புனித ஜார்ஜ் கோட்டை என்ற மதராஸ்

மதராஸ் வரலாற்றை எழுதி முடிக்கும் தருவாயில் அதன் கோட்டையின் சரிதத்தை எழுத முற்படுகிறேன்.காரணம் காலம்!
மிக ஆழ்ந்து கவனிக்க வேண்டிய, படித்து அறிய வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
தரமான நூல்களைக் கொண்டு ஆய்வுகள் அமைய வேண்டும் அல்லவா?
இதன் இடையில் கோட்டையை இரு முறை சென்று மனமாரக் காலாரச் சுற்றிப் பார்த்தேன்.
அருங்காட்சியகத்தில் மிக கவனமாகப் பார்க்க வேண்டிய பொருள்கள் பல உள்ளன.
இவற்றின் இடையில் எதை கூறுவது, எதைத் தவிர்ப்பது என்ற குழப்பங்கள்....
ஒருவாறு கோட்டையை எப்படிச் சொற்கள் கொண்டு கட்டித் தருவது என்று இறையருளால் முடிவாகி இன்று [9.3.2016] அன்று எழுத முற்பட்டேன்.
***
கோட்டையின் சரிதத்தைக் காணும் முன் பல உண்மைகளை அறிவது எளிதான புரிதலுக்குத் துணை செய்யும்.
அவற்றை முதலில் முன் வைக்கிறேன்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் என்று அறிமுகம் செய்யும் போது மேலோட்டமான மிக முக்கியமான குறிப்புகளை மட்டும் முன் வைக்கும் முறை போலவே ஜார்ஜ் கோட்டையை மாணாக்கர்-மக்கள் பார்வையில் எளிமையாக முன் வைக்கிறேன்.

கோட்டையின் முன்னூறு ஆண்டு கால சரிதம் என்பது மிகவும் ஆழமானது.அவற்றில் பல மாணாக்கருக்கும் மக்களுக்கும் இப்போது தேவையில்லை என்று உணர்ந்தேன்.

பலாப்பழம் போல் இருக்கும் வரலாற்றை அரிந்து சுளை எடுத்து எளிதில் சுவைக்க உதவும் நோக்கில் இப்பகுதி அமைகிறது.

* மிகப் பழங்காலத்தில் கடல் மூலம் பல தேசங்களுடன் வணிகம் செய்த தமிழர்கள் கி.பி 12ஆம் நூற்றாண்டிற்கு மேல் சற்று வணிகம் செய்வதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.

* ஆனால் கி.பி 14ஆம் நூற்றாண்டில் மத்தியில் இருந்தே ஐரோப்பியரின் வருகை இருந்துள்ள ஆதாரங்கள் உள.அதற்குக் காரணம் வாஸ்கோடிகாமா இந்தியாவிற்குக் கடல் வழித் தடத்தைக் கண்டு பிடித்ததே ஆகும்.

* ஆனால் அரேபியர்களும் சீனர்களும் இலங்கையும் ஏதோ ஒரு வகையில் கடல் வழி வாணிபத்தைத் தொடர்ந்தன.

* போர்த்துகீஸியர் தாமஸின் கல்லறையைத் தேடியே அதீத ஆர்வத்தில் அக்கால மயிலைத் துறைமுகம் கரை சேர்ந்துள்ளனர்.

* அதன் பின் ஐரோப்பியாவில் மீட்டுருவாக்கம் ஆன நவீன கிறிஸ்துவத்தைப் பரப்பும் நோக்குடன் சமயப் பணியாளர்கள் வர ஆரம்பித்தனர்.

* முதன்முதலில் அதிகார பூர்வமாகத் தஞ்சை நாயக்கரின் அனுமதியுடன் கோட்டை அமைத்தவர் டேனிஷ் வணிகரே.தரங்கம்பாடியில் அவர்களின் கோட்டை இன்றும் காலத்தின் சரிதத்தை விளக்கிக் கொண்டு நிற்கிறது.

* அதன்பின் சென்னைக்கு வடக்கே ஆந்திரா ஓரம் பழவேற்காட்டில் டச் வணிகம் கோட்டைக் கொத்தளத்துடன் தான் அமைந்தது.

* அதன்பின் சாந்தோமில் போர்த்துகீஸியரின் வணிகம் - மத மாற்றப் பணி நங்கூரமிட்டு வளர்ந்ததுள்ளது.

