பாண்டிய நாட்டு மாமல்லபுரம் - கழுகுமலை

கி.பி 6 - 10 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் மலைப்பாறைகளைக் குடைந்து கற்கோயில்கள் உருவாக்கினர்.

அவற்றையே குடை வரைக் கோயில் என்போம்.

வரை - மலை - மலைக் குடைந்து செய்த கோயில்.

அதே கால கட்டத்தில் பாண்டியர்களும் இக்கலையைக் கையாண்டனர்.பாண்டிய தேசம் முழுவதும் பல ஊர்களில் உள்ள சமணப் பள்ளிகள் இதற்குச் சான்று.

மதுரைத் திருப்பரம்குன்றம் குடை வரைக் கோயிலாகும்.

தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டிக்கு அருகில் உள்ளது கழுகுமலை.

இன்று இம்மலை புகழ் பெற்ற முருகன் கோயில்.அக்கோயில் கி.பி 14ஆம் நூற்றாண்டில் உருவானது.

இவ்வூரில் தான் மிகப் பெரிய அளவிலான ஆதிகால சுடுகாடு, முன்னோர் புதைகுழிகள், முதுமக்கள் தாழிகள் அகழ்வாய்வில் கண்டு எடுக்கப்பட்டன.

இவ்வூர் முருகனுக்குக் கழுகாச்சல மூர்த்தி என்று பெயர்.ஆறு கைகளுடன் மயில் மீது அமர்ந்து இவர் காட்சி தருகிறார்.

கோயிலின் ஒரு பகுதியாய் மிக ப்ரம்மாண்ட குன்று உள்ளது.அதில் தான் பாண்டியர் தம் கைவண்ணத்தைக் கல் ஓவியமாக்கி உள்ளனர்.

மாமல்லபுரம் சிற்பங்கள் உருவான அதே காலத்தில் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் நின்ற சீர் நெடுமாறன் [சம்பந்தரால் சைவ மதத்துக்கு மாறியவன்] இதை உருவாக்கி இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இம்மலை மிக மிக அருமையான சமணக் கோயில் தான்.பின்னர் தான் அதில் சிவனுக்குக் கோயில் செய்யப்படுவதைக் காண்கிறோம்.

நூற்றுக்கும் மேற்பட்ட சமண முனிவர்களின் சிலைகள், சமண தெய்வங்களின் சிலைகள்  ஆகியன உள்ளன.அவ்விடம் மதுரைக்கு அடுத்து பாண்டிய நாட்டின் மிக முக்கியமான சமண மதத்தின் செயலகமாக இருந்துள்ளது.

பாண்டியன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறிய வேளை பல சமண குகைக்கோயில்கள் கைவிடப்பட்டன, மாற்றப்பட்டன.பல குடை வரைக் கோயில்கள் எடுக்கப்பட்டன.

வெட்டுவான் கோயில் - [அதாவது மலையை வெட்டிக் கோயில் செய்வான் உருவாக்கிய கோயில்] என்றே இன்றும் மக்கள் அழைப்பர்.

வெட்டுவான் கோயில் முழுமையடையவில்லை.ஆனால் மாமல்லபுரத்தை விட சிற்பங்கள் மிக நுணுக்கம் கொண்டவை.மாமல்லபுரத்தில் சிலைகள் கடற்காற்றினால் அரிக்கப்படுவதைக் காண்கிறோம்.

இக்கோயில் 7.5 அடி உயரம் உள்ள பாறையால் உருவானது.மூலஸ்தானம்,விமானம், திக் தெய்வங்கள், ப்ரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சிவன்பார்வதி சிலைகள் ஆகியன மிக மிக அழகானவை.

அலங்காரக் கொடுங்கைகள் பல உள்ளன.

கோயிலைச் சுற்றிப் பல வட்டெழுத்துத் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.

இவ்வூரில் வாழ்ந்த வேளாளர், குயவர், தச்சர், நெசவாளர், வாணிகர் என அனைத்து மக்களும் சமணப்பள்ளிக்கு நன்கொடை அளித்ததைக் கல்வெட்டுகள் கூறும்.

ஏனாதி, எட்டி, காவிதி ஆகிய பாண்டிய கால விருதுகளின் பெயர்கள் அவற்றில் உள்ளன.

சிந்தாந்தர் மற்றும் குணசாகர பட்டர் ஆகிய இரு சமண குருமார்கள் இவ்விடத்தில் இருந்துள்ளனர்.

நூறு ஆண்டுகள் பழமைமிக்க பெரிய கத்தோலிக்க தேவாலயமும் இவ்வூரில் உள்ளது.

இவ்வூர் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் கொண்டது.

பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நல்ல உறவு இருந்த நிலையில் பல்லவ சிற்பிகள் இங்கு வந்து இப்பணியைச் செய்திருக்க வேண்டும்.ஆனால் நரசிம்ம வர்மன் காலத்தில் மிகப் பெரிய போர் வந்த போது சில காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாமல் இருந்து விட்டன.எஞ்சிய இக்கலைக்கோயிலை,சமணப்பள்ளியைக் காப்பது நம் கடமை.

இது நம் சொத்தல்லவா?