ் கோட்டையுள்ள இடப்பகுதி அந்நாளைய மீனவக் குடிகளின் நிலமாகும்.

குறிப்பாக இஸ்லாமிய அன்பர்தம் அரபி மொழி கற்கும் பள்ளி ஒன்றை ஏற்படுத்த வைத்துக் கொண்டிருந்த நிலம் எனக்கூறப் படுகிறது.

அரபி மூலம் குரான் கற்கும் பள்ளி ”மதரஸா” பள்ளி.

அந்நிலத்தைக் கைக்கொண்ட ஆங்கிலேயர் நன்றியின் காரணமாக ஜார்ஜ் கோட்டைக்குள் உருவான மேற்கத்திய ஆங்கிலேயக் குடியிருப்புக்கு ”மதராஸ்” என்று பெயர் சூட்டினர்.

கோட்டைக்கு வெளியே சற்றுத் தொலைவில் தம் வியாபாரத்துக்கு மிகவும் அவசியமான பல்வேறு தொழிலாளர்களை வரவழைத்து வாழ வழிசெய்துள்ளனர் ஆங்கிலேயர்.

வியாபார நோக்கில் மிக விரைவில் கோட்டைக்கு வெளியே ஒரு குடியிருப்புப் பகுதி வளர்ந்தது.அதற்குக் ”கருப்பர் நகரம்” - BLAC TOWN என்று நிற வேற்றுமையின் அடிப்படையில் பெயரிட்டனர்.

ஆனால் துபாஷி பேரி திம்மப்பா சென்னப்ப நாயக்க மன்னனின் நினைவாகவே ”சென்னப் பட்டிணம்” என்று பெயரிடுகிறார்.அக்குடிருப்பு மக்களுக்கு வேண்டி, ஆங்கிலேயர் அளித்த நிதியைக் கொண்டு இன்று ப்ராட்வேயில் இருக்கும் சென்ன கேசவப் பெருமாள் ஆலயத்தை எழுப்பினார்.

ஆனால் கி.பி 1911ல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் பதவி ஏற்ற தினத்தில் கருப்பர் நகராம் சென்னப் பட்டிணம் ”ஜார்ஜ் டெளன்” என்று பெயர் மாற்றம் பெற்றது.

சென்ட்ரல், வால் டேக்ஸ் சாலை, ஹை கோர்ட், ப்ராட்வே, மின்ட், சிந்தாதறிப்பேட்டை, வண்ணாரப் பேட்டை ஆகியவற்றை அரவணைத்துக் கொண்ட நிலப்பகுதியே மிகப்பழைய சென்னப் பட்டிணம் என்கிற கருப்பர் நகரம்.

ஆனால் பாவம் கி.பி 1746ல் ஃப்ரெஞ்ச் மிகக் கொடுமையாகப் போர் செய்த போது கருப்பர் நகரை அழித்து மண்ணோடு மண்ணாக்கினர், மீண்டும் மூன்று ஆண்டுகளில் முளைத்து வளர்ந்து எப்படியோ பழைய தன்மைக்கு வந்தது சென்னப் பட்டிணம்.

துணி சம்பந்தமான அனைத்து தொழிலாளரும் கருப்பர் நகரில் வாழ்ந்தனர்.மேலும் பல்வேறு வியாபாரிகள், துபாஷிகள், தரகர்கள், கலைஞர்கள் அப்பகுதியில் வாழ்ந்தனர்.

அன்றைய கலங்கரை விளக்கு விடிய விடிய எரிவதை, கப்பல்கள் கரை சேர்வதை, ஐரோப்பியரின் வருகையை, துபாஷிகளும் தரகர்களும், படகோட்டிகளும் உறவாடுவதை மனக்கண்கள் இன்றும் காணும் இடம் இந்த ஜார்ஜ் டவுன்.

கருப்பர் நகரான இன்றைய ஜார்ஜ் டெளன் தான் மதராஸின் முதல் இடம். PIN CODE 600001.

இதை ஒட்டியே ரயிவே, கோர்ட், துறைமுகம், தபால் நிலையம், அச்சகம் என அனைத்தும் வளர்ந்தன.

இன்றும் பல துபாஷிகள், கருப்பர் நகரின் செல்வந்தர்கள் ஆகியோர் ஜார்ஜ் டவுனில் வீதிகளாய் வாழ்கின்றனர்.

சென்னப் பட்டிணத்தின் அதிதேவதை ஸ்ரீகாளிகாம்பாள் தம்புச்செட்டி தெருவில் தான் உள்ளாள்.

சென்னப் பட்டிணத்தில் கி.பி 1670ல் முதல் மசூதி கட்டப்பட்டது.ஆனால் அது இப்போது இல்லை.இன்றைய மூர் தெருவில் அது இருந்துள்ளது.இன்று காணும் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள மசூதி கி.பி 18ஆம் நூற்றாண்டில் தான் எழும்பியது.