* அதையடுத்து காரைக்கால் - பாண்டிச்சேரியில் ஃப்ரெஞ்சு வருகைக்கு அரசர்கள் தலை அசைத்தனர்.

* கடைசியில் கடைக்குட்டியாக வந்தனர் ஆங்கிலேயர்.....ஆட்டிப்படைத்துச் சென்றும் விட்டனர்.

கி.பி 15ஆம் நூற்றாண்டில் நாம் கற்பனையில் வாழ்ந்தால் பின்வரும் நிஜக்கதை நன்கு புரியும்.


நாயக்க வம்சம்
கி.பி 1565
தென் தேசத்தில் அரசாண்ட முகலாயச் சிறு அரசர்கள் பலர் ஒன்று கூடி, விஜயநகர நாயக்க மன்னனை வீழ்த்தினர்.விஜய நகரத்தின் அரச ப்ரதிநிதியாகப் பல நாயக்க அரசர்கள் தென்னகத்தில் ஆண்டனர்.

தோற்றுப்போன விஜயநகர மன்னன் வடதமிழகத்தில் உள்ள சந்திரகிரியைத் தலைநகராக்கி ஆளமுற்பட்டார்.
அவரது ப்ரதிநிதியாக தாம்ரல வெங்கடாத்ரி நாயக்கர் இருந்தார்.
பழவேற்காடு - சாந்தோம் வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு அவரை அதிகாரியாக நியமித்தான் சந்திரகிரி அரசன்.
இவனது தம்பி ஐயப்பா நாயக்கன்.அவன் வாழ்ந்த இடம் தான் சென்னையில் ஐயப்பன் தங்கல்.
அவன் கடற்கரை ஓரத்துப் பாதுகாப்பைப் பொறுப்பேற்று கவனித்தான்.
இவர்களது தந்தை தான் சென்னப்ப நாயக்கன்.

இனி சற்று இங்கிலாந்துக்குப் போவோமா?
கி.பி 1600ஆம் ஆண்டில் அரசின் அனுமதி பெற்று, கிழக்கு இந்தியக் கம்பெனி ஆரம்பிக்கப் பட்டது.
அக்கம்பெனியின் வணிகர்கள் இந்தியாவில் முதலில் கி.பி 1608ல் வியாபாரம் செய்த ஊர் குஜராத்தில் உள்ள சூரத்.
அதன் பின் அவர்கள் ஆந்திராவில் உள்ள மசூலிப்பட்டிணத்திலும் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்பட்டனர்.
சில காலத்தில் சற்று தெற்கில் ஆர்மகான் என்ற ஊரிலும் வியாபாரத்தைத் தொடங்கினர்.

இவர்களுக்கு முன்னால் டச் வியாபாரிகள் கி.பி 1605லேயே பழவேற்காட்டில் [சென்னையின் வடபக்குதியில் உள்ள உப்பங்கழியுடன் கூடிய அழகிய கடற்கரை] கோட்டை எழுப்பிக் கொண்டு அருமையான வியாபாரம் மேற்கொண்டனர், சாந்தோமில் அதற்கு முன்பிருந்தே போர்த்துகீஸியர் தங்கி இருக்கின்றனர்.

இத்தனை ஊர்களில் ஆங்கிலேயர் வியாபாரம் செய்ய முற்பட்டது எதற்குத் தெரியுமா?
டச், இஸ்லாமியர் ஆகியோரின் கெடுபிடியில் இருந்து மீண்டு கொள்ளவே!
நம்மைத் தொடரும் நம் வினை போல் டச் எங்கு போனாலும் போட்டாபோட்டி போட்டது.
தளர்ந்தனர் ஆங்கிலேயர்! ஆந்திராவின் கோல்கொண்டாவில் இருந்த முஸ்லிம் நிஜாம்கள் இஷ்டப்படி வரி வசூலித்தும் அடக்கியும் மிரட்டியும் வந்த காலம் அது என்பதையும் கருத்தில் கொள்க.

சரி என்னென்ன வியாபாரம் செய்தனர்?
பருத்தித் துணிகள்
அழகிய நீலமும் சிவப்பும் இயற்கை வண்ணமாய்த் தோய்த்து நெய்த துணிகள்.
காரணம்: அந்த வேளையில் இங்கிலாந்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும் உயர்ரக ஆடைகள் வாங்க வழி இல்லை.

இண்டிகோ சாயம் எனப்படும் தாவரச் சாயம் ஆந்திராவில் அதிகம் கிடைத்த காரணத்தினாலேயே இவர்கள் ஆந்திரக்கடலோரம் வியாபாரம் மேற்கொண்டனர்.

பட்டும், பருத்தியும், மிளகும், சந்தனமும், மஸ்லின் துணி, வாசனை திரவியங்கள் மற்றும் வைரக்கற்களும் ஏற்றுமதி ஆயின என்று பழவேற்காடு டச் வியாபாரக் கைபீயம் [Accounts note book] - தமிழ் கலந்து உருதுச்சொல் பட்டியல் தருகிறது.

ஆந்திராவின் வியாபாரிகளான நாயுடு, நாயக்க மக்கள் தென், மேற்குத் தமிழகத்தின் பகுதிகளில் வந்து வாழ முற்பட்டது, தரமான பருத்தியை நாடியே! இப்போது புரிகிறதா ஏன் கோவையில் அதிகம் தெலுங்கு மக்கள் உள்ளனர் என்று?

கோட்டை எதற்கு?
வியாபார எதிரிகளை எதிர்த்தே கோட்டை!
கடல் கொள்ளையர்களை எதிர்த்தே கோட்டை!
மேலும் குடோன்கள், அலுவலர்களின் தங்கும் இடங்கள், பொழுது போக்கும் பகுதிகள் என அனைத்தும் COMPACT DISC போல் ஒரு கோட்டைக்குள் இருக்கும்.இன்று அவ்வாறு உள்ள கோட்டை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தான்!

மசூலிப்பட்டிணத்திலும் ஆர்மகானிலும் ஆங்கிலேயர் குடோன்களுடன் கூடிய சில பாதுகாப்பு கொண்ட எளிய கட்டிடங்களைக் கொண்டிருந்தனரே ஒழிய டச், ஃப்ரெஞ்ச் போலக் கோட்டையைக் கொள்ளவில்லை.

டச்சும், கோல்கொண்டா அரசனும் எப்போது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கும் சூழ்நிலையில் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியவில்லை என்று அவர்கள் எழுதிய கடிதங்கள் கூறும்.

இதற்கிடையில் நல்ல தரமான அதே வேளையில் மலிவான நிலம் வீடுகட்டக் கிடைக்குமா என்று தரகர்கள் மூலம் இன்று நாம் தேடுவதைப் போல் தான் ஆங்கிலேயரும் நம்பிக்கையான சிறந்த உள்ளூர் வியாபாரத் தரகர்கள் மூலம் பாதுகாப்பான - வியாபாரம் நிலைபெற முடியும் என்ற - மலிவான நிலப்பகுதி கிடைக்குமா என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.

அடுத்தவனைப் போல வாழ வேண்டும் என்று இக்கால மக்கள் ஆசையால் கடனாளி ஆகி அல்லல் படும் அதே கதி தான் ஆங்கிலேயருக்கும் ஏற்பட்டது! டச், ஃப்ரெஞ்ச், போர்த்துகீஸ், டேனிஷ் போல் கோட்டை கட்டிக் கொள்ள வேண்டும் என்ற கனவே அவர்களைப் பல ப்ரச்சனைக்கும் ஆளாக்கியது.

இரு நண்பர்களால் வந்த ஏகாதிபத்யம்...
ஃப்ரேன்ஸிஸ் டே, ஏன்ட்ரூ கோகன்

இவர்கள் கும்பினியின் பொறுப்பாளர்கள், நிர்வாஹிகள் [நம் தேசத்தில்], வியாபார உயர் அதிகாரிகள் என all in all அழகு ராஜாக்களாக மசூலிப்பட்டிணத்தில் வாழும் காலத்தில் தான் பேரி திம்மப்பா என்ற நியாமமும் நாணயமும் மிக்க துபாஷி - வியாபாரத் தரகர் மூலம் தக்க பாதுகாப்பான இடம் தேடினர்.

பேரி திம்மப்பாவுக்குச் சந்திரகிரி நாயக்க ராஜா, அவரது ப்ரதிநிதிகள் அனைவரும் நெருங்கிய பழக்கம்.

மேலும் திம்மப்பாவின் நியாயமான பேச்சைக் கேட்பவர் பூந்தமல்லி நாயக்கர் தாம்ரல வெங்கடாத்ரி.

இதனோடு சேர்த்து, பேரி திம்மப்பாவுக்கு வியாபார அபிவ்ருத்தியில் மிக ஆழ்ந்த ஈடுபாடு, அதற்கான தருணம், திட்டம் ஆகியன மனதில் ஓடிக் கொண்டே தான் இருந்தன.

பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் நடுவில் கூவம் ஆறு கடலில் சேரும் பகுதியில் உள்ள சதுப்பு நில மேட்டுப் பகுதி வீணாகவே இருந்தது.அதன் வடக்குப் பக்கத்தில் மிகச் சிறிய சென்னப்பட்டிணம் என்ற ஊர் இருந்தது.அதில் டச், போர்த்துகீஸியரின் வியாபாரத்தில் துணை செய்யும் பல தொழில் மக்கள் வாழ்ந்தனர் [நெசவாளர் - படகோட்டி]

சென்னப்பட்டிணம் ஆங்கிலேயருக்கு முன்பே இருந்த ஒரு ஊர் தான்.
அதே போல் அதற்கு அருகில் மதரஸாப் பள்ளி நிலம் ஒன்று இஸ்லாமிய அன்பர்களின் கையில் இருந்துள்ளது.
அப்பகுதியில் இருந்தே எளிதில் கப்பல்களுக்குப் படகுப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.
மதராஸ் என்ற பெயரிலேயே அப்பகுதி விளங்கியது.அதைக் கைக்கொள்ள பேரி திம்மப்பா திட்டம் போட்டார்.
டேவையும் கோகனையும் வரவேற்றார்.

மதராஸப் பட்டிணம் ஆங்கிலேயரால் உருவானதா?
மிக முக்கியமான ஆழமான சிந்திக்க வைக்கும் கேள்வி.
நீண்ட ஆய்வுக்குப் பின் என் விடை....
மதராஸப் பட்டிணம் என்பதை ஆங்கிலேயர் உருவாக்கியதே!
காரணம் அவரது வருகைக்கு முன்பே சென்னப் பட்டிணத்தின் அருகில் உள்ள சதுப்புநிலத்தை பேரி திம்மப்பா ஆங்கிலேயருக்கு வியாபார வாடகைக்கு விட அரசன் மூலம் சாதுர்யமாக அனுமதி பெற்றார்.
ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும் போதோ, கையகப் படுத்தும் போதோ சரியான ஆவணங்கள் தேவை அன்றோ?
அதற்காகவே அந்நிலம் மதராஸ் என்று பெயர் இடப்பெற்றுள்ளது என்பதே என் ஆய்வின் முடிபு.

இடத்தை பூர்வீக மீனவக்குடிகள் காலி செய்யும் முன் கடற்கரையில் இருந்த கோயில்கள் அப்புறப்படுத்தப் பட்டன.அவ்வாறு மாற்றிக் கட்டப்பட்டதே காளிகாம்பாள் கோயில்.அதே போல் மதரஸா நிலத்தில் உள்ள தொழுகை இடத்துக்கு ஈடாக ஜார்ஜ் டவுனில் ஒரு இடம் தரப்பட்டு அங்கே மசூதி கட்டப்பட்டு முன்னூறு ஆண்டுகள் இருந்துள்ளது.

ஏதோ ஒரு கண்காணாத தேசத்தில் வனாந்தரத்தில் தன் வியாபாரத்தை அபிவ்ருத்தி செய்ய எவனுமே அனுமதிக்க மாட்டான்.
அந்நிலையில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் அனுமதி பெற உரிய ஆவணம் தேவை என்ற போது, ஃப்ரேன்ஸிஸ் டே அவசியம் அதையெல்லாம் யோசித்தே இப்பெயரைச் சூட்டினார்.


கி.பி 22.8.1639 அன்று கையெழுத்தான முதல் ஆவணம் இன்று இல்லை.
ஆனால் அடுத்த ஆவணம் கி.பி 1640ல் கையெழுத்தானது, அதன் தங்கப்படிவம் இன்று லண்டனில் உள்ளதாம்.

கடற்கரை ஓரத்து மீனவர்களில் குறிப்பாக இஸ்லாமிய மக்களின் மதரஸா [அரபிப் பள்ளி] பள்ளிக்கான இடமாக நரி மேடு இருந்திருக்க வேண்டும்.அதை அம்மக்களிடம் தமக்குள்ள செல்வாக்கினால் வாங்கித் தந்துள்ளார் பேரி திம்மப்பா.அவ்விடத்தில் எழுந்த கோட்டைக்குள் அமைந்த சிறு குடியிருப்பு தான் மதராஸ்.

ஆவணம் சொல்வது என்ன?
நமது கடற்கரையில் மதராஸப் பட்டிணத்தில் ஆங்கிலேயர் வியாபாரம் செய்து கொள்ளலாம்.

நமக்கு மிகவும் மரியாதையும் அன்பும் காட்டியபடியாலே அவருக்குச் சில சலுகைகள் தரப்படுகின்றன.

அவர்கள் பொருட்களின் பாதுகாப்புக்காகக் கோட்டை எழுப்பிக் கொள்ளலாம்.

ஆண்டு ஒன்றுக்கு இட வாடகையாக 2000 பகோடாக்கள் செலுத்த வேண்டும்.

சுங்கவரி இல்லை, கம்பெனியின் வணிகத்தால் வரும் பணத்தில் பாதி நாயக்கருக்குச் செலுத்தப்பட வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பந்தம் மறுபரிசீலனைக்குப் பிறகு புதுப்பிக்கப் பட வேண்டும்.

தெலுங்கில் எழுதப்பட்டு துபாஷி பேரி திம்மப்பாவின் மேற்பார்வையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான இதுவே மதராஸின் பிறப்புச் சான்றிதழ் ஆகும்.

அதன்பின் டே அவர்கள் ஆர்மகானை விடுத்து, 6.2.1640 அன்று கிளம்பி 20.2..2016 அன்று தமக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு வந்தார்.
யூனிட்டி, ஈகிள் ஆகிய இரு மரக்கலங்களில் கும்பினி மதராஸில் கால்வைத்தது.

அப்போது கூவம் நதியும் எழுமூர் நதியும் [இன்று அது பக்கிங்ஹேம் கால்வாயுடன் சேர்ந்தாகி விட்டது] இருபுறமும் ஓட நரி மேடு என்ற மதரஸா நிலத்தில் கிழக்கு இந்தியக் கம்பெனி 1.3.1640 அன்று அடிக்கல் நாட்டிக் கோட்டை வேலையை ஆரம்பித்தது.கந்து வட்டிக்குப் பணம் வாங்கியே கோட்டை வேலையை ஆரம்பித்தனர். 27.1.1642ல் கோட்டை முக்கியமான கிழக்குச் சுவருடனும் இன்றுள்ள தலைமைச் செயலகத்தின் கட்டிடத்துடனும், சரக்கு அறைகள், சில வீடுகளுடனும் கும்பினிக்காரர்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

இங்கிலாந்தின் புனிதத் தந்தை ஜார்ஜின் பெயரால் ”புனித ஜார்ஜ் கோட்டை” என்றும், உள்ளே உருவான குடியிருப்பு ”மதராஸ்” என்றும் நாமகரணம் சூட்டப் பெற்றது.

அன்று கோட்டைக்குள் இருந்தவர்கள் யார்?
ஜான் ப்ரெளன், டே, கோகன், ஹம்ப்ரீ தாம்கின்ஸ், இரு குமாஸ்த்தாக்கள், ஒரு பீரங்கி வீரன், மரவேலை செய்யும் தச்சன், மருத்துவன், எடுபிடி ஆட்கள், வெடிமருந்து தயாரிக்கும் உள்ளூர் நாகப்பட்டன்.

மெஸாடியாஸிஸ் எனப்படும் இந்தோ - போர்த்துகீஸ் கலப்பு இன மக்களுக்குக் கோட்டைக்குள் இடம் தரப்பட்டது.

சாந்தோமில் இருந்து கோட்டைக்குள் வியாபாரம் பேச, போர்த்துகீஸ் அனுமதிக்கப் பட்டது.

ஆர்மகான், மசூலிப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் வர வாய்ப்பு தரப்பட்டது.

நம்மூர்க்காரர்கள்?

Sorry! not never for ever! - நமக்கு ஒதுக்கப்பட்ட இடம் தான் கருப்பர் நகரம்!

