ஆடி 18ஆம் நாளில் காவிரியை வணங்கும் போது ஏழு கற்களையோ, ஏழு பிடி மண் உருண்டைகளையோ வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் மலர்கள் தாலிச்சரடு அணிவித்து வணங்குவது மரபு.
இவை ஏழு புண்ணிய நதிகள், ஏழு கன்னிமார் [மண்ணின் தாதுக்கள்], ஏழு சப்த மாதர்கள் [துர்கையின் பரிவாரங்கள்] எனக் கொள்க.
மண்ணின் தாதுக்கள் recycle ஆகித் தாவரத்துள் முறையே சென்று பயன் விளைவிக்க இவை கன்னிமார் என்று பூஜிக்கப்படுவன.
மற்றொரு ஆராய்ச்சியில் இவை பூம்புகாரில் வாழ்ந்த ஏழு உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பத்தினிப் பெண்களைக் குறிப்பதாகக் கூறுவர்.
பாண்டியன் முன் கண்ணகியார் தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபனம் செய்தார்.பாண்டியன் மாண்டான்.அதன் பின் அவன் அரசி முன் கண்ணகியார் பூம்புகாரில் வாழ்ந்து தனக்கு முன்னோடிகளாய் உள்ள எழுவரைக் குறிப்பிடுகிறார்.
1. காவிரி கடலில் சேரும் சங்கமத்துறையில் சில பெண்கள் கூடி மணலில் விளையாடினர்.அதில் ஒருத்தி தன் காதலனின் முகத்தை வடித்தாள், அதில் லயித்தாள்.அப்போது காவிரியின் வெள்ளம் அதிகரிக்க அம்மணல் முகம் அழியும் படி வர, அவள் அதை அணைத்துக் கொண்டு அதைப் பாதுகாத்துத் தன் அன்பை வெளிப்படுத்தினாள்.[எல்லாவற்றி லும் தன் தலைவனைக் காணல்]
2. தன் கணவன் கடல் கடந்து வணிகம் செய்யக் கப்பலில் செல்லும் போதெல்லாம், ஊரில் உள்ள ஒருவன் தன்னை நோட்டம் விடுவதை உணர்ந்த ஒரு பெண் அவன் வெறுக்கும் வண்ணம் தன் உடல், உடை, பாவனையை மாற்றி அவன் மனதில் இருந்து தன்னைப் பற்றிய எண்னத்தை விலக்கினாள்.
3. கடல் கடந்து வணிகம் சென்ற தன் கணவன் மீண்டு வரும் வரைத் தன் மனதைக் கல்லாக்கி, புலன் இச்சைகளை வென்று வாழ்ந்தாள் ஒருத்தி.
4. இரு தோழிகள்.இருவரும் பிற்காலத்தில் சம்பந்திகள் ஆக வேண்டும் என்று உறுதி செய்தனர்.ஆனால் பெண் முன் பிறந்து ஆண் மிக மிகப் பின் பிறந்தது.இதனால் வருந்தினர்.பெண் வளரும் போது இதை அறிந்து, அக்குழந்தையைத் தன் குழந்தை போல் ஏற்றாள். [கணவன் மனைவிக்கு அன்பால் முதல் மகன் தான்]
5. தன்னொடு பிறந்த பெண்களில் ஒருத்தியைத் தன் மாமனுக்குக் கல்யாணம் செய்து தருவதாக வாக்களித்து, அம்மாமனை வீட்டில் பணியாள் போல் நடத்தினான் ஒரு வணிகன்.ஆனால் பணத்தாசையால் தன் மகள்களைப் பணக்காரர்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திட, ஒருத்தி அதைப் பொறாமல் தன் மாமனைக் கல்யாணம் செய்து கொண்டு ஊரார் முன் உண்மை உரைத்தாள்.வன்னிமரத்தையும் கிணற்றையும் சாட்சியாய்க் கூறினாள்.மரம் - நீர் போல் தம் இல்லறம் அனைவருக்கும் அறம் செய்யும் என்பதன் குறியீடு.
6. ஒருத்தி தன் சக கிழத்தியின் [கணவனின் இரண்டாம் மனைவி - polygamy] குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அது தவறிக் கிணற்றில் விழ, தன் கவனக்குறைவுக்கு ஏற்ற வினைப்பயனை அனுபவிக்கத் தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு, தெய்வ அருளால் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டாள்.
7. மாமன்னர் கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியார்.இவள் சேர இளவரசன் ஆட்டனத்திக் காதலித்து மணந்தாள்.தம்பதிகள் ஆடி 18 கொண்டாடப் பூம்புகார் வந்தனர்.கழார் துறை எனப்படும் சிறப்பு மிக்கக் காவிரிக் கடைமடைப் பகுதியில் புண்ணிய தீர்த்தம் ஆடினர், காவிரியை வணங்கினர்.அப்போது ஆட்டனத்தி புது வெள்ளத்தில் நீந்தி மகிழ வெள்ளம் அவனை அடித்துச் செல்ல, ஊரே கூடி அழ, வீரர்கள் தேட, ஆதிமந்தி கரையோரம் ஓட, இறுதியில் மருதி என்ற மீனவப் பெண் அவனைக் காவிரி கடலுடன் சேரும் சங்கமத்துறையில் உயிருடன் மீட்டு அவள் உயிர் விட்டாள்.அவளுக்கு மானியமாக மருதியூர் கரிகாலனால் தரப்பட்டது.
மேல் கண்ட இப்பெண்களைக் கண்ணகியார் மிகப் போற்றி, அவர்தம் ஊரில் தாம் வாழ்வதையும் அவர்தம் வழியில் உயர் ஒழுக்கம் தன்னைக் கடைப்பிடிப்பதையும் அவர் சமூஹத்துக்கு உணர்த்துகிறார்.
செல்வம் புரளும் சமூஹத்தில் தனிமனித ஒழுக்கத்தை மீண்டும் இளங்கோ இதன் மூலம் வலியுறுத்துகிறார்.
ஆடி 18 அன்று புகார்ப்பதிப் பத்தினிப் பெண்டிர் எழுவரை வணங்குக.