கி.பி 17ஆம் நூற்றாண்டுகளில் பவள - முத்து வியாபாரம் நிகழ்ந்த தெரு தான் பவளக்காரத் தெரு.அத்தெருவில் போர்த்துகீஸ் மற்றும் யூதர்கள் வாழ்ந்துள்ளனர்.

ஜார்ஜ் டவுனில் மிகப் பழைய சர்ச்சுகளும் உள்ளன.

ஆர்மேனியன் சர்ச் - ஆன்மேனியன் தெரு 

புனித மேரி சர்ச் - கி.பி 1642

ஆங்கிலேய ப்ரோட்டஸ்டேன்ட் சர்ச் - டேவிட்ஸன் தெரு - கி.பி 1810

பார்க் டெளவுன் கந்தர்கோட்டம், ஏகாம்பரேஸ்வரர் கோவில், மிகத் தொன்மையான ரேணுகா பரமேஸ்வரி கோவில் என ப்ராட்வே மிளிர்வதைக் காண்க.

இன்றும் ஜார்ஜ் டவுனில் பழமை வாசனையும் வியாபாரத்தின், சாலையோர விற்பனையின் அழகைக் கடல் காற்றுடன்  ரசிக்க முடியும்.

அதே போல் தலைமுறை தலைமுறையாகச் சாலையிலேயே வாழ்வியலின் அர்த்தம் காணும் பல குடும்பங்களும் இங்குண்டு.

ராமலிங்க வள்ளலார், பாம்பன் ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி தேசகர் ஆகிய மஹான்கள் புழங்கிய இடம் இந்த ஜார்ஜ் டவுன்.

வள்ளலார் முதன்முதலில் பேசிய கட்டிடமும், தெய்வமணி மாலை பாடிய கந்தர்கோட்டமும் அக்கால வரலாறு கூறுவன.

சுதேசமித்ரனுக்கு மஹாகவி பாரதியார் ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சியையும், வீர சிவாஜி வழிபட்ட [கி.பி 1615] காளிகாம்பாளை அவர் விளித்துப் பாடியதையும், வீணை மாமேதை தனம்மாளின் கச்சேரிகளையும், அவரது பேத்தி பரத மாமேதை பால சரஸ்வதியின் சலங்கை ஒலியையும் இன்னும் ஜார்ஜ் டவுன் வைத்துக் கொண்டிருக்கிறது.

மினி மும்பை, தென்னகத்தின் மும்பை என்றெல்லாம் புகழப்படும் செளக்கார் பேட்டைக்குள் போய்விட்டால் வடதேசமே இங்கு வந்தது போல் உள்ளது.

அப்பப்பா!!! எத்தனை எத்தனை வகை வியாபாரங்கள்? மிகக் குறுகலான சந்துகள்? ஒவ்வொரு சந்துக்கும் ஒரு கதை இருக்கும்! இவை ஜார்ஜ் டவுனின் பெருமை.

கடலில் சில தூரத்துக்கு அப்பால் நிற்கும் கப்பல்களுக்குப் படகுகள் மூலம் துபாஷிகள் சென்று வியாபாரிகளை ஜார்ஜ் டவுனுக்கே அழைத்து வருவர், பின்னர் மதராஸ் கோட்டைக்குள் போவர்.

ஜார்ஜ் டவுனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னைன் கம்பீரமான சிலை துர்நாற்றத்தின் இடையில் இன்றும் நிற்கிறது, அருகில் பழமையான பூக்கடைக் காவலர் நிலையம், பச்சையப்பன் பள்ளி மாளிகை, பைபிள் சொஸைட்டி, பர்மா பஜார், ஈவ்னிங் பஜார் என ஒரே வியாபார மயம் தான்.

மிகப் பசுமையான காய்கறிகள், கனிகள், தானியங்கள், கருவாடு வகைகள், பூக்கள், ஐஸ் மோர், பழங்காலப் பலகார வகைகள், துணிகள், கீரைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், குறளகம் - காதி க்ராஃப்ட் மற்றும் பல மிக நியாயமான பேரம்பேசக்கூடிய விலையில் இன்றும் ப்ராட்வேயில் கிடைக்கும்.

ஜார்ஜ் டவுனின் மற்றொரு பெருமை இங்குள்ள மிகத் தொன்மையான வீடுகள். மதராஸில் மிக அதிநவீன அடுக்ககங்கள் ஏராளம் இன்று உள்ளன.கேட் வே இல்லங்களும், வில்லாக்களும் பெருகி வரும் அதே வேளையில் மதராஸின் ஜார்ஜ் டவுன் போன்ற பகுதிகள் சுமார் 300 ஆண்டுகள் பழமைமிக்க வீடுகள் இன்றும் மாறாமல் உள.

ஸ்பென்சரில் மால் ஷாப்பிங் செய்வதை விட ப்ராட்வே - ஜார்ஜ் டவுனில் கடல்காற்று வாங்கியபடியே பொருள்கள் வாங்கும் சுகமோ சுகம் தான்!