கலாக்ஷேத்ரா

மதராஸின் மிக முக்கியமான இடங்களில் ஒன்று திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா.

சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன் தமிழகத்தின் தொன்மையான நாட்டியக்கலையான சதிராட்டம் ஒரு கேவலமான மதிப்பீட்டுக்குத் தள்ளப்பட்டது.அக்கலையைக் கற்றுக் கொள்ளும் சமூஹம் தரமான மதிப்பீட்டில் இருக்கவில்லை.இது கலையின் தவறல்ல.[இதைக் குறித்து ஸ்ரீமதி.ருக்மிணி அருண்டேல் கட்டுரைகளில் மிக விரிவாக விவரித்துள்ளோம்]

இன்று உலகம் போற்றும் கலையாக, பாரத தேசத்தின் செவ்வியல் நடனமாக அச்சதிராட்டாத்தைப் புணர் ஜன்மம் எட்டுக்க வைத்தார் ஸ்ரீமதி.ருக்மிணிதேவி அருண்டேல்.அவரால் தான் இன்றைய பரத நாட்டியம் பரிணமித்து உலகம் முழுவதும் பல கலைஞர்களையும், ரசிகர்களையும் கொண்டு உள்ளது.

கோயிலுக்குள் முடங்கிய கலையை, குறிப்பிட்ட பெண்கள் மட்டும் கையாண்ட கலையை சமூஹத்தின் பார்வையில் அனைவருக்கும் பொதுவாக்கி, அதன் உண்மையான மரியாதைக்கு வித்திட்டவர் ஸ்ரீமதி ருக்மிணிதேவி.

மதுரையில் மிகக் கட்டுப்பாடான குடும்பச் சூழலில் பிறந்த அவர் மதராஸில் ஆஸ்த்ரேலிய மருத்துவர், அன்னிபெசண்டின் தோழர், தியோஸோஃபிகல் அமைப்பின் மூத்த உறுப்பினரான Dr.அருண்டேலை விவாஹம் செய்தார்.

கணவரின் உறுதுணையுடன் ஒரு பெண் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ருக்மிணி மிக உயர்ந்த சிறந்த சரியான உதாரணம்.

கோயிலில் தேவதாஸிகளின் கையில் இருந்த சதிராட்டத்தை மிக தைரியமாக, பல எதிர்ப்புகளுடன் கற்றார், அதை மீட்டுருவாக்கம் செய்தார், உலக அரங்கில் மிக்க எதிர்ப்புகளுடனும் அவபேச்சுக்களுடனும் பரவச் செய்து மிக உயர்ந்த வெற்றியும் கண்டார்.

பரதக் கலையின் இசைக் கலையின் நுட்பத்தை மக்கள் முன் கொணர அதற்குக் கல்வித் தகுதியை உருவாக்கினார்.இரு கலைகளையும் பட்டப் படிப்பாக வடிவமைத்தார்.மிக உயர்ந்த இசை-ஆடல் மாமேதைகளைக் கொண்டு தன் கலைக் கழகத்தை ஆரம்பித்தார்.அதுவே இன்று கலாக்ஷேத்ராவாக எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கி வருகிறது.

கி.பி 1936ல் இசை அம்மையார் உருவாக்கினார்.

இத்தம்பதியினர் மூலம் தான் உலகப் புகழ் பெற்ற குழந்தைக் கல்வி அறிஞர் Dr.மரியா மாண்டிசொரி அம்மையாரும் அவரது மகனும் கி.பி 1936ல் பாரதம் வந்தனர், அடையாற்றில் தங்கினர், கல்விப் பணியாற்றினர்.

கலாக்ஷேத்ராவில் இன்று பள்ளிக்கூடமும் உண்டு, பாரம்பரிய நெசவுக் கூடமும், அச்சுத் தொழிலும் உண்டு.

இங்கு பயில வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை!

ஆனால் 2001 - 2007 வரை மதராஸில் கலாக்ஷேத்ரத்தின் அருகில் வாழும், அதன் கலைப் படைப்புக்களைக் காணும் பாக்கியம் கிடைத்தது.

மாண்டிசொரிக் கல்விப் பயிற்சி ஆனபின் பல நுட்பங்களை இங்குள்ள மாதிரிப் பள்ளி மூலமே கற்றேன்.

உலக மாண்டிசொரிக் கல்வியாளர்களின் கருத்தரங்கத்தில் 2009ல் கலந்து கொண்டதும் இவ்விடத்தே தான்.

இன்று எங்கள் கல்வி நிறுவனங்கள் கலாக்ஷேத்ரத்தின் பல உட்கூறுகளை மாதிரியாகக் கொண்டு உள்ளன.

உலகின் பார்வையை மிக உயர்ந்த இசைக்கும் நடனத்துக்கும் திருப்பிய ஸ்ரீமதி ருக்மிணி தேவிக்கு வணக்கம், அதற்கு இடம் கொடுத்த மதராஸுக்கு வணக்கம்!