ஆனால் கும்பினியின் தேவையான உயர்ரகத் துணிகளுக்குச் சாயமிடுதல், நெய்தல், தையல் வேலை செய்தல், துவைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் சுமார் 300 குடும்பங்கள் கோட்டையின் சுவருக்கு வெளியின் குடியிருக்க அனுமதிக்கப்பட்டன.

கி.பி 1642ல் கோட்டை வடக்கு - தெற்கில் 108 கஜ தூரமும், கிழக்கு மேற்கில் 100 கஜ தூரமும் கட்டப்பட்டிருந்துள்ளது.

காலம் போகப் போக வரலாற்றின் பாதையில் மதராஸ் கோட்டை பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்து, இன்று தமிழகத் தலைமைச் செயலகமாக நிமிர்ந்து நிற்கிறது.

இன்றும் மாறாமல் பழமையுடன் இருக்கும் ஒரு பகுதி கிழக்குக் கோட்டைச் சுவர், வாயில், செயலகக் கட்டிடம்.....

இக்கோட்டைக்குள் இருந்தே மாபெரும் தேசத்தைக் கைக்கொண்டு ஆண்டனர் ஆங்கிலேயர்.

ஆனால் தன் கோட்டைக்கு எப்போது ஆபத்து வரும் என்றே கண்கொத்திப் பாம்பாக கவனத்துடன் இருந்தனர்.

லண்டன் மாநகரைக் கருத்தில் கொண்டு ஒரு ஊரை உருவாக்க ஆங்கிலேயர் திட்டம் இட்டுள்ளனர்.

அதற்கு முன் இவர்கள் தங்க, வாழ அடிப்படை ஏற்பாடுகளை பேரி திம்மப்பாவின் பணியாட்களும் நாயக்க மன்னனின் பணியாட்களும் சீராக அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால், இதையெல்லாம் மேற்கொண்ட டேவைக் கும்பினி வழக்குத் தொடுத்து அல்லல் உண்டாக்கியது.

இன்று கோட்டைக்குள் செல்லும் போது மனம் அக்காலத்துள் பயணிக்கும், சில பகுதிகள் சீரழிவதைக் காண்க, மக்களும் அரசும் அவற்றை மேலும் சீர் கெடாமல் பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்கு நன்மை தரும்!

இன்று ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழக அரசு செயல்படும் இடம் மிகுந்த பாதுகாப்பு உடையது.
கொடி மரத்தைக் கூடப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை!

கோட்டையின் கிழக்குப் பார்த்த சுவர் அழகாக உள்ளது, பீரங்கிகள் ஆங்காங்கே கடலை நோக்கி உள.

ஆனால் பல இடங்கள் புதர்கள் மண்டி உள்ளன.

உள்ளே தார் சாலை உள்ளது, இருபுறமும் நாம் போடும் குப்பைகள்....

அரசு அலுவலர்கள் புழங்கும் பகுதிகள், உணவகம், செராக்ஸ் கடைகள், பூக்கடைகள், சிற்றுண்டிச் சாலைகள், மிலிட்டரி ஷாப்பிங் எனப் பல விஷயங்கள் உள.

இராணுவத்தின், தொல்பொருளியல் துறையின் பல அலுவலகங்கள் உள்ளே உள்ளன.

பல ஆங்கிலேய அதிகாரிகள் வாழ்ந்த வீடுகள் கேட்பார் அற்று வீணாகி என்று வேண்டுமாயினும் இடியும் தன்மையில் உள்ளன.

ஆனால் சில வீடுகள், பெரிய கட்டிடங்கள், புனித மேரி சர்ச் ஆகியன நன்கு உள.

கோட்டையின் வடக்கு வாசல் வழியே போனால் இன்னும் பழமை மாறாத அக்காலக் குடும்பங்கள் இருக்கக் காண்க.

வாலாஜா வாயில் வழியே தான் அரசர்கள் வரவேற்கப் பட்டுள்ளனர்.

கோட்டை அருங்காட்சியகம் நன்கு கவனிக்கப் பட்ட நிலையில் உள்ளது.

ஒவ்வொரு வெள்ளியும், அரசு விடுமுறை தினங்களிலும் விடுமுறை.

காலை 10 மணிக்கே உள்ளே போகலாம்.

மிக்க பரிசோதனைக்குப் பின்னே கோட்டைக்குள் காவலர்கள் அனுமதிப்பர